Last Updated : 04 Aug, 2015 12:44 PM

 

Published : 04 Aug 2015 12:44 PM
Last Updated : 04 Aug 2015 12:44 PM

பணியிடம், படிக்குமிடத்தில் வேண்டாமே வீண் பேச்சு!

புறங்கூறல், புறணி, வீண் பேச்சு, வம்பு அரட்டை, புரளி, வதந்தி, செல்லமாய் ‘காஸிப்’... உடன் இல்லாத இன்னொருவரைப் பற்றி அங்கே கூடியிருப்பவர்கள் இட்டுக்கட்டிப் பேசுவது என்பது ஒரு காலத்தில் திண்ணையிலும் புழக்கடையிலும் புழங்கியவைதான்; இன்று சமூக வலைதளங்களின் புண்ணியத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.

இதைப் பேசாதவரும் இல்லை; இதில் ஏசப்படாதவரும் இல்லை எனும் அளவுக்குப் புறங்கூறல் பல நவீன வடிவங்களில் வாழ்க்கையின் அங்கமாகியிருக்கிறது. ஆனபோதும் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர்களைவிட, கவலைப்பட்டு அவஸ்தையில் அலைக்கழிபவர்களே அதிகம்.

படிப்போ, வேலையோ நாம் புழங்கும் இடத்தில் இந்தப் புறணிப் பேச்சை எதிர்கொள்வது எப்படி? அவற்றில் சிக்காமல் மீள்வது எப்படி? இத்தகைய வீண் பேச்சுகள் நமது உறவை, நட்பை, பணியை எந்த வகையில் பாதிக்கும்?

‘காஸிப்’பின் பல முகங்கள்

காஸிப் களேபரம் ஒரு வகையில் நல்லதுக்கு என்பார்கள், விவரமறிந்த சிலர். வணிகம், அரசியல், சினிமா துறைகளில் தமது சுய மேம்பாட்டுக்காக, காஸிப்பைக் கேட்டறிந்து தம்மைச் சரிசெய்துகொள்பவர்கள் உண்டு. இதன் இன்னொரு முகம் தங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பரபரப்பை உண்டாக்கும் விளம்பரத்துக்கான காஸிப்கள் ஆனால், தனிநபர்கள் இந்தப் புறணிகளால் படும் பாடு சொல்லி மாளாது. இதனால் வாழ்க்கை தடம்புரண்டு, வேலையிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

நாலு பேர் நம்மைப் பற்றி

வெளியிடம் வந்தாலே ‘நம்மைப் பற்றி நாலு பேர் என்ன நினைக்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள்’ என்ற எண்ணம் எல்லோருக்கும் தொண்டைக்குள் பந்தாய் உருண்டுகொண்டிருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் ஆவல், அனலாய்ப் பரத்தும். யாரும் வாயைத் திறந்து பேச மாட்டார்களே தவிர, அவர்களுடைய உடல் மொழி அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

பழகும் வட்டத்தில் வழக்கமற்ற வகையில் பார்வைகள் துளைக்கின்றனவா? வாய் மூடியிருப்பினும் இதர அவயங்களால் உங்களைச் சுட்டும் செய்திப் பரிமாற்றத்தை உணர முடிகிறதா? நீங்கள் உள்ளே நுழைந்ததும் பேச்சைச் சட்டென்று நிறுத்தி செயற்கை மவுனத்துக்கோ, அர்த்தமற்ற பேச்சுக்கோ தாவுகிறார்களா? ஆம் என்றால், உங்களைப் பற்றிய புறங்கூறல் அங்கே அதுவரை அரங்கேறியிருக்க அதிக வாய்ப்புண்டு.

எப்படி எதிர்கொள்வது?

எளிமையான உபாயம் புறம்பேச்சை, அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுவதுதான். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில், அது சுற்றிச் சுற்றி வந்தாலும், அதன் உண்மையான இலக்கு நீங்கள்தான். உதாசீனப்படுத்தினால் உருத்தெரியாமல் அழிந்துவிடும். மாறாக ‘என்னைப் பற்றி இப்படியொரு அவதூறா...’ என்று வெகுண்டு நீங்கள் கிளம்பும்போதுதான், அந்த வதந்தி உயிர்பெறும்.

மாறாக, உலா வரும் வதந்தி பற்றி கவலையில்லாததாய்க் காட்டிக்கொண்டு, அதேசமயம் அமைதியாய் அதை ஊன்றிக் கவனியுங்கள். இதை யார் கிளப்பி விட்டது கிளப்பியவருக்கும், பரப்பியவருக்குமான ஆதாயம் என்ன... என்ற கேள்விகளுக்கான பதில்கள், உங்களுக்குப் பயன்படலாம். சில சமயம் வதந்தியின் பாதியில், நீங்கள் கவனிக்க மறந்த ஒரு உண்மையும் ஒளிந்திருக்கலாம். இவ்வகையில் அவர்கள் மெனக்கெட்டு உங்கள் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். மெச்சிக்கொள்ளுங்கள்.

மாறாக, உலா வரும் வம்பு உங்கள் இருப்பை, நடமாட்டத்தை, இயல்பைப் பாதிக்கும் அளவுக்குக் கடுமையான மன உளைச்சலை தருகிறதா? தாமதிக்காமல் உங்கள் சுயவிளக்கத்தை பகிரங்கமாகவும், தன்மையாகவும் வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் உள்ளது போல இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய பிரச்சினை, இதைத் திடமாக எதிர்கொள்வேன் என்பதோடு முடித்துக்கொள்ளுங்கள். பதில் விஷமப் பரப்புரையோ, சவடாலோ வேண்டாம். இதை எதிர்பார்த்து இன்னுமொரு கும்பல் காத்திருக்கக் கூடும். இந்த வகையில் மற்றவர் ஒளித்து வைத்துப் பரப்பும் கிசுகிசு மீது நாமே வெளிச்சம் பாய்ச்சினால், அதன் மீதான சுவாரசியத்தைச் சுற்றியுள்ளவர்கள் இழப்பார்கள். அத்தோடு கிசுகிசு பிசுபிசுத்துவிடும்!

