Published : 04 Jan 2020 11:17 AM
Last Updated : 04 Jan 2020 11:17 AM

நலமும் மருத்துவமும்: 2019 கற்றது என்ன?

சுபா ஸ்ரீகாந்த்

மருத்துவத்துறை முன்னேற்றங்களில், இந்த ஆண்டில் எது முக்கியமானது என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இருப்பினும், எவை முக்கியமானவை என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், 2019-ல் மருத்துவத்துறையில் நிகழ்ந்த இந்த மறக்க முடியாத நிகழ்வுகள் / கண்டுபிடிப்புகள் நிச்சயம் இடம்பெறும்.

அச்சுறுத்தும் வேப்பிங்

நிக்கோட்டின், நீர், கரைகின்ற சுவையூட்டும் பொருட்கள் ஆகியவற்றைக் கலந்து நீராவியாக உள்ளிழுப்பதே வேப்பிங். புகைபிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாகக் கருதப்படும் இது, புகைப்பழக்கத்தை விட்டுவிட உதவலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து, வேப்பிங்கால், 2,506 நுரையீரல் பாதிப்புகளும் 54 இறப்புகளும் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள். அவர்களின் வயது, பதின்ம பருவத்தின் இறுதியிலோ 20 களிலோ இருந்தன.

ஆனால், வேப்பிங் கருவியைப் பயன்படுத்திய பிறகு, அவர்களில் பலருக்கு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையில் அடைக்கலம் புகும் நிலை ஏற்பட்டது. விட்டமின் - ஈ எண்ணெய்யால் உருவாக்கப்பட்ட ஒரு சேர்க்கையே இதற்கு முக்கியக் காரணம். வேப்பிங் கருவியின் மூலம் புகைக்கும் பழக்கம் இளைஞர்களுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதைத் தடைசெய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணை பிறப்பித்துள்ளார்.

எச்.ஐ.வி. நோய்த் தொற்றைக் குணப்படுத்த முடியும்

எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது உடலிலிருந்த எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. எச்.ஐ.வி. நோய் எதிர்ப்புத் திறன் மிகுதியாக உள்ள ஒருவரது உடலிலிருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நோயாளிக்குத் தரப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த எச்.ஐ.வி. நோயாளி ஒருவருக்கு இதைப் போலவே எச்.ஐ.வி. எதிர்ப்புத் திறன் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜை பொருத்தப்பட்டது.

இதையடுத்து அவரது உடலிலிருந்து எச்.ஐ.வி. கிருமிகள் அழிந்தது தெரியவந்தது. தற்போது லண்டன் நோயாளி இவ்விதம் எச்.ஐ.வி. கிருமியிடம் இருந்து விடுதலை பெறும் இரண்டாம் நோயாளியாகிறார். எச்.ஐ.வி. நோய்த் தொற்றியவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்தி 18 மாதங்கள் ஆன பிறகும் இந்த பிரிட்டன் நோயாளி உடலில் எச்.ஐ.வி. கிருமி இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. எச்.ஐ.வி. நோய்த் தொற்றைக் குணமாக்க முடியும் என்ற தமது நம்பிக்கையை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துவதாகச் சர்வதேச எய்ட்ஸ் சங்கம் கூறியுள்ளது.

அச்சுறுத்தும் மருந்தை எதிர்க்கும் தன்மை கொண்ட கிருமிகள்

அனைத்து வகையான மருந்துகளையும் எதிர்க்கும் கிருமிகள் மருத்துவமனை அமைப்புகளிலும் மருத்துவ மனைகளிலும் செழித்து வளர்கின்றன, கடந்த ஐந்து ஆண்டுகளில், ‘கேண்டிடா ஆரிஸ்’ என்ற பூஞ்சை வெனிசுலாவில் உள்ள ‘பிறந்த குழந்தைகளுக்கான வார்ட்டை’த் தாக்கியுள்ளது. பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு இந்தக் கிருமிகளால் மூடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதன் தாக்குதலுக்கு உள்ளான 800 நோயாளிகளில் பாதிக்கு மேற்பட்டோர் 90 நாட்களுக்குள் இறந்தனர். ‘சி. ஆரிஸ்’ வேரூன்றினால், அதனால் பாதிப்புக்கு உள்ளான வளாகத்திலிருந்து அதை ஒழிப்பது கடினம். சில மருத்துவமனைகள் இதற்காகச் சிறப்புத் துப்புரவு உபகரணங்களைப் பயன்படுத்தியது. மேலும், அதை அகற்ற, தரை ஓடுகளையும் கூரை ஓடுகளையும் அவை முற்றிலும் பெயர்த்து எறிந்தன.

