Published : 06 Jan 2020 03:59 PM
Last Updated : 06 Jan 2020 03:59 PM

எண்ணித் துணிக: பிராண்டை முழுமையாக்கும் சமாச்சாரங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்

பிராண்டை முழுமையாக்கும் சமாச்சாரங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக பிராண்ட் எளிமெண்ட்ஸ் பற்றி. இவை பிராண்டை முழுமையாக்க, தனித்துவமாக தெரிய வைக்க, மற்றபிராண்டுகளிலிருந்து வித்தியாசப்படுத்த, ரிஜிஸ்டர் செய்யும் வகையில் அமையும் பிராண்ட் பெயர், லோகோ,பேஸ்லைன், கேரக்டர், யூஆர்எல், பேக்கேஜிங், விளம்பர இசை போன்றவை. இதை பிராண்ட் ஐடெண்டிடீஸ் என்றும்கூறுவார்கள்.

சில விஷயங்களை வண்டி வண்டியாய் பேசுவதை விட, வளவளவென்று சொல்வதை விட விஷுவலாக காண்பிக்கும் போது பார்ப்பவருக்கு பட்டென்று புரிகிறது. சட்டென்று தெரிகிறது. ஒரு பெண் காலில் மெட்டி இருந்தால் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று புரிகிறது.

அவள் கழுத்தில் தாலி இருந்தாலும் தெரியும் தான் என்றாலும் தாலி இருக்கிறதா என்று கழுத்துப் பக்கம் ஏற இறங்கப் பார்க்கப் போய் அவள் காலில் உள்ளதை கழட்டுவாளே என்ற கவலையில் கால் ரேஞ்சில்நின்றேன். பிராண்டும் அவ்வாறே. பிராண்டை பொசிஷனிங் செய்து அதற்கேற்ப பெயர் சூட்டும் போது வாடிக்கையாளர்களுக்கு புரியும் என்றாலும் விஷுவலாக, வெர்பலாக மற்ற சில விஷயங்கள் செய்யும் போது பிராண்ட் செய்தி விரைவில் சென்றடையும்.

அதில் ஒன்று லோகோ. பிராண்ட் பெயரை தனித்துவமாக எழுதி முடிந்தால் கூடவே ஒரு விஷுவல் வடிவத்தைவடிவமைப்பது. லோகோ என்பது வார்த்தையாக, உவமையாக, படமாக, வண்ணமாக, கதாபாத்திரமாக இருக்கலாம். நம் கருத்தை உலகிற்கு கூற உதவும் ‘ட்விட்டர்’ பிராண்டின் லோகோ ஒரு சிறிய பறவை.

`பட்சி கூறியது’ என்றுஎழுத்தாளர் சுஜாதா கூறும் ஸ்டைலில் உங்கள் கருத்து கூறும் சுதந்திரத்தை லோகோவிலேயே பிரதிபலிக்கும் அழகை கவனியுங்கள். அதற்காக எல்லா பிராண்டுகளுக்கு விஷுவலாக ஒரு வடிவம் வேண்டும் என்ற அவசியமில்லை. ‘சோனி’ பிராண்டிற்கு தனியாகஎந்த விஷுவலும் கிடையாது. அது எழுதப்பட்டிருக்கும் விதம்தான் லோகோ. ‘சாம்சங்’ பிராண்டும் அது போலவே.

லோகோ என்பது பிராண்டின் தன்மையை அல்லது பயனை குறிக்கும் வகையில் இருக்கவேண்டும். `டெட்டால்’ பிராண்டின் பொசிஷனிங் பாதுகாப்பு. பாதுகாக்கும் பிராண்ட் என்பதைவிளக்கும் வகையில் அதற்கு ‘போர்வாள்’ வடிவம் லோகோகவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் பிராண்டை வாங்கப்போவது சாமானியர்கள் என்பதால் அவர்களுக்கு புரியும்படி லோகோவை டிசைன் செய்யவேண்டும். அவர்களுக்கு புரியவேண்டும் என்ற அவசியமில்லை என்றுநினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் லோகோவை வடிவமைக்கலாம். இன்று பல ஸ்டார்ட் அப்ஸ் செய்வது போல. என்ன, யாருக்கும் ஒரு எழவும் புரியாது, லோகோவை வடிவமைத்தவர் உட்பட!

லோகோ வடிவமைத்த கையோடு பிராண்டிற்கு ஒரு பேஸ்லைன் எழுதுவது நலம். பிராண்டின் தன்மையை, பயனை, இமேஜை, உபயோகிப்பவரின் தன்மையை ஒரு வரியில் சுருக்கி எழுதும் வாக்கியம் தான் பேஸ்லைன். ’தி கம்ப்ளீட் மேன்’ என்றால் ‘காம்ப்ளான்’ நினைவிற்கு வருவதில்லை; `ரேமண்ட்’ தானே ஞாபகத்திற்கு வருகிறது. இதுவே பேஸ்லைனின் மகத்துவம். சினிமா ஸ்டைலில் கூறுவதென்றால் பிராண்டின் பன்ச் டைலாக் தான் பேஸ்லைன்.

