Published : 06 Jan 2020 04:32 PM
Last Updated : 06 Jan 2020 04:32 PM

வறுமை: இந்தியாவின் நிரந்தர அடையாளமாகிறதா?

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

மணி காலை பதினொன்று. மாநகரின் சாலையோரவாசியான அந்தப் பெண் தன் குடும்பத்துக்கான மதிய உணவை தயார் செய்ய ஆயத்தமாகிறாள். காலை வெயில் அவர்களது வசிப்பிடத்தில் விழுகிறது. அவளது குழந்தை நிர்வாணமாக நின்று, சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெண் அன்றைய சமையலுக்கான பொருட்களை எடுக்கிறாள். அது அன்றைய தினத்துக்கு போதுமானதாக இல்லை. ஆற்றாமையுடன் தன் குழந்தையைப் பார்க்கிறாள்.

இது இந்திய நகரச்சாலைகளில் மிக இயல்பாக காணக்கிடைக்கும் காட்சி. கைகால்கள் அழுகிய நிலையில் ஒருவர் மரச்சக்கர வண்டியில் அமர்ந்திருக்க, இன்னொருவர் அவரைத் தள்ளிக் கொண்டுபோவது, இரு கால்களையும் இழந்த ஒருவர் தன் கைகளால் சாலையை கடந்து செல்வது, சாக்கடைகள் சாலையில் வழிந்தோட அதன் அருகில் அன்றுயாரோ தந்துவிட்டுப்போன உணவுப் பொட்டலத்தைப் பிரித்து கொண்டிருக்கும் ஒருவர், கழிப்பிட வசதியின்றி நின்றபடி சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் வயதான பெண், இரவில் பூட்டப்பட்ட கடையின் வாசலை அன்றையதின தூக்கத்துக்கு தயார் செய்யும் நபர் என இந்த நாட்டின் ஒரு பகுதியினராக அவர்களின் வாழ்க்கை நகர்கிறது.
சாலையோரவாசிகளின் வாழ்க்கை நிலை எல்லா காலத்திலும் ஏறத்தாழ இவ்வாறாகவே உள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அபாயம் என்னவென்றால் தங்குவதற்கு ஏதேனும் வீடு இருப்பவர்களும் மிக மோசமான வறுமைச் சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதே.

வறுமை இருவிதமாக வகைப்படுத்தப்படுகிறது. ‘அப்பட்டமான வறுமை’ (absolute poverty), ‘ஒப்பீட்டு வறுமை’ (relative poverty). ‘அப்பட்டமான வறுமை’ என்பது எந்த அடிப்படை வசதிகளையும் பெற முடியாத நிலையைக் குறிப்பது. மிகக் குறிப்பாக வீடற்று சாலை ஓரத்தில் வசிப்பவர்களை இந்தப் பிரிவின்கீழ் சேர்க்க முடியும். அதேபோல் ‘ஒப்பீட்டு வறுமை’ என்பது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பவர்களைக் குறிக்கக் கூடியது.

இவர்களால் அடிப்படைத் தேவைகளை குறைந்த அளவிலேனும் பெறமுடியும். ஆனால், சமூக அமைப்பில் பிறருடன் ஒப்பிடுகையில் இவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியதாக இருக்கும். இப்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், ஒப்பீட்டு வறுமையில் இருப்பவர்கள், அப்பட்டமான வறுமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுதான்.

வறுமைசூழ் இந்தியா

இந்தியாவின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று, சமத்துவமின்மை. பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள 10 சதவீத பிரிவினரிடமே 80 சதவீத சொத்துகள் இருக்கின்றன. இந்த விகிதாச்சாரமே இந்தியாவை மீள முடியாத சுழலுக்குள் தள்ளியுள்ளது. இவை தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் ஆழ்த்தச் செய்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிநபரின் ‘நுகர்வு திறன்’ அடிப்படையில் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் செலவிடமுடியாத சூழலில் இருக்கும் நபர் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவராக அடையாளப்படுத்தப்படுகிறார். இது 2012-ம் ஆண்டில் உருவாக்கபட்ட ரங்கராஜன் குழுவின் அளவீடு. அதன்படி 2011-12-ன் இந்தியா முழுமைக்குமாக 29.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்திய மக்களில் ஐந்து பேர்களில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழ்கிறார்.

சமீபத்தில் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று வெளியே கசிந்தது. அதில் மக்களின் நுகர்வு திறன் 2011-12-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18-ல் 3.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் நுகர்வு திறன்10சதவீதம் சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நுகர்வு
திறன் என்பது ஒரு தனி நபர் தனது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அவரிடம் பணப் புழக்கம் இருப்பதை குறிப்பது.

