Published : 11 Jan 2020 10:06 AM
Last Updated : 11 Jan 2020 10:06 AM

மருத்துவம் தெளிவோம் 17: ‘ரோபோ’ அறுவை சிகிச்சை ஏன், எதற்கு, எப்படி?

டாக்டர் கு. கணேசன்

அலோபதி மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதில் அறுவை சிகிச்சைக்குத் தனி இடமுண்டு. காலங்காலமாக இருந்து வந்த ‘திறப்பு அறுவை சிகிச்சை’யை (Open surgery) அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் அறுவை சிகிச்சைகள் தற்போது நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானது, ‘நுண்துளை அறுவை சிகிச்சை’ (Pin hole surgery).

உடலைக் கீறாமல், வயிற்றைத் திறக்காமல், சில துளைகளை மட்டும் போட்டு, கேமராவும் மின்விளக்கும் இணைந்த ‘லேப்பராஸ்கோப்’ (Laparoscope) என்னும் கருவி கொண்டு மேற்கொள்ளப்படும் ‘லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை’ (Laparoscopic surgery) கடந்த கால் நூற்றாண்டு காலம் அலோபதி மருத்துவத்தில் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.

இதயம், குடல்வால், பித்தப்பை, கருப்பை, குடல், சிறுநீரகம், காது, மூக்கு, எலும்பு மூட்டு போன்ற உறுப்புக் கோளாறுகளுக்கு இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதில் ரத்த இழப்பு குறைவு; வலி மிகக் குறைவு. நோயாளி மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவு. அறுவைத் தழும்பு குறைவு. பாதுகாப்பானது. இத்தனை நன்மைகள் இதில் உள்ள காரணத்தால் மக்களிடம் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இப்போது இதையும் முந்திக்கொண்டுவிட்டது, ‘ரோபோ’ செய்யும் அறுவை சிகிச்சை.

‘ரோபோ’ அறுவை சிகிச்சை என்றால் என்ன?

நுண்துளை அறுவை சிகிச்சையைப் போன்றதுதான் ரோபோ அறுவை சிகிச்சையும். நுண் துளை அறுவை சிகிச்சையில் கருவிகளே அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் என்றாலும், அந்தக் கருவிகள் மருத்துவரின் கைகளில்தான் இருக்கும். ரோபோ அறுவை சிகிச்சையில் ‘ரோபோ’ என்னும் மனித இயந்திரத்தின் கைகளை இயக்குவதும் மருத்துவர்தான். ஆனால், நேரடியாக அந்தக் கைகளை அவர் இயக்குவதில்லை. ஒரு கணினி மூலம் இயக்குவார். இதுதான் நுண்துளை அறுவை சிகிச்சைக்கும் ரோபோ அறுவை சிகிச்சைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

‘ரோபோ’ அறுவை சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

ரோபோக்களில் பல வகை உண்டு. மருத்துவ ரோபோவுக்குக் கைகள் மட்டுமே உண்டு. தேவையைப் பொறுத்து ஒரு கை ரோபோவிலிருந்து நான்கு கைகளைக் கொண்ட ரோபோ வரை பலவித ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. கூடுதல் திறனுடனும் துல்லியத்துடனும் செயல்படக்கூடிய ரோபோக்கள் அண்மையில் வந்துள்ளன.

நோயாளியின் மேசைக்கு அருகில் ரோபோ இருக்கிறது. மயக்க மருத்துவர் நோயாளிக்கு மயக்கம் கொடுத்தபின், ‘ரோபோடிக்’ அறுவை மருத்துவர் நோயாளியின் சிகிச்சைக்குரிய உடல் பகுதியில் மிகச் சிறிய துளைகள் இட்டு, அவற்றுக்குள் 3 டி கேமரா, மின்விளக்கு, கத்தி, கத்தரிக்கோல், மின்சூட்டுக்கோல் உள்ளிட்ட நுண்கருவிகளை நுழைத்துவிடுகிறார். ரோபோவின் கைகளை அந்தக் கருவிகளுடன் வெளிப்பக்கத்தில் இணைத்துவிடுகிறார்.

கணினித் திரையில் நோயாளியின் உடல் பகுதிகள் முப்பரிமாணப் படங்களாகத் தெளிவாகத் தெரியும். நாம் ரிமோட் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்குவதுபோல் இதற்கென உள்ள ஒரு ரிமோட் மூலம் ரோபோவை மருத்துவர் இயக்குகிறார். ஒரு சிறிய வித்தியாசம், டிவி ரிமோட்டை ஒரு கையால் இயக்கலாம்; ரோபோ ரிமோட்டை இரண்டு கைகளால் இயக்க வேண்டும். கால்களாலும் இப்படி இயக்க வசதி உண்டு.

