Published : 02 Jan 2020 11:55 AM
Last Updated : 02 Jan 2020 11:55 AM

தெய்வத்தின் குரல்: கடிகையின் தொன்மை 

கி.பி. நாலாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திலேயே ஒரு ராஜா தன்னுடைய வித்யா குருவோடுகூட ஒரு கடிகாஸ்தானத்தில் வித்யாப்யாஸம் செய்திருக்கிறான். அந்த ராஜா கர்நாடக தேசத்தில் ஷிமோகா பகுதியைச் சேர்ந்தவன்.

அவன் படித்த கடிகாஸ்தானம் இருந்ததோ காஞ்சிபுரத்தில்! ஒரு ராஜாவே எத்தனையோ நூறு மைல் கடந்து வந்து சேர்ந்து படிக்கும்படியாக அத்தனை உயர்வுடன் காஞ்சிபுரத்தில் கல்வி விலாஸம் இருந்திருக்கிறது!அவனுடைய குருவும் அவனோடு வந்தாரென்பதால் மிகவும் உயர்ந்த, சூட்சுமமான சாஸ்திரங்கள் இந்த கடிகாஸ்தானத்தில் போதிக்கப்பட்டதாக ஊகிக்கலாம்.

ரயிலும் ரோடும் இல்லாத ஆதி நாளிலிருந்தே வித்யைக்காக நம் தேசத்தவர்கள் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு மைல் தாண்டிப் போயிருக்கிறார்கள். காஞ்சியிலிருந்து காசிக்கு பாடலிபுரத்துக்கு என்றெல்லாம் போயிருக்கிறார்கள். சிதம்பரத்தில் பதஞ்ஜலி பாடம் சொல்லிக்கொடுத்ததாகச் சொன்னேனே, அதற்கு கௌட தேசம் என்கிற வங்காளத்திலிருந்துகூட சிஷ்யர் வந்திருக்கிறார்.

கௌடர் என்றே அவரைச் சொல்வது. அவருடைய சிஷ்யருக்கு சிஷ்யர்தான் ஆசார்யாள். ஆசார்யாள் காசியில் வேதாந்தம் போதித்தபோது கற்றுக்கொள்வதற்காகச் சோழ தேசத்திலிருந்து சநந்தனர் என்பவர் அங்கே போயிருக்கிறார். இவர்தான் பிற்பாடு பத்மபாதர் என்று பெயர் பெற்றவர்.
இம்மாதிரி ஷிமோகாவிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த ராஜாவின் பெயர் மயூரவர்மா. அவனுடைய குருவின் பெயர் வீரசர்மா.

(சர்மா – பிராம்மணன், வர்மா – க்ஷத்ரியன், குப்தா – வைச்யன், தாஸன் – நாலாம் வர்ணம்.) சகல சாஸ்திரங்களையும் (‘ப்ரவசனம் நிகிலம்’ என்று சாசனத்தில் கண்டிருக்கிறது) முழுமையாகப் படிப்பதற்காக இந்த இரண்டு பேரும் போனார்கள் என்று மயூரவர்மாவுக்கு இரண்டு பட்டம் தள்ளி ஆட்சி செய்த காகுத்ஸவர்மா என்பவன் ஷிமோகா ஜில்லாவிலுள்ள தலகுண்டாவில்  ப்ரணவேச்வரஸ்வாமி கோயில் தூண் ஒன்றில் பொறித்திருக்கும் கல்வெட்டில் சொல்கிறான். ‘எபிக்ராஃபிகா இன்டிகா’ எட்டாம் வால்யூமில் சாசன வாசகம் இருக்கிறது:

“ய: ப்ரயாய பல்லவேந்த்ரபுரீம்” என்பதாகக் காஞ்சியைப் ‘பல்லவேந்த்ரபுரி’ என்று சொல்லி ‘கடிகாம் விவேச’ – கடிகையில் சேர்ந்தான் – என்று முடித்திருக்கிறது. ஏற்கெனவே குருவிடம் படித்துமுடித்துவிட்ட ராஜா, அல்லது ராஜகுமாரன், அந்த குருவையும் அழைத்துக்கொண்டு ஸகல சாஸ்திரத்தையும் முழுமையாகக் கற்க நம் காஞ்சிபுரத்துக்கு வரும்படியான பெருமை அங்கேயிருந்த கடிகைக்கு இருந்திருக்கிறது என்பதிலிருந்து, நாலந்தா, தக்ஷசிலா பல்கலைக்கழகங்களைப் போல நம் தமிழ்நாட்டிலும் இருந்திருப்பது தெரிகிறதல்லவா?

