Published : 13 Jan 2020 14:28 pm

Updated : 13 Jan 2020 14:28 pm

 

Published : 13 Jan 2020 02:28 PM
Last Updated : 13 Jan 2020 02:28 PM

பட்டும் தங்கம் போலத்தான்! - பச்சையப்பாஸ் சில்க்ஸின் வெற்றி ரகசியம்

pachaiappa-s-silks

ஜெ. சரவணன்
saravanan.j@hindutamil.co.in

இன்றைய சூழலில் என்னதான் எல்லா பொருட்களையும் இ-காமர்ஸில் ஆர்டர் செய்தாலும் சில பொருட்களில் மட்டும் மக்கள் இன்னமும் பாரம்பரியத்தை மறக்கவுமில்லை மாற்றவுமில்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் காஞ்சிபுரம் உலக அளவில் பட்டுக்கு பிரசித்தி பெற்ற நகரம். காஞ்சிப் பட்டு உடுத்த ஆசைப்படாத பெண்கள் இருக்க முடியாது.

அப்படிப்பட்ட பட்டுத் தொழிலில் நான்கு தலைமுறையைக் கடந்து இன்றும் அதே தரம், நம்பிக்கையுடன் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது பச்சையப்பாஸ் சில்க்ஸ். 1920 காலகட்டத்தில் எம்.வி.எம். பச்சையப்ப முதலியார் கணபதி விலாஸ் என்ற பெயரில் நடத்திவந்த பட்டுத்தொழிலை 1926-ல் பச்சையப்பாஸ் சில்க்ஸ் என்ற பெயரில் சொந்த கட்டிடம் அமைத்து ஆரம்பித்தார். அந்த ஸ்தாபனம்தான் இன்று ஆலமரமாகி சென்னை, வேலூர் என கிளைகளைப் பரப்பி விரிவடைந்திருக்கிறது.

இன்னும் ஆறு ஆண்டுகளில் நூறாண்டு காணப்போகும் பச்சையப் பாஸ் சில்க்ஸின் வெற்றி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள காஞ்சிபுரத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கிளைக்குச் சென்றோம். தாத்தா, தந்தைக்குப் பிறகு சகோதரர்கள் சுந்தர் கணேஷும், பச்சையப்பன் பிரபுவும் இந்த ஸ்தாபனத்தை பல ஆண்டுகளாக வளர்ச்சிப் பாதையை நோக்கி எடுத்துவருகிறார்கள். அவர்களிடம் பச்சையப்பாஸ் சில்க்ஸின் வெற்றிக்கதையைக் கேட்டோம்.

“காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. பட்டுத் தொழிலில் போட்டி ரொம்பவே அதிகம். ஆனால், எல்லாவற்றையும் கடந்து பச்சையப்பாஸ் நூறாண்டுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே காரணம்.

முக்கியமாக லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு மூலப் பொருட்களையும் சரியான நபர்களிடமிருந்து சரியான விலையில் வாங்கும்போது குறைந்த விலையில் வாங்க முடிகிறது. அதேசமயம் மூலப் பொருட்களை வாங்கும்போது கை மேல் காசு கொடுத்துவிடுவதால், விலையை குறைத்து எங்களால் வாங்க முடிகிறது.

அந்த குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறோம். எனவே தரமான பட்டுப் புடவைகளை எங்களால் விலை குறைவாக வழங்க முடிகிறது.” என்றனர். பட்டுப் புடவை வாங்குவதில் பலருக்கும் குழப்பம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மக்களின் ரசனையும் விருப்பமும் காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. இவையெல்லா வற்றையும் கணித்து எப்படி வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துகிறீர்கள் என்று கேட்டோம். “முன்பெல்லாம் பட்டுப் புடவை மிகவும் கனமாக இருக்கும்.

ஆனால், இப்போதெல்லாம் கனமான புடவைகளைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியங்களினால் எடை குறைவான பட்டுப் புடவைகளைத் தயாரிக்க முடிகிறது. அதேபோல் டிசைனை பொறுத்தவரை பாரம்பரியமும், நவீனமும் கலந்த கலவையான தயாரிப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் கேட்கிற டிசைனையும் நாங்கள் தயார் செய்துகொடுக்கிறோம். வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து எல்லாம் வாடிக்கையாளர்கள் இங்கு வந்து வாங்கி செல்கிறார்கள். ஒருவர் 1952-ல் எங்களுடைய இதே கிளையில் புடவை வாங்கிய ரசீதை கொண்டுவந்து காட்டினார். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும், ஒருவரை மீண்டும் உங்களிடம் திரும்பவும் வரச் செய்வது நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்கிறார்கள் சகோதரர்கள்.

