Published : 02 Jan 2020 12:48 PM
Last Updated : 02 Jan 2020 12:48 PM

நீராலான இறைவன்

பனையபுரம் அதியமான்

கேரளத்தில் திருவிழா மகாதேவர், தன்னைத் தேடிவரும் நல்லடியார்களின் வாழ்க்கையிலும் கலந்த நஞ்சை எடுப்பார் என்பது நம்பிக்கை. நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலமாகப் போற்றப் படுவதால் இத்தலத்து இறைவனை, ‘காலகண்டன்’ என்று மலையாளத்தில் அழைக்கின்றனர்.

ஆமைகள் இருந்த குளம்

தற்போது திருக்கோயில் உள்ள பகுதியில் அரக்கல் பணிக்கர் மக்களுக்குச் சொந்தமான காடுகளும், பெரிய குளமும் இங்கே இருந்தன. குளத்தில் எண்ணற்ற ஆமைகள் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த ‘உள்ளாடர்கள்’ இந்த ஆமைகளை வேட்டையாடி வந்தனர். ஒரு சமயம் இவர்கள் தங்களிடம் இருந்த ஈட்டிகளால் குத்தியபோது, ஆமைகள் வெளியில் இறந்து மிதந்தன. அப்போது அந்தக் குளத்தில் ரத்தம் பீறிட்டு செந்நிறமானது.

இதனைக் கண்டு அச்சம் கொண்ட அவர்கள், வழி தெரியாது திகைத்தனர். அப்பகுதி மக்கள் அக்குளத்து நீரை மூன்று நாட்களாக இரைத்து வெளியேற்றினர். அப்போது குளத்தின் நடுவில் சிவலிங்கம் தென்பட்டது. அதன் திருமேனியில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அப்பகுதியில் இருந்த முனிவரை நாடினார்கள். அங்கு வந்த முனிவர், இந்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார். உடனே தன்னிடம் இருந்த சாம்பலால் அத்திருமேனியில் வைத்து அழுத்தியவுடன், ரத்தம் வெளியேறுவது நின்றது. அதன்பின் அக்குளத்திலேயே தனி ஆலயம் அமைக்க முனிவர் கேட்டுக்கொண்டார். அதன்படியே அக்குளத்தை மணலால் நிரப்பி, சிறிய ஆலயத்தை எழுப்பி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் இக்கோயி லில் தங்கி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவரின் நடவடிக்கைகளால் பக்தர்கள் இவரைக் கண்டு அஞ்சினர். இவரைக் குணமாக்கிட இறைவனை வேண்டி நின்றனர். அன்று பூஜை செய்பவர் கனவில் வந்த இறைவன், மனநிலை பாதிக்கப்பட்டவரை அங்கேயே தங்க வைக்குமாறும், மறுநாள் ஆலயத்தில் புதிதாக முளைக்கும் செடியிலிருந்து, இலைகளைப் பறித்துச் சாறாக்கி, அதில் பால் கலந்து பூஜையில் வைத்துத் தரும்படியும் கூறினார். அவர் பரிபூரணக் குணமடைந்தார் என்கிறது தலவரலாறு.

நாகார்ஜுனரின் நினைவுகள்

நாகர்ஜுனா என்ற புத்த துறவி இத்தலத்தில் தங்கியிருந்து வழிபட்டுள்ளார். அவர் எழுதிய ‘ரச வைஷேஷிகா’ என்ற நூல் இத்தலம் குறித்து கூறுகிறது. அதேபோல, வாகபட்டா என்ற ஆயுர்வேத நிபுணர் இத்தலத்தில் தங்கியிருந்து ஆயுர் வேத மருந்துகள் தொடர்பான ‘அஷ்டாங்க ஹிருதயம்’ என்ற நூலை எழுதியுள்ளார் எனத் தலவரலாறு கூறுகிறது.

தீப ஒளியில் காலகண்டர்

எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் தமிழிலும் மலையாளத்திலும் எழுதப்பட்ட நுழைவுவாயில் உள்ளது. அதில் நுழைந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். திருவிழா ரயில் நிலையம் கடந்தபின் கோயில் வருகிறது. விசாலமான நிலத்தில் கேரளத்தில் காணப்படும் பாரம்பரிய ஆலயங்களின் தன்மையிலேயே திருக்குளத்தோடு இந்த ஆலயம் அமைந்துள்ளது. கருவறைக்குள் பள்ளமான இடத்தில் மகாதேவர், காலகண்டர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், தீப ஒளியில் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறார்.

மருந்துகள் தரப்படும் ஆலயம்

இப்பகுதியில் கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூஜையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். அது நோயுற்றவர் களுக்கு பிரசாதமாகத் தரப்படும். நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைப்பார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு அழைத்து வந்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூஜை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

மழைக்காலத்தில் இறைவன்

இறைவன் கருவறையில் குளத்தில் தோன்றியதால், மழைக்காலங்களில் கருவறை முழுவதும் நீரால் நிறைந்துவிடும். இறைவன் நீரில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் உற்சவருக்கு மட்டுமே பூஜைகள் நடைபெறும். இன்றும் பள்ளமான இடத்திலேயே இறைவன் இருப்பதைக் காணலாம். நீராலானவனாக ஈரம்கொண்ட மனத்தால் காலகண்டர் அருள்பாலிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x