Published : 11 Jan 2020 01:09 PM
Last Updated : 11 Jan 2020 01:09 PM

பதமான பாரம்பரியப் பலகாரம்

க்ருஷ்ணி

எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் தேடுகிறோமே தவிர அதை நம் வாழ்க்கை முறையின் அங்கமாக மாற்ற யோசிக்கிறோம். பாரம்பரிய விளைபொருட்களை நம் முதன்மை உணவாக ஏற்கத் தயங்குகிறோம். அதுதான் நாற்பது வயதுக்குள்ளாகவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்புச் சேர்க்கை, தைராய்டு, கருப்பை சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றால் பலரையும் அவதிப்படச் செய்கிறது.

மாற்று வேண்டும் என நினைக்கும் பலரும் அந்த மாற்றுக்குத் தம்மை முழுமையாக ஒப்படைப்பதே இல்லை. என்றோ ஒரு நாள் சிறு தானிய உணவையும் மூலிகைக் கீரையையும் சாப்பிட்டுவிட்டு ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்தை வேண்டுகிறோம். அப்படியாவது மக்கள் சிறிது சிறிதாக இயற்கையின் பாதைக்குத் திரும்பட்டுமே என இயற்கை ஆர்வலர்கள் பலர் இயற்கை அங்காடிகளையும் சிறுதானிய உணவுக் கடைகளையும் நடத்துகிறார்கள். ‘பதம்’ சிறுதானிய பலகாரக் கடையும் அப்படி உருவானதுதான்.

நண்பர்கள் நால்வர்

‘நீர் உரிமை இயக்கம்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் ராஜ், காக்ஸ்டன், பத்து ஆண்டுகளாக இயற்கை அங்காடி நடத்திவரும் மதுரை கார்த்தி, பலகாரத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் சிவகாசி முத்துக்குமார் ஆகிய நால்வரின் உழைப்பில் மலர்ந்தது இந்த ‘பதம்’. சிறுதானிய வகைகளில் செய்யப்படும் பலகார வகைகளை விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளியையொட்டி ‘பதம்’ தொடங்கப்பட்டது. கார்த்தியும் முத்துக்குமாரும் பலகாரத் தயாரிப்பில் ஈடுபட, அவற்றைச் சந்தைப்படுத்தும் வேலையை பெருமாள் ராஜ், காக்ஸ்டன் இருவரும் பார்த்துக்கொள்கின்றனர்.

சீரக சம்பா ஜாங்கிரி, நாட்டுச் சோள பூந்தி, தினை மைசூர் பாகு, கம்பு தேங்காய் பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளோடு முடக்கத்தான் பக்கோடா, கேழ்வரகு மிக்ஸர், வரகு முறுக்குச் சேவு, குதிரைவாலி சீவல், சாமை மிளகுச் சேவு போன்ற கார வகைகளும் இவர்களிடம் கிடைக்கின்றன. அனைத்து வகை இனிப்பையும் பனங்கருப்பட்டியில் செய்கிறார்கள். “பணம் செலுத்தினால் ஐந்து நாட்களுக்குள் வீட்டு முகவரிக்குப் பலகாரத்தை அனுப்பிவைக்கிறோம்” என்கிறார் பெருமாள் ராஜ்.

செயற்கை மோகம்

செயற்கை மணமூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிற இனிப்பு வகைகளைவிட இவற்றின் விலை சற்றே கூடுதல் என்றாலும், உடலுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தராதவை. “பச்சை, சிவப்பு, மஞ்சள்னு கலர் கலரா சாப்பிட்டுப் பழகிட்ட மக்கள் பனங்கருப்பட்டியில செஞ்சு கறுப்பா இருக்கற இனிப்பை எப்படி விரும்புவாங்க? பெரியவங்களுக்கே இதெல்லாம் பிடிக்காத போது குழந்தைகள் என்ன செய்யும்? அவங்களும் கலர் கலரா வாங்கிச் சாப்பிடத்தானே விரும்புவாங்க?” எனக் கேட்கும் பெருமாள் ராஜ், சிறுதானிய உணவையோ பலகாரத்தையோ சாப்பிட்ட மறுநாளே உடலின் அனைத்துக் கேடுகளும் சரியாகிவிட வேண்டும் என நினைக்கும் மக்களின் மனநிலை குறித்துக் கவலைப்படுகிறார்.