புதிய பேச்சு சிக்கல் தரும்

டைம் பாஸ், அரட்டை என்ற பெயர்களில் மற்றவர் குறித்த வம்புப் பேச்சுகளில், ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? அடுத்த வதந்திக்கு அனேகமாக உங்கள் அந்தரங்கம் இரையாக அதிக வாய்ப்புண்டு. மூன்று பேராக அமர்ந்து அங்கே இல்லாத நபரைப் பற்றிக் கிசுகிசுப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், அந்த மூவரில் ஒருவர் அங்கிருந்து நகரும்போது அவரே ஏனைய இருவருக்கும் அவலாக அரைபடுவார் என்று. அதாவது வதந்திகளை அதிகம் பரப்புபவரே, அந்த மாதிரியான வீண் பேச்சுகளால் அதிகம் அவதிப்படுவார். ஆகையால், வதந்திகளிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளப் பிறரைப் பற்றி, மறந்தும் புறம்பேச வேண்டாம்.

மீறியும் சுவாரசியத்துக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ புறங்கூறல் வலையில் விழுந்தால், மீள்வது சிரமம். எவரிடம் சென்று புறம் கூறுகிறோமோ, அவரிடம் அதுவரை வைத்திருந்த நம்பிக்கையை இழப்பது முதல் சறுக்கல். உங்கள் வாயைக் கிண்டி மூன்றாம் நபர் குறித்த வதந்திகளை வாய்பிளந்து கேட்பவர்கள், அடுத்த கணமே ‘நாம் இல்லாதபோது நம்மைப் பற்றியும் இப்படித்தானே பேசுவார்கள்’ என நட்பின் அஸ்திவாரமான நம்பகத்தன்மைக்கு, அப்போதே வேட்டு வைப்பார்கள். தங்கள் ஆதாயத்துக்காக எதிரிகள்கூட நண்பர்கள் ஆவதுண்டு. அவர்கள் மத்தியில் புறங்கூறலுக்காகப் பகடையாக உருண்ட அப்பாவி, அதன் பின்னர் பொது எதிரியாகி விடுவார். தேவையா இது?

இணையப் பெருவெளியில்

தற்காலத்தில் புறங்கூறலுக்குச் சமூக வலைதளங்களே அதிகம் களம் அமைத்துத் தருகின்றன. சமூக ஊடகங்களும் மறைமுகமாக அவற்றை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் வதந்திகளின் பிறப்பிடம் இணையவெளியாகவே இருக்கிறது. இணையவெளியில் ஒரு தகவலைப் பகிர்ந்தவர், உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலேயே அவை 100 சதவீதம் உண்மையாகாது. இணையத்தில் நட்பு பாராட்டல் என்ற போர்வையில் வதந்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அவற்றைப் பரப்ப நீங்களும் உங்களை அறியாது இரையாக வாய்ப்புண்டு.

என்னுடைய உலகம், நான் நடமாடும் இடம், அதில் இயங்கும் நபர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் என்ன தவறு என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவார்கள். நீங்கள் ஒரு மேலதிகாரி, உங்களுக்குக் கீழிருப்பவர்களின் ஆதங்கக் குரலை ஏதேனும் ஒருவகையில் செவிமெடுப்பது அவசியமெனில், அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால் சம்பந்தமே இல்லாது இன்னொருவரைப் பற்றி அந்தரங்கமாய் ஆராய்வதும், புறம்பேசுவதும், பின்னர் அதற்குக் கூடுதல் அலங்காரம் செய்து தன் பங்குக்குப் பரப்புவதும் ஒரு வகையான மனநலக் கோளாறில் தள்ளிவிடும். மேலும், மின் ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் அனைத்தையும் ஆவணப்படுத்த முடியும் என்பதால், பின்னாளில் அவையே உங்களது உறவுக்கோ, வேலைக்கோ உலை வைக்கலாம். பரம எதிரிகளை உருவாக்கிவிட்டு, நிம்மதியைக் குலைத்தும் போடலாம்.

வதந்தி வலை தவிர்ப்போம்

உங்கள் நண்பர் இன்னொருவரைப் பற்றி சுவாரசியமாய்ப் புறம்பேச வருகிறார் என்றால், அந்த முனைப்பை முளையிலேயே கிள்ள, பெரியவர்கள் சில உபாயங்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பிலும், ஆளுமைப் பயிற்சியிலும் இந்த உபாயங்களை அதிகம் பிரயோகிக்கிறார்கள்.

வம்பளக்க வருபவரிடம் இவற்றை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 1. ஒரு கூற்று உண்மையென்று உறுதியாகச் சொல்ல முடியுமா? 2. பேசப்படும் மூன்றாம் நபருக்கு, இதனால் நன்மையா, தீமையா? 3. இதைக் கேட்பதால் எனக்கு ஏதாவது பயன் உண்டா? இந்தக் கேள்விகள் தரும் பதில்கள், உங்களையும் உங்கள் பொன்னான நேரத்தையும், உங்களுக்கான சமூகப் பிணைப்பையும் கெடாது பாதுகாத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x