பேஸ்லைனும் பிராண்ட் பெயரைப் போல அழகாக இருக்கவேண்டும் என்பதில்லை. பொருத்தமாக இருக்கவேண்டும். பிராண்ட் செய்தியின் சுருக்கமாக இருக்கவேண்டும். பிராண்ட் பயனை நறுக்குத் தெறித்தார் போல் பேஸ்லைனாக அமைக்கலாம். அதிக போட்டியாளர்கள் இருக்கும் பொருள் வகைகளில் பிராண்டின் பெயரை அதன் பேஸ்லைனில் சேர்த்து வைப்பது சாமர்த்தியமான டெக்னிக். `ஹமாமிருக்க பயமேன்’ என்று கூறும் `ஹமாம்’ சோப் போல.

பிராண்ட் பேஸ்லைன் வளவளவென்று உபன்யாசம் போலில்லாம் சுருக்கமாக, நறுக்கு தெறித்தார்போல் இருக்கவேண்டும். ஒரு பிராண்டிற்கு பல தன்மைகள் இருக்கலாம்; பலவித விசேஷங்கள் ஜொலிக்கலாம்; அனேகபயன்கள் அளிக்கலாம். அதற்காக எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்வேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் சமர்த்தாய் பொசிஷனிங்கை பறைசாற்றுவது போலோ, பிராண்டின் இமேஜை ஹைலைட் செய்வது போலோ சின்னதாக சிக்கனமாக எழுதுவதே ஏற்றம். `இது செம ஹாட் மச்சி’ என்று யூத்ஃபுல்லாக கூறும் ‘ரேடியோ மிர்சி’ போல.

லோகோ, பேஸ்லைன் முடிந்ததா, உங்கள் ஸ்டார்ட் அப்பின் தன்மைக்கேற்ப, பிராண்டின் பொசிஷனிங்படி தேவைப்பட்டால் ஒரு உருவ விஷுவல்வடிவமைப்பது பயன் தரும். `அமுல்’விளம்பரங்களில் ஒரு சின்ன பெண்ணைப் பார்திருப்பர்கள்.

`எம்ஆர்எஃப்’ டயர் விளம்பரங்களில் திடகாத்திர உடம்புடன் ஒரு ஆண் டயரை தூக்கிப் பிடித்திருப்பது போல் ஒரு உருவத்தைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகை உருவங்களுக்கு பிராண்ட் கேரக்டர்’ என்று பெயர். பிராண்டிற்கு ஒரு அழகை, இமேஜை அல்லது பிராண்டின் தன்மையை பறைசாற்றும் உருவங்கள் இவை. வாடிக்கையாளர்களை கவர்ந்துபிராண்டை நினைவு வைத்துக்கொள்ள உதவுபவை பிராண்ட் கேரக்டர்.

பிராண்டின் பயனை உருவகப்படுத்த கேரக்டரை உபயோகிக்கலாம். ‘ஏர் இந்தியா’ பல காலமாக மஹாராஜா பொம்மையை தன் கேரக்டராக உபயோகித்து வந்தது. ‘எங்கள் பிளேனில் பயனித்தால் உங்களை மஹாராஜா போல் பாவித்து மரியாதை செய்து அன்போடு உபசரிப்போம்’ என்று கூறாமல் கூறியது அந்த கேரக்டர்.

அதே போல் ‘பில்ஸ்பரி’ கோதுமை பிராண்ட் விளம்பரங்களில் கொழு கொழுவென்று வரும் ஒரு வெள்ளை கலர் பொம்மையை பார்த்திருப்பீர்கள். அந்த கேரக்டருக்கு ‘டோ பாய்’ என்றுபெயர். எங்கள் கோதுமையை உபயோகித்து சமைத்தால் சப்பாத்தியும், பூரியும்கும்மென்று உப்பி ஜம்மென்று இருக்கும் என்று அழகாக கூறுகிறான் அந்த க்யூட் டோ பாய்!

கேரக்டரை பயன்படுத்தும் போது அந்த கேரக்டர் எல்லாருக்கும் புரியும்படி இருப்பது அவசியம். யார் மனதையும் புண்படுத்தாதபடி அமைவது அதிமுக்கியம். பிராண்ட் கேரக்டரை அடிக்கடி மாற்றக்கூடாது. அதே போல் அந்த கேரக்டரை பிராண்டின் எல்லா விற்பனை மேம்பாட்டு செயல்களிலும் பயன்படுத்த வேண்டும்.

பிராண்ட் எளிமெண்ட்ஸை வடிவமைக்கும் அனைத்து செயல்களுக்கும் தான் பிராண்டிங் என்று பெயர். பிராண்ட் என்றால் என்ன என்று பார்த்தோம். பிராண்ட் என்பது ஐடியா என்றால் அந்த ஐடியாவை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் அனைத்து செயல்களும் தான் பிராண்டிங்.

பிராண்ட், பிராண்டிங் போன்றவை ஒன்று போல் தெரிந்தாலும் வெவ்வேறானவை என்று நாம் முன்பு பார்த்தது ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும். மார்க்கெட்டிங் என்றால் விளம்பரம் என்று மட்டுமே நினைத்திருப்பதும் எவ்வளவு முட்டாள்தனம் என்பதும் உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். புரிந்திருக்க வேண்டும்! சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x