Published : 31 Dec 2019 12:41 PM
Last Updated : 31 Dec 2019 12:41 PM

புதுமை களம்: உங்களை வரவேற்பது லொள்.. லொள்..!

ஹோட்டல்களில் வித்தியாசம் காட்டும் காலம் இது. ஹோட்டல்களுக்குப் புதுமையான பெயர்களைச் சூட்டுவது முதல், சர்வர்களாக ரோபோக்களை உலவவிடுவது வரை பலரும் புதுவிதமாக முயல்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை நாய்கள் வரவேற்கின்றன. ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த ஹோட்டல்கள் செயல்படுகின்றன. இரு இடங்களுக்குச் சென்றாலும், நாய்கள் உங்களை அன்போடு குலைத்தும், வாலை ஆட்டிக்கொண்டு பாசம் பொழிவதைக் காண முடியும்.

சென்னையில் எந்த ஹோட்டலிலும் இல்லாத சிறப்பாக இந்த ஹோட்டலில் நாய்கள் வாடிக்கையாளர்களை வரவேற்பது புதுமையாக உள்ளது. வாடிக்கையாளர்களை வரவேற்பதற்காகவே இங்கே நாய்களை வைத்து வளர்த்து வருகிறார்கள். ஹோட்டலுக்கு வரும் குழந்தைகளை உற்சாகமூட்டும் வகையில் இந்தப் புதிய உத்தியை ஹோட்டல் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளை மட்டுமல்ல, ஹோட்டலுக்கு வரும் இளைஞர்கள், பெரியவர்கள் எனப் பலரும் நாய்கள் வரவேற்பால் உள்ளம் குளிர்ந்துபோய்விடுகிறார்களாம்.

ஹோட்டலில் நாய்களை வைத்து வாடிக்கையாளர்களை வரவேற்கும் யோசனை எப்படி வந்தது? “வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாய்களுக்கு எப்போதுமே முதல் இடம் இருக்கும். பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய்கள் என்பதால், இதைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். யாரையும் காயப்படுத்தாத நாய் இது.

ஹோட்டலுக்கு வரும் பலரும் சாப்பிட மட்டும் வருவதில்லை. ஹோட்டல்களை மீட்டிங் பாயிண்டுகளாகக் கருதியும் வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு ரிலாக்ஸும் தேவை. நாய்களைப் பார்த்தால் பலரும் ரிலாக்ஸ் ஆக வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஹோட்டலில் நாய்களை வைத்து வரவேற்கும் யோசனை ஏற்பட்டது” என்கிறார் இந்த ஹோட்டலின் ஊழியர் சந்திரசேகர்.

சிலர் சாப்பிடும் இடத்தில் நாய்கள் இருப்பதை விரும்பாமலும் போகலாம். எனவே, நாய்கள் தரைத்தளத்தில் நின்றுதான் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. முதல் தளத்தில்தான் உணவு உண்ணும் இடத்தை வைத்திருக்கிறார்கள்.

நுழையும்போதே அழகான நாய்கள் இருப்பதைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள், நாய்களைத் தடவி கொடுத்துவிட்டுதான் செல்கிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், அவற்றுக்கு உணவு வழங்கவும் நாய்களுக்கென பிரத்யேக ஸ்நாக்ஸ்களை வைத்திருக்கிறார்கள். உணவு உண்ண காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதுவரை நாய்களோடு விளையாடவும் அனுமதிக்கிறார்கள்.

மேலும், நாய்களுக்குத் தேவையான உணவு, மருந்து, ஓய்வு என்று எல்லாவற்றையும் சரியான முறையில் கொடுத்துவிடுகிறார்கள். நாய்க் குட்டிகளுக்கு எந்தத் தொற்றும் இல்லாமலும் பராமரிக்கப்படுகிறது.

உணவு உண்ண வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு மட்டும் போகக் கூடாது என்பதற்காக அவர்களைச் சிறிதளவு மகிழ்விக்கும்வண்ணம் இந்தப் புதிய முறையை இந்த ஹோட்டல் கையாண்டுவருகிறது. பலரும் நாய்களைப் பார்க்கவே இந்த ஹோட்டலுக்கு வருவதாகவும் பெருமையாகச் சொல்கிறார்கள் நிர்வாகத்தினர்.

- வி. சாமுவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x