தனி நபர், 2011-12-ம் ஆண்டில் மாதம் சராசரியாக ரூ.1,501 செலவிடும் திறனுடையவராக இருந்தநிலையில், 2017-18-ல் அது ரூ.1,446-ஆக குறைந்துள்ளது. கிட்டத்த இந்த 7 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குகீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 3 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே சென்றுள்ளனர்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மூன்று காரணிகள் மிக முக்கியமானவை. தனிநபர் நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதி. தற்போது இந்த மூன்றும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. மக்களின் நுகர்வு திறன் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது என்பதே சமீபத்திய அச்சுறுத்தலான செய்தி. மக்கள் நுகர்வு திறன் குறைவது என்பது, அந்த நாட்டில் வறுமை அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறி. போதிய வருவாய் ஈட்ட முடியாத நிலையிலேயே மக்களின் நுகர்வு திறன் பாதிக்கப்படுகிறது. இங்கு நாம் இரண்டு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று தனிநபர் வருவாய்; மற்றொன்று விலைவாசி. தற்போதுள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் தனி நபர் வருவாய் 7 ஆண்டுகளுக்குமுன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. குறிப்பிடும்படியாக மேம்படவில்லை. ஆனால் விலைவாசியோ இருமடங்காகிவிட்டது. உதராணமாக 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு டீ-யின் விலை 5 ரூபாய். ஆனால் தற்போது 10 ரூபாய். எனில், போதிய வருமானம் இல்லாத ஒருவரால் இந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தச் சூழல் மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நோய்மை சூழ் இந்தியா

உணவு நுகர்வு குறைவு தலைமுறை ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. உதாரணமாக கணவன், மனைவி, ஒரு குழந்தை அடங்கிய ஒரு குடும்பம், தனது ஒருவேளை உணவைக் குறைத்துக் கொள்கிறது எனில், அந்தக் குழந்தையின் வளர்ச்சி? இந்தியக் குழந்தைகளில் 20 சதவீதக் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக உலக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய சூழலில் ஏழைகள் அவர்களுடைய வருமானத்தில் 69 சதவீதத்தை உணவு சார்ந்தவற்றுக்காகவும், 6 சதவீதத்தை கல்வி, உடல்நலத்துக்காகவும் செலவிடுகின்றனர்.

கிராமப் புறங்களில் உணவுப் பொருட்கள் சார்ந்து தனிநபர் செலவீனம் 2011-12-ல் மாதம் ரூ.643-ஆக இருந்தது, 2017-18-ல் ரூ.580-ஆக குறைந்துள்ளது. ஏற்கெனவே கல்வி ரீதியாக பின்தங்கி இருக்கும் அக்குடும்பம் தற்போதைய பொருளாதார சூழலால் கல்விக்கான செலவை குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. விளைவாக அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் கல்வியறிவு இல்லாத தலைமுறையாகவே உருக்கொள்கிறது.

வேலையில்லா இந்தியா

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை உயர்ந்துள்ளது. குறிப்பாக பட்டாதாரி இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. வடமாநிலங்களில் வேலையின்மையால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற செய்து எளிதாக கடந்து செல்லக்கூடியது அன்று. கல்லூரி படிப்புக்குப் பிறகு ஒரு இளைஞனுக்கு வேலையில்லை என்றால் அந்தக்குடும்பத்தின் கதி என்னவாகும்? இந்தியா இந்த அபாயத்தை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லை என்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபுறம் போதிய ஊதியமின்மை. நிறுவனங்கள் அதன் பணியாளர்களின் ஊதியத்தை பெரும் அளவில் குறைத்துவருகிறது.

வருடாந்திர ஊதிய உயர்வு என்பது தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகமாறியுள்ளது. இதனால் வேலையில் இருப்பவர்களின் நுகர்வு திறனும் பாதிக்கப்படுகிறது. இது பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். தவிர ஜிஎஸ்டியால் பலரும் நுகர்வை குறைத்துக் கொண்டுள்ளனர். வறுமையும் வேலையின்மையும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. இவற்றின் விளைபொருள் என்னவாக இருக்கும்?

வன்முறைசூழ் இந்தியா

வேலை என்பது வருவாயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல; அது ஒரு நபருக்கு சமூகம் சார்ந்து சில பொறுப்புகளையும் அளிக்கிறது. வேலையில்லாமல் வறுமையில் வாழும் ஒருவர், சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயமும் உள்ளது. வாழ்வின் மீதும் எந்தப் பிடிப்புமற்று திரியும் இளைஞர்களை அரசியல் கட்சியினர்கள் தங்கள் அடியாட்களாக பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரிதொரு முக்கியமான அச்சுறுத்தல்.

இவையெல்லாம் தவிர, இந்தியாவில் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக உள்ளது. இங்கு பெரும் செல்வந்தரும் சுகாதாரமான காற்றை பெற்றுவிட முடியாது. காற்று மாசு, சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவுகள், முறையற்ற கட்டமைப்புகள், நீதியின்மை, சாதியக் கொடுமைகள், ஊழல், பாலினப் பாகுபாடு எனப் பலவும் இந்தியாவின் தரத்தை மட்டுப்படுத்துகின்றன.

130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனி நபர் வருமானம் ஒரு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தன் மக்களை வைத்துக்கொண்டுதான், பொருளாதார ரீதியாக உலகில் 6-வது பெரிய நாடு என இந்தியா பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x