மருத்துவக் காப்பீட்டின் புதிய கொள்கைகள்

ஏற்கெனவே இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குறைகளைக் களையும் விதமாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டச் செயல்முறைகளை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் விதமாக, புதிய கொள்கைகளை ‘காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ)’ அறிவித்து உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த காப்பீடு, தெளிவான வரையறைகள், குறைந்த தெளிவின்மை போன்ற அதன் சிறப்பம்சங்கள், இழப்பீடு கோரல்களின் நிராகரிப்பை வெகுவாகக் குறைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வழிகாட்டுதல்கள், கடந்த அக்டோபர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. மேலும், இனிமேல் புதிதாகத் தொடங்கப்படும் அனைத்துக் காப்பீட்டு பாலிசிகளும், இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தற்போது நிலுவையில் உள்ள பாலிசிகளைப் பொறுத்தவரை, காப்பீட்டாளர்கள் அவற்றை அக்டோபர் 1, 2020க்குள் புதிய விதிகளுக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்ய வேண்டும். எச்.ஐ.வி / எய்ட்ஸ், சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக, மருத்துவக் காப்பீடு முற்றிலும் மறுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தப் புதிய விதிமுறைகள் மிகப் பெரிய நன்மையைத் தரும்.

காச நோய்க்குப் புதிய மருந்து

காசநோய் சிகிச்சையில் ‘புரட்சியை’ ஏற்படுத்தும் ஒரு புதிய மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் மக்களைப் பலிவாங்கும் காசநோய்க்கு எதிராக ஒரு நீண்ட நாள் பாதுகாப்பை இந்த மருந்து வழங்கும் என நம்பப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ‘பிசிஜி ஜாப்’ தடுப்பூசி அவ்வளவு வீரியமாக இல்லை. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நுரையீரல் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய கருத்தரங்கின்போது, உலகெங்கிலும் இருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி குறித்து விளக்கினர். தென்னாப்பிரிக்கா, கென்யா, சாம்பியா ஆகிய நாடுகளில் காசநோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து இந்தத் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆரோக்கியத்தில் பங்கெடுக்கும் பூஞ்சைகள்

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகள், மனித நோயாளிகளில், ஆரோக்கியமான திசுக்களுடன் ஒப்பிடும்போது பூஞ்சை 3,000 மடங்கு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. தோல் எரிச்சல், பொடுகு போன்றவற்றுக்குக் காரணமான பூஞ்சைக்கும் குடல் அழற்சி நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கணைய புற்றுநோய் நோயாளிகளில் இது மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் மற்றோர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்சைக் காளான் எதிர்ப்பு மருந்தை வழங்குவது, எலிகளில் உள்ள பூஞ்சைகளை அகற்றி, கட்டிகளை மேலும் வளரவிடாமல் தடுத்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

மீண்டும் தலை தூக்கும் அம்மை

இந்த ஆண்டு உலக சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பத்து விஷயங்களில் ஒன்றாக, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காட்டும் தயக்கம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்பட்ட வதந்திகளால், அதை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மறுக்கிறார்கள். இதனால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் கட்டுக்குள் இருந்த அம்மை நோய் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. 2019-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 182 நாடுகளிலிருந்து 3,65,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இதே காலத்தில் அம்மைக்கு ஆட்பட்டோரின் எண்ணிக்கை 900 சதவீதம் அதிகம். இதன் காரணமாக, ‘அம்மை இல்லாத நாடுகள்’ என்ற பட்டியலிலிருந்து பிரிட்டன், கிரீஸ், செக் குடியரசு, அல்பேனியா ஆகிய நாடுகள் விலக நேர்ந்துள்ளன.

மருத்துவ சிகிச்சையில் புதுமைகளை வழங்கும் சைகடெலிக்

இந்த ஆண்டு, பேட்டன் நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது ‘மிலா மாகோவெக்’குக்கு சிகிச்சையளிக்க விஞ்ஞானிகள் ஒரு சோதனை சிகிச்சையை உருவாக்கினர். இதுவோர் அரிய மரபணுக் கோளாறு, நரம்பியல் சீர்கேட்டை விரைந்து ஏற்படுத்தும் இந்த நோய் மிகவும் ஆபத்தானது. மரபணு நோய்க்கான முதல் தனிப்பயன் சிகிச்சையாக இந்தச் சோதனை சிகிச்சை கருதப்படுகிறது, ஏனெனில், மிலாவின் தனித்துவமான பிறழ்வை இந்த சிகிச்சை தடுக்கிறது. மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைக்கும் சைகடெலிக் மருந்துகளின் சக்தியைச் சோதிக்க விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கு, நிகோடின் பேட்சை விட சைலோசைபின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shubasrikanth@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x