

ஆசாத்
மனச் சிதைவு நோய் என்பது மனத்தில் ஏற்படும் பாதிப்பு. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதை இது பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் ‘பாசிட்டிவ்’ அறிகுறிகள், ‘நெகடிவ்’ அறிகுறிகள் என விவரிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்
* நடத்தையில் மாறுதல்
* தனக்குத்தானே பேசுதல், சிரித்தல்
* மற்றவர்களுடன் பேசுவது குறைந்து தனிமையை நாடுதல்
* தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு
* குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற இயல்பாகச் செய்யும் செயல்களில் பாதிப்பு.
* தனியாக இருக்கும்போது காதில் குரல் கேட்பது.
* தேவையற்ற சந்தேக உணர்வு.
* தன்னைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்லச் சதி நடக்கிறது, தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என்ற எண்ணங்கள்.
* வீட்டைவிட்டு வெளியே செல்ல நினைப்பது.
நோய்க்கான காரணங்கள்
மனச் சிதைவுக்கு இதுதான் காரணம் என இன்னும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. பல்வேறுபட்ட விஷயங்களின் கலவையாலும் மனச் சிதைவு நோய் ஏற்படலாம்.
* மரபு வழி மூளை பாதிப்பு
* பிறந்தவுடன் குழந்தைகளின் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருத்தல்
* கர்ப்பத்தின் ஆரம்பக் காலத்து வைரஸ் தொற்று
* கஞ்சா, பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல்
* மன அழுத்தம்
* கடினமான குழந்தைப் பருவம்
* குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மன அழுத்தம், உளைச்சல் நோயின் தன்மை
* ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஐந்து பேரில், ஒருவருக்கு ஐந்து ஆண்டுக்குள் முழுமையாகக் குணமடைய வாய்ப்பு உள்ளது.
* மூவருக்கு நோய் திரும்ப வரச் சாத்தியம் உள்ளது.
* ஒருவருக்கு நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து நோய் அறிகுறிகள் காணப்படும்.
சிகிச்சைகள்
இது குணப்படுத்தக்கூடிய நோய். சரியான மருத்துவ முறைகளால் இந்நோயைக் குணமாக்கவோ கட்டுப்படுத்தவோ முடியும். ஆனால், மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்வது அவசியம்.
பொதுவாக, இந்நோய் உடையவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. இவர்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு உண்டாக்குவதைவிட, மற்றவர்களால் இவர்கள் பாதிக்கப் படுவதற்கான சாத்தியமே அதிகம்.
நன்றி: மனநல மருத்துவத்துறை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை