Published : 10 Jan 2020 01:16 PM
Last Updated : 10 Jan 2020 01:16 PM

இங்கே நடப்பது மூன்று நாள் திருவிழா! - பாபு யோகேஸ்வரன் நேர்காணல்

சந்திப்பு: ஷங்கர்

பத்திரிகையாளர், வெற்றிகரமான டெலி சீரியல் வசனகர்த்தா, ஜெயம் ரவி நடித்த ‘தாஸ்’ படத்தின் இயக்குநர் என பாபு யோகேஸ்வரனுக்குப் பல அடையாளங்கள் உண்டு. தற்போது, விஜய் ஆண்டனி நடிப்பில் ‘தமிழரசன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பின் திரைக்குத் திரும்பியிருக்கும் அவரிடம் தமிழ் சினிமா அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து உரையாடியதிலிருந்து…

‘தாஸ்’ படத்துக்கும் தற்போது தயாராகியிருக்கும் ‘தமிழரசன்’ படத்துக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி. இந்த இடைவெளியில் திரையுலகில் நடந்திருக்கும் மாற்றங்களை அவதானிக்க முடிந்ததா?

அப்போது இருந்த நடிகக் கலைஞர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற துறைகள் சார்ந்து சிலர் இன்னும் நீடிக்கிறார்கள். ஆனால், அப்போது ஆதிக்கம் செலுத்திய நிறைய ஆளுமைகள், கலைஞர்கள் இப்போது இல்லை. அப்போதிருந்த வர்த்தகம் வேறு; வர்த்தகக் கட்டமைப்பு வேறு; பார்வையாளர்கள் வேறு. அன்று சினிமாவை, தொலைக்காட்சி காலி செய்துவிடும் என்ற பேச்சு இருந்தது.

இப்போது தொலைக்காட்சி வடிவத்தையும் பார்வையாளர்கள் கைவிடத் தொடங்கிவிட்டார்கள். பிரதான பொழுதுபோக்காக சினிமா இருந்த நிலை மாறிவிட்டது. அது தற்போது, பொழுதுபோக்கின் ஒருபகுதி மட்டுமே. திரையரங்கில் ஒரு சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட, ஒரு காட்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டால் கையில் பேசியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு சினிமாவுக்குச் செல்வது என்பதில் ஒரு கொண்டாட்ட மனோபாவமாக இருந்தது.

அந்த பூரிப்பான மனநிலை, திரையில் விரியும் முக்கியான காட்சிகள் தரும் அனுபவம், அவை கிளர்த்தும் உணர்ச்சிகள், ஒலிகள் பார்வையாளன் நினைவில் நீடித்திருந்தன. இன்றைக்கு எந்தப் பார்வையாளனும் எந்த சினிமாவையும் காட்சிகளையும் நினைவில் வைப்பது இல்லை. அவனது உணர்ச்சிகள், அவனது வாழ்க்கையோடு உள்ள தொடர்பை சினிமா இழந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு திரைப்பட இயக்குநர், எல்லாவிதமான ரசிகர்களையும் ஈர்ப்பதற்கான படத்தை எடுப்பது சவால் இல்லையா?

ஆமாம். முன்பு சினிமா திரைகள், தொலைக்காட்சித் திரைகள் என்று வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் படங்கள் பார்க்கப்பட்டன. இப்போது செல்போன் வழியாக நான்கு கோடி திரைகளுக்குத் திரைப்படத்தின் உள்ளடக்கத்தைச் சமைக்க வேண்டிய கட்டாயம் திரைப்பட இயக்குநருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று எவ்வளவு பெரிய திரைப்படமாக இருந்தாலும் சரி, சின்னத் திரைப்படமாக இருந்தாலும் வெள்ளி, சனி, ஞாயிறு என்ற மூன்று நாள் திருவிழாதான்.

ஒரு திரைப்பட வெளியீடு என்பது அந்த திருவிழா நிகழ்ச்சியை விற்பதாக மாறிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வரும் எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது. அவை தன்னாலேயே மொபைல் ப்ளாட் பார்ம்களுக்கு நகர்ந்துவிடுகின்றன. இப்படியான சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலைக்கான தேவை என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் வலிமை இயக்குநருக்குத் தேவைப்படுகிறது. அங்கே இறந்த காலமும் இல்லை; எதிர்காலமும் இல்லை.

தொலைக்காட்சி, சினிமா இரண்டு ஊடகங்களிலும் அனுபவம் உள்ளவர் நீங்கள். இந்தியாவில் வேர்கொள்ளத் தொடங்கியுள்ள இணையம் வழி சினிமா, குறுந்தொடர்களின் உள்ளடக்கம், அழகியல், வர்த்தகரீதியான எதிர்காலம் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

நான் ஜீ-5 தளத்துக்காக ‘காட் மேன்’ என்றொரு ஆன்மிக, க்ரைம் இணையத் தொடரை எடுத்து முடித்துள்ளேன். அந்த அனுபவத்திலேயே சொல்கிறேன். இதில் நான் கையாண்டுள்ள உள்ளடக்கத்தை இன்றைய சினிமா, தொலைக்காட்சி ஊடகத்தில் எடுக்கவே முடியாது. தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும்போது பட்ஜெட் இப்போது குறைவாகக் கிடைக்கிறது. தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் இருந்த தணிக்கைக் கட்டுப்பாடு, திரையரங்குகள் விதித்த நேரக் கட்டுப்பாடெல்லாம் இணையத் திரையில் இல்லை.

நிறுத்தி நிதானமாக கதையைச் சொல்லலாம். பார்வையாளன், ஒரு செயலியின் வழியாகக் கையடக்கத் திரையரங்கை டவுன்லோடு செய்யும் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறான். அவனுக்கும் படைப்பாளிக்கும் நடுவே திரையரங்கு இல்லை, வினியோகஸ்தர்கள் இல்லை, சுவரொட்டிகள் இல்லை. அவன் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். நிறுத்தி தன் வேலையைப் பார்க்கலாம். அந்தச் சுதந்திரத்தை அவனுக்குத் தரும்போது, அவனும் படைப்பாளிக்கு இன்னும் ஆழமாக நிதானமாக உன்னுடைய சினிமாவைச் சமைத்துக் கொடு என்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறான்.

தமிழரசன் உருவான பின்னணியைச் சொல்லுங்கள்…

முதல் படமான ‘தாஸ்’ தொடர்பிலான அனுபவம் சொல்லத்தக்கது அல்ல. சினிமா வேண்டாமென்று தொலைக்காட்சிப் பக்கம் போய்விட்டேன். 2018-ம் ஆண்டுதான் ஏன் திரும்பவும் சினிமாவுக்கு முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியது. இத்தனை வருடம் கழித்துத் திரும்பி வரும் நிலையில் பெரிய ஹீரோவைத் தேடிப்போய்க் கதைசொல்ல முடியாது. ஒரு தரமான கதையை, அதற்கேற்ற நடிகரிடம் சொல்லிச் சம்மதிக்க வைப்பது தான் ஒரே வழி.

மூன்று பேர் என்னுடைய மனத்தில் இருந்தார்கள். அவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். 2018 தீபாவளி அன்று அவரிடம் நேரம் வாங்கிக் கதை சொன்னேன். முதல் பாதியைச் சொல்லி முடித்தவுடனேயே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். கடந்த மே. ஜூனில் பெரும்பாலும் படமே முடிந்துவிட்டது. சுரேஷ் கோபி- சோனு சூட் இணைந்து நடிக்கும் காட்சிகளை மட்டுமே பின்னால் எடுத்தோம். இப்போது படம் வெளியாகத் தயாராகியுள்ளது.

விஜய் ஆண்டனி என்ற முகம்தானே இந்தப் படத்துக்கு மையம்?

ஆமாம். தியேட்டருக்குப் பார்வையாளர்களை அழைத்துவரப் போகும் முதல் சக்தி அவர்தான். அவருக்கு இது பத்தாம் படம். ‘பிச்சைக்கார’னுக்குப் பிறகு அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும் என்று அவர் நினைக்கிறார். எனக்கும் இது திருப்பமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இளையராஜா இந்தப் படத்தின் பெரிய ஸ்பெஷல் தானே?

70, 80-களில் பிறந்து சினிமாவுக்கு வந்த எல்லாரையும் போலவே எனக்கும் இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது நிறைவேறியுள்ளது. இன்றைய டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் இசை பின்னுக்குத் தள்ளப்பட்டு சவுண்ட் டிசைனுக்கு முக்கியத்துவம் அதிகரித்துவிட்டதாக ஒரு எண்ணம் இருக்கிறது. இசைக் கோப்பாளர்கள் அரிதாகி, சவுண்ட் இன்ஜினீயர்கள் இசையமைப்பாளர்களாக வந்துவிட்டதால் ஏற்பட்ட கோலம் இது.

அந்தச் சூழலில் ஒரு படத்துக்கான பின்னணி இசையின் தேவையை உணர்ந்த அரிதான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது பின்னணி இசையைத் தூண்டும் வண்ணம் படத்தின் காட்சியமைப்புகள் இருந்துள்ளன என்பதும் எனக்குச் சந்தோஷம். இந்தப் படத்திலும் சவுண்ட் இருக்கும். ஆனால் அது இசையாக இருக்கும். நாம் மறந்துபோன மெலடிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன.

தமிழரசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்த நினைவுகளை எழுப்பக்கூடியது. அப்படியான உள்ளடக்கம் உள்ள திரைப்படமா?

இல்லை. தமிழரசன் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அவ்வளவுதான். ஒரு சமூகச் சூழ்நிலையால் மற்றொருவர் பாதிக்கப்படும்போது நாம் அதை விமர்சித்து ஸ்டேட்டஸ் போடுகிறோம். அதேபோன்ற சூழ்நிலை ஒரு தனிநபருக்கு வந்தால் என்ன ஆகும் என்பதுதான் கதை. பையனைக் காப்பாற்ற அரசோடும் அமைப்புகளோடும் போராடும் ஒரு சாமானியனின் கதைதான் இது. இன்றைய சூழ்நிலையில் சாமானிய மனிதனும் தேசத் துரோகியாக அரசுக்கு எதிரானவனாகச் சித்தரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஆனவனின் கதைதான் தமிழரசன்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறார்?

ஒரு ஆக் ஷன் திரில்லருக்கு ஏற்ற ஒளிப்பதிவாளர் அவர். எனது நண்பரும்கூட. உணர்வுபூர்வமான ஒரு திரில்லர் படத்துக்கு என்ன வேண்டுமோ அதை நிறைவாகச் செய்து தந்திருக்கிறார். n சந்திப்பு: ஷங்கர் n

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x