உறுப்புகளைப் பிரித்து வெட்டுவது, தையல் போடுவது, ரத்தக் குழாய்களைப் பிரித்து வெட்டுவது, இணைப்பது, ரத்தம், கழிவுகளை அகற்றுவது, அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட உறுப்பைச் சிறு சிறு பகுதிகளாக நசுக்கி, உறிஞ்சி வெளியில் எடுப்பது என அறுவை மருத்துவர் கட்டளைகளுக்கு ஏற்றவாறு ரோபோவின் கைகளால் துல்லியமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

‘ரோபோ’ அறுவை சிகிச்சையின் தனித்தன்மை என்ன?

திறப்புப் பொது அறுவை சிகிச்சைக்கு மயக்க மருத்துவர், அறுவை மருத்துவர், உதவி மருத்துவர்கள், செவிலியர், உதவிச் செவிலியர், துணைப் பணியாளர் எனப் பத்து பேர் கொண்ட ஒரு குழு தேவைப்படும். ஆனால், ரோபோ அறுவை சிகிச்சையின்போது ரோபோடிக் மருத்துவருக்கு உதவ ரோபோ இயந்திரத்துடன், மயக்க மருத்துவர், இரண்டு உதவி அறுவை மருத்துவர்கள், செவிலியர் என நால்வர் போதும்.

தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்தால் மனிதக் கைகளுக்குக் களைப்பு ஏற்படுவதைப் போல் ரோபோவின் கைகளுக்குக் களைப்பு ஏற்படாது; கைகள் நடுங்காது போன்றவை இதன் தனிச் சிறப்புகள். நெடுநேரம் பிடிக்கும் அறுவை சிகிச்சைகளைத் தயங்காமல் இதில் மேற்கொள்ள முடிகிறது.

இன்னொரு சிறப்புத் தன்மை என்னவென்றால், மருத்துவரின் கைகளுக்கு எட்டாத மிகச் சிறிய உடல் உறுப்பும் ரோபோவின் கைகளுக்கு எட்டும் அளவுக்கு அதன் மணிக்கட்டு வடிவம் அமைந்துள்ளது. எனவே, அந்தச் சிறு உறுப்புகளுக்குத் தேவையான சிகிச்சைகளையும் துல்லியமாக ரோபோவால் வழங்க முடியும்.

எந்த நோய்க்கு ரோபோ அறுவை சிகிச்சை கைகொடுக்கும்?

இரைப்பை, கல்லீரல், கணையம், குடல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வயிற்று நோய்களுக்கும் ரோபோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் நோய்களுக்கும் இது நல்ல பலன் தருகிறது. பலவிதப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளில் இதன் பங்கு இப்போது அதிகரித்துவருகிறது. கருப்பை அகற்றுதல், கருப்பைக் கட்டிகளை அகற்றுதல், கருக்குழாய் இணைப்பு போன்ற பெண்களுக்கான அறுவை சிகிச்சைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதய நோய்கள், எலும்பு நோய்கள், குழந்தை நோய்கள், காது-மூக்கு-தொண்டை நோய்கள், நரம்பியல் நோய்கள், தலை, கழுத்து நோய்கள் எனப் பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளிலும் பழைய அறுவை சிகிச்சை முறைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தற்போது ரோபோ அறுவை சிகிச்சை முந்திக்கொண்டு வருகிறது.

இதில் பயனாளிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

உடலில் மிகச் சிறிய கீறல் போட்டு, அதிநுட்பமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது. நுண்துளை அறுவை சிகிச்சைக் கருவிகளைவிட ரோபோ கருவிகளைப் பயன்படுத்துவது மிக எளிது. 3 டி படங்களின் உதவியால் உடலுறுப்புகளை மருத்துவர் சரியாகவும் துல்லியமாகவும் பார்த்து எளிதாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது. இதில் பயனாளிக்குக் குறைந்த அளவில் மயக்க மருந்து கொடுத்தால் போதும்.

திசுச் சேதம் மிகவும் குறைவு. ரத்த இழப்பு அவ்வளவாக இல்லாததால் நோயாளிக்கு ரத்தம் செலுத்த வேண்டிய அவசியமும் குறைவு. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் குறைந்த அளவு வலிதான் இருக்கும். அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான தழும்பும் குறைந்த அளவில்தான் இருக்கும். இதில் நோய்த்தொற்றுக்கான ஆபத்தும் குறைவு. மருத்துவமனையில் தங்கும் நாட்கள் மிகவும் குறைவு. விரைவிலேயே பணிக்குத் திரும்ப முடியும். இந்தக் காரணங்களால் ரோபோ அறுவை சிகிச்சை மிகுந்த பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள நவீன மருத்துவமனைகளில் ரோபோ அறுவை சிகிச்சை இப்போது பரவலாகிவருகிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x