Published : 06 Jan 2020 04:09 PM
Last Updated : 06 Jan 2020 04:09 PM

டிஜிட்டல் பரிவர்த்தனை: அதிகம் சேமிக்க எளிய வழி

பர்வத வர்தினி சி
vardhini.c@thehindu.co.in

புதுவருடம் பிறந்துவிட்டது. ஒவ்வொருவரும் நம்முடைய நிதி இலக்குகளைப் புதிதாகத் திட்டமிட வேண்டிய தருணம். வழக்கமாக நிதி திட்டமிடல்களில் இருக்கும் குடும்பத்துக்கு ஏற்ற காப்பீடு, மாதாந்திர முதலீட்டு திட்டமான எஸ்ஐபி ஆகியவற்றோடு சேர்த்து அதிகம் சேமிக்க கூடுதலாக உள்ள ஒரு வழி இணையம் மூலமான பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்வது.

இணைய வழி பரிவர்த்தனைகளில் தரப்படும் ரிவார்ட் புள்ளிகள், கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மற்றும் சிரமிமில்லாத பரிவர்த்தனை வசதிகள் என பல அம்சங்கள் உள்ள நிலையில், அரசும், ரிசர்வ் வங்கியும் மேலும் பல சலுகைகளை வழங்கத் தயாராகிவருகின்றன.

சேமிப்பு கணக்கு மூலமாக நெஃப்ட் பரிவர்த்தனைகள் செய்தால் ஜனவரி 1 முதல் முற்றிலுமாக எந்தக் கட்டணமும் இல்லை. நெட்பேங்கிங் மொபைல் பேங்கிங் இரண்டுக்குமே இது பொருந்தும். முன்பு, ஒவ்வொரு நெஃப்ட் பரிவர்த்தனைக்கும் ரூ.2.50 முதல் ரூ.25 (ஜிஎஸ்டி இல்லாமல்) வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது, வங்கிக் கிளை மூலமாக செய்யப்படும் நெஃப்ட் பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேசமயம், டிசம்பர் 16, 2019 முதல் நெஃப்ட் பரிவர்த்தனையை 24 நேரமும் எல்லா நாட்களும் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. முன்பு, வங்கி வேலை நாட்களில் மட்டுமே அதுவும் இரவு ஏழு மணிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நெஃப்ட் பரிவர்த்தனை அடுத்த நாள்தான் வரவுவைக்கப்படும். அதேபோல் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான நேரமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இரண்டாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் புதிய பிரீபெய்டு கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இரண்டுமே வழங்கலாம். இது கார்டு போலவும், இணைய வழி பரிவர்த்தனை அம்சமாகவும் பயன்படுத்தலாம்.

பேடிஎம், ஓலா மணி, மொபிக்விக் போல இது செயல்படும். ஆனால், இதில் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிவைத்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற பயன்படுத்திக் கொள்
ளலாம். இதில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

எளிமையான கேஒய்சி

இந்த வகை பரிவர்த்தனைகளை எளிமைப் படுத்த கேஒய்சி நடைமுறைகளை வெகுவாகக் குறைத்துள்ளனர். ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் மொபைல் எண்ணை உறுதிசெய்ய வேண்டும், பின்னர் பெயர், அடையாள அட்டை விவரங்களைத் தர வேண்டும் அவ்வளவே. மூன்றாவது, சில தொழில்களில் இந்த வகை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வங்கிக் கட்டணமோ, செயல்முறை கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது என்பது தொழில் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வரப்பிரசாதமாகும்.

ஜனவரி 1 முதல், ரூ.50 கோடிக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடிய தொழில் நிறுவனங்கள் டெபிட் கார்டு, யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிவர்த்தனைகளை விற்பனையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து விதமான கட்டணங்களும் விலக்கிக்கொள்ளப்படுகிறது.

இந்த வகை பரிவர்த்தனைகளைப் பெறாமல் தவிர்த்தால் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 அபராதமாக வசூலிக்கப்படும். கார்டு பரிவர்த்தனைகளில் பிடிக்கப்படும் தொகை சிறிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 6 சதவீதமாக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடவே ரிசர்வ் வங்கியின் நெஃப்டி, ஆர்டிஜிஎஸ் போன்றவற்றுக்கான பரிவர்த்தனை கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ரொக்கத்துக்கு ‘நோ’

டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், ரொக்கப் பரிவர்த்தனையை அரசு குறைக்க பார்க்கிறது என்பது தெளிவாகிறது. இதனால் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ரூ.2000க்கு மேல் ரொக்கமாக செலவு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. எனவே ரூ.2000க்கு மேல் நன்கொடையாகக் கொடுத்தாலுமே கூட 80ஜி அடிப்படையில் வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முடியாது.

நீங்கள் தொழில் செய்பவர் எனில் ரூ.10 ஆயிரம் வரை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் இதையும் உங்களுடைய வருமான வரியில் வரிவிலக்குக்கு குறிப்பிட முடியாது. அதேபோல் சொத்து வாங்கும்போது ரொக்கமாக ரூ.10 ஆயிரம் ஒரு நாளில் செலவழித்தால் அந்தத் தொகை சொத்தின் மதிப்பில் சேர்க்கப்படாது.

அதேபோல் சொத்து தொடர்பான கடனைச் செலுத்தவோ, இருப்பு வைக்கவோ ரூ.20 ஆயிரம் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் அந்த தொகைக்கு அபராதம் விதிக்கப்படும்.பட்ஜெட் 2017லேயே ஒரு நாளைக்கு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பட்ஜெட் 2019ல் ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறைதீர்ப்பு முறை

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அதே சமயம், அது தொடர்பான குறைகளைத் தீர்ப்பதும் அவசியம். இணையம் என்றாலே பிரச்சினைகள் அதிகமாக வரும். வாலட்டுகளில் பணத்தை மாற்ற முடியவில்லை என ஆரம்பித்து, தவறுதலாக வேறொரு கணக்குக்கு பணம் அனுப்பப்படுவது, தவறாகும் பரிவர்த்தனைகள் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க ரிசர்வ் வங்கி தனி ஓம்புட்ஸ்மென் திட்டத்தை கடந்த வருடம் கொண்டுவந்துள்ளது. இது அனைத்துவிதமான வங்கி, வங்கி அல்லாத, யுபிஐ , எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் அனைத்துக்குமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x