“சிறுதானிய உணவு உடலுக்கு நல்லதுன்னு சொன்னா, இதைச் சாப்பிட்டா மூட்டு வலி சரியாகுமா, சர்க்கரை நோய் குணமாகுன்னு கேட்கிறாங்களே தவிர இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடணும்னு

பலருக்கும் தோன்றுவதேயில்லை. அவ்வளவு ஏன், நம்ம மண்ணுல விளையுற பெரிய அரிசியை யாரு சாப்பிடறாங்க? எல்லாரும் சன்ன ரக அரிசியைத்தானே விரும்புறோம். சிறுதானிய உணவை வியாதிக்கு மருந்தா பார்ப்பதை விட்டுட்டு அதையெல்லாம் நம்ம தினசரி உணவுல சேர்த்துக்கிட்டாலே போதும்” என்கிறார் அவர்.

சீருடலின் சிற்றுண்டி

சிறுதானிய பலகார வகைகளைச் ‘சீருடலின் சிற்றுண்டி’ எனக் குறிப்பிடும் ‘பதம்’ அமைப்பினர் இந்தத் தொழிலை முழுநேரமாகச் செய்வதில்லை. ஆளுக்கொரு வேலையைச் செய்துகொண்டே பலகார விற்பனையையும் கவனித்துவருகின்றனர். இயற்கை அங்காடிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் பரவலான கவனம் கிடைக்காத நிலையில் பலகாரக் கடையைத் திறப்பதில் நண்பர்கள் நால்வருக்கும் உடன்பாடில்லை. அதனால் மொத்தமாகச் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைக்கின்றனர். தீபாவளியின்போது மட்டும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் கடை திறந்தனர்.

பிளாஸ்டிக் தவிர்ப்பு

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதைத் தங்கள் குறிக்கோள்களில் ஒன்றாகக்கொண்டு செயல்படும் இவர்கள், பலகாரங்களை மந்தாரை இலைகளில் சுற்றி, பனையோலைப் பெட்டிகளில் அடைத்துத் தருகின்றனர். அதனாலேயே வெளியூர்களுக்கு நிறைய பலகாரங்களை இவர்களால் அனுப்ப முடிவதில்லை. பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்ததால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிகிறது.

“பனையோலைப் பெட்டிகளை திருச்செந்தூரிலிருந்து மொத்தமா வாங்குறோம். எங்களைப் பார்த்து நிறையப் பேர் இப்ப இதைப் பயன்படுத்துறாங்க. பனையோலைப் பெட்டியைத் தாம்பூலப்பையாகத் தருவதற்கும் சிலர் எங்ககிட்ட கேட்டாங்க. ஒன்றை வைத்து இன்னொரு நல்லது நடக்கறது மகிழ்ச்சிதானே” என்று சொல்கிறார் பெருமாள் ராஜ்.

பலகாரங்களைச் செய்வதற்கான கருப்பட்டியை வில்லிபுத்தூரிலிருந்தும், சிறுதானிய வகைகளை நாமக்கல் விவசாயி ஜனகனிடமிருந்தும் வாங்குகிறார்கள். விவசாயக் கூட்டமைப்புகளில் இருந்தும் சிறுதானிய வகைகளைக் கொள்முதல் செய்கின்றனர். வாய்ப்புக் கிடைக்கிற ஊர்களில் எல்லாம் சிறுதானிய உணவு முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்துகிறார்கள்.

பொதுச்சந்தைக்கு மாற்றாக இருக்கிற சிறுதானிய உணவுச் சந்தையை மக்களிடம் பரவலாகக் கொண்டுசெல்வது அவசியம் என நினைக்கும் இந்த நால்வர் குழு, ‘பதம்’ பலகாரக் கடையை அதற்கொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

‘பதம்’ தொடர்புக்கு: 99405 45122 / 98841 66631

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x