சுந்தர் கணேஷின் மகன் வசந்த்ராஜ் இங்கிலாந்தில் ரீடெய்ல் மார்க்கெட்டிங் பட்டம் படித்தவர். இங்கு டிசைன் ஸ்டூடியோ ஒன்றை நிறுவி புதிய புதிய டிசைன்களை முயற்சி செய்வதில் கவனம் செலுத்திவருகிறார். அவரிடம் பேசியபோது, “இப்போது வாடிக்கையாளர்கள் புதுவிதமான டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் டிசைனுக்கான வரவேற்பு என்பது எல்லா டிசைனுக்கும் ஒரே மாதிரி இருக்காது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, அவர்களிடம் உள்ள வரவேற்பு ஆகியவற்றைப் பொறுத்தே டிசைன்களைத் திட்டமிடுகிறோம்” என்றார். மற்றவர்களிடமிருந்து பச்சையப்பாஸ் சில்க்ஸ் தனித்தன்மையுடன் விளங்கக் குறைந்த விலையில் தரமான பட்டு கிடைக்கும் என்பது மட்டுமல்ல. இன்னொரு காரணமும் உண்டு. அது வெளிப்படைத்தன்மை.

“எங்கள் தயாரிப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பட்டுப் புடவைகள் வாங்குவதில் பலரும் ஏமாற்றப்படு வதாகச் செய்திகள் வருகின்றன. எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களும் வெளியே அசல் பட்டு தள்ளுபடி விலையில் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகக் கூறுவார்கள். இத்தகைய சூழலில், நம்முடைய தயாரிப்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். அதனால் எங்களுடைய தயாரிப்புகளில் என்ன வகை பட்டு, என்ன வகை ஜரிகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக விலை அட்டையிலேயே குறிப்பிட்டு விடுகிறோம்.

எது பியூர் சில்க், எது மிக்ஸட் சில்க், என்ன ஜரிகை என அனைத்துமே அச்சிடப்படும். பியூர் சில்க்கில் மத்திய அரசின் தரச்சான்று முத்திரை இருக்கும். அதற்கான சான்றிதழை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவும் வேண்டும். தரமான பியூர் சில்க் பட்டுப்புடவையை ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் தருவது மிகவும் கடினம். எனவே அசல் பட்டு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்று அறிமுகமில்லாத நபர்களிடம் மக்கள் ஏமாறக் கூடாது. அதற்கான விழிப்புணர்வையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவருகிறோம்” என்று உஷார் செய்தனர்.

வசந்த்ராஜ் கூறுகையில், “பட்டும் தங்கம் போலத்தான். தங்கத்தை எப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்துவாங்க விரும்ப மாட்டார்களோ, டிசைன் பார்த்து அதை கைகளில் எடுத்து அனுபவித்து அணிந்து பார்த்து வாங்குவார்களோ பட்டுப் புடவையும் அப்படித்தான். தங்கத்தைக் கூட அவசரத்தில் வாங்கிவிடலாம். ஆனால், பட்டுப்புடவைகளை அவசரத்தில் வாங்கிவிட முடியாது.

ஒவ்வொருவரின் ரசனை, அவர்களுடைய நிறம், அதற்கேற்ப அவர்கள் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தங்கத்தை எளிதில் சோதித்து பார்த்துவிடலாம். பட்டுப் புடவைகளைச் சோதிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே பட்டு விஷயத்தில் அனுபவம் ரொம்பவே முக்கியம். பார்த்த உடனேயெல்லாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால், பிக்சட் விலையில் மட்டுமே தரமான பட்டுப் புடவைகளை விற்க முடியும். விலை சற்று ஏறக் குறைய இருக்குமே தவிர, தள்ளுபடி விலையிலோ, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையிலோ விற்கவே முடியாது” என்றார். “பட்டுத் தயாரிப்பில் மாசுக்கட்டுப்பாடு விதிகள் கடுமையாகியிருப்பதால் அரசின் ‘சில்க் பார்க்’ பல ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதில் முதல் இரண்டு ஷெட்களை பச்சையப்பாஸ் அமைத்துள்ளது.

இன்னும் ஓராண்டில் அங்கு உற்பத்தி தொடங்கப்படலாம். இந்த சில்க் பார்க்கின் சிறப்பே, பட்டுத் தொழிலை முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக, மற்ற துறைகளைப் போலவே அனைத்துவிதமான பணியாளர் விதிமுறைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உருவாக்குவதுதான். இதன்மூலம் பட்டுத் தொழிலில் இருந்து விலகிச் செல்லும் தலைமுறையினர் மீண்டும் பட்டுத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட வழிவகுக்கும்” என்கிறார் பச்சையப்பன் பிரபு.

பச்சையப்பாஸ் சில்க்ஸின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் என்ன என்று கேட்டோம். “திருவண்ணாமலையில் இந்த 2020-ம் ஆண்டுக்குள் ஒரு ஃபேமிலி ஸ்டோரைத் தொடங்க உள்ளோம். பல இடங்களில் கிளைகள் இருந்தாலும், எல்லா கிளைகளிலும் எங்களுடைய தயாரிப்புகளுக்கு ஒரே விலைதான்.

காஞ்சிபுரத்தில் ஒரு விலை, சென்னையில் ஒரு விலை என்றில்லாமல், எங்கும் ஒரே விலையே இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தரமான பட்டுப் புடவைகளை வாங்கி மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கின்றனர் பச்சையப்பாஸ் சகோதரர்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பச்சையப்பாஸ் சில்க்ஸ்Pachaiappa's Silksபட்டுவெற்றி ரகசியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author