மயூரவர்மாவின் காலமான அந்த நாலாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு ஸ்கந்தசிஷ்யன் என்ற பல்லவராஜா ஆண்டிருக்கிறான். இவன் ஸத்யஸேனன் என்ற இன்னொரு ராஜாவிடமிருந்து ஒரு கடிகையை ஜயித்துப் பெற்றான் என்று வேலூர்பாளையத்திலுள்ள மூன்றாம் விஜய நந்திவர்மாவின் சாசனமொன்றிலிருந்து தெரிகிறது. வேலூர்பாளையம் என்பது அரக்கோணத்துக்கு வடமேற்கே ஏழு மைலில் இருக்கிற ஊர். இந்த சாசனம் ‘ஸெளத் இண்டியன் இன்ஸ்க்ரிப்க்ஷன்’, இரண்டாம் வால்யூம், ஐந்தாம் பார்ட்டில் பிரசுரமாயிருக்கிறது:

“ஸ்கந்த சிஷ்யஸ் ததோ அபவத் – த்விஜாநாம் கடிகாம் ராஜ்ஞ ஸத்யஸேநாத் ஐஹார ய:”‘த்விஜாநாம் கடிகாம்’ அதாவது, ‘ப்ராமணர்களுடைய கடிகையை’ என்று அர்த்தம். இதிலிருந்து வேத சாஸ்திர அடிப்படையில் ஏற்பட்ட கல்விசாலையே கடிகை என்று தெரிகிறது. ‘கல்பதரு’ மேற்கோளிலிருந்தும் அங்கே தற்போது வழக்கொழிந்துவிட்ட அதர்வவேத அத்யயனங்கூட நடந்திருப்பதாகத் தெரிந்ததல்லவா?
எதிரியரசனிடமிருந்து கடிகையைக் கைப்பற்றியதை முக்கியமாகச் சொல்லியிருப்பதிலிருந்து அது பல்கலைக்கழகம் போலப் பெரிய ஸ்தாபனமாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

கடிகைகளில் வேதவித்யை மட்டுமின்றி, வேதத்தில் அதிகாரமுள்ள ப்ரம்ம – க்ஷத்ரிய – வைச்யர்களுக்கான எல்லா வித்யைகளுமே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கலாமென்றும், இவற்றில், க்ஷத்ரியர்களுக்கான தநுர்வேத சிக்ஷையினால் எதிர்காலத்துக்கான வீரர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்பதால்தான் குறிப்பாக சத்ரு ராஜாவிடமிருந்து கடிகையைக் கைப்பற்றியிருக்கக் கூடுமென்றும் ஒரு அனுமானம். அல்லது அறிவுக்கோட்டை என்ற காரணத்துக்காகவே அறிவை மதித்த அக்காலத்தில் ஒரு ராஜா இன்னொரு ராஜாவின் வித்யாசாலையைத் தன்வசப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

‘த்விஜர்’ என்பதன் நேர் மொழிபெயர்ப்பு, ‘இருபிறப்பாளர்’ என்பது. உபநயன சம்ஸ்காரத்தினால் இரண்டாம் பிறப்பு எடுப்பதாகக் கருதப்படும் முதல் மூன்று வர்ணத்தாருமே த்விஜர்கள்தான். அதனால் ‘த்விஜர்களுடையவை’ எனப்படும் கடிகைகளில் க்ஷத்ரியர்களும் படித்திருக்க இடமுண்டு. மயூரவர்மா என்று சற்றுமுன் சொல்லப்பட்டவன் க்ஷத்ரியன் தானே?

‘ஸத்ய ஸேனன்’ என்ற சத்ரு ராஜாவின் பேரிலிருந்து அவன் அசோக சாசனம் சொல்லும் ‘ஸத்ய புத்த’ (‘புத்ர’தான் ‘புத்த’ என்றாயிருக்கிறது) . அரசர்களில் ஒருவன், இந்த ஸத்யபுத்ரர்கள்தான் தொண்டை மண்டலாதிபதிகள் என்றெல்லாமும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.

வேலூர்பாளைய சாசனம் இன்னொன்றிலிருந்து நரஸிம்ஹவர்மா காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியதோடு ப்ராமணர்களுக்கென (இங்கேயும் ‘த்விஜாநாம்’ என்று இருக்கிறது) கடிகாஸ்தானமும் மறுபடி கட்டிக்கொடுத்தானென்று தெரிகிறது. ‘புநர் வ்யதாத் – மறுபடி கட்டிக்கொடுத்தான்’- என்று இருப்பதால் இவனுக்கு ரொம்ப காலம் முன்பே கடிகை இருந்து அது இவன் நாளில் சிதிலமாயிருக்க வேண்டும், அதை இவன் அதன் முக்கியத்துவம் உணர்ந்து புனர் நிர்மாணம் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அழகான சுலோகமாக இருக்கிறது சாசனம்:

தத் புத்ர ஸுந: நரஸிம்ஹவர்மா
புநர்வ்யதாத் யோ கடிகாம் த்விஜாநாம்
சிலாமயம் வேச்ம சசாங்கமெளளே:
கைலாஸ கல்பம் ச மஹேந்த்ரகல்பம்

- தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x