Published : 31 Dec 2019 12:26 PM
Last Updated : 31 Dec 2019 12:26 PM

விசில் போடு 12: இளசுகளின் புத்தாண்டு பரிதாபங்கள்! 

‘தோட்டா’ ஜெகன்

திண்டாட்டமா இருந்தாலும், புத்தாண்டு முதல் நாளைக் கொண்டாட்டமாத்தான் ஆரம்பிக்கணும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துல இல்லாத விதி. கொல்கத்தா சிட்டி, சென்னை சிட்டில கொண்டாடுன நியூ இயர்கள் இன்னைக்கு கொட்டாம்பட்டி கோணவாயன்பட்டி வரைக்கும் வளர்ந்திடுச்சு. சினிமா பார்க்க தியேட்டருக்குப் போற பெண்களாட்டம் இருந்த புத்தாண்டு கொண்டாடுறவங்க எண்ணிக்கை, இன்னைக்கு சீரியல் பார்க்கிற கும்பலாட்டாம் பெருத்துடுச்சு. மாசத்துல ரெண்டு தடவை செய்யற தக்காளி சோறு மாதிரி அங்கங்க இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், இன்னைக்கு வாரத்துல நாலு தடவை திங்கிற தயிர் சோறு மாதிரி பரவலாயிடுச்சு.

ஃபிஷ்... விஷ்..

கொட்டை பாக்கை வெட்டி, வெத்தலையில கட்டி, வாயில போட்ட பாட்டி களோட பேரன் பேத்திகள் இப்ப பாக்ஸுல கட்டிவர, ரெட் வெல்வெட் கேக்கை வெட்டி கொண்டாடுற கல்ச்சருக்கு மாறிட்டாங்க. பிரச்சினை என்னன்னா, எண்ணெய்ல போட்டு எடுத்தா வடை, எண்ணெயை தேய்ச்சு வளர்த்தா ஜடை இருந்தா ஓகே. ஆனா, கேக்கை வெட்டினோமா, வயித்துக்குள்ள கொட்டினோமான்னு இல்லாம, ரோட்டுல போறவரவங்களுக்கெல்லாம் ஊட்டி விடுவாங்க மேட்டூர் அணையளவுக்கு மனசு கொண்ட பாசக்கார பசங்க. இருட்டுக்குள்ள ஊட்டுனதுனால, நாக்குல திங்க வேண்டிய கேக்கை மூக்குல தின்ன வனுங்க எல்லாம் நாட்டுக்குள்ள இருக்காங்க.

புத்தாண்டு கொண்டாட்டத்துல நாம பொறுத்துக்கொள்ள வேண்டியது ரெண்டு விஷயம். ஒன்னு சுத்தம்; இன்னொண்ணு சத்தம். ‘அவெஞ்சர்ஸ்’ படத்துல நடக்கிற யுத்தத்துலகூட அம்புட்டு சத்தம் இருக்காது. ஆனா, நம்மாளுங்க ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்றேன்னு போடுற காட்டு சத்தம் இருக்கே, அது காதுக்குள்ள வெடிக்கிற வேட்டு சத்தம். வெடக்கோழி முட்டை போட்டு பார்க்கலாம், விராட் கோலி கட்டை போட்டு பார்க்க முடியுமா? அது மாதிரிதான், புதுச்சேரிக்காரங்க ஃபிஷ் சமைக்கிறத நிறுத்தினாலும் நிறுத்துவாங்க. புத்தாண்டு கொண்டாடுறவங்க ராத்திரி முழுக்க விஷ் பண்றதை நிறுத்தவே மாட்டாங்க.

பைக் ரவுசு

காதலிக்கிற பொண்ணுக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்றேன்னு தைரியமா போயிட்டு, அந்தப் பொண்ணு வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு விஷ் பண்ணிட்டு வந்தவனெல்லாம் இன்னமும் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்காங்க. கறுப்பா இருந்தா எள்ளு, கொஞ்சம் கலரா இருந்தா கொள்ளுவோட வித்தியாசம் பிரிக்காம, டைட் மப்புல மல்லாந்து உளறிக்கிட்டு உருளுற மனுஷன்ல ஆரம்பிச்சு நைட் டின்னருக்கு குப்பையைக் கிளறிக்கிட்டு இருக்கிற நாய்கள்வரைக்கும் ஒரு ஜீவனையும் விடாம, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தொந்தரவ சிறப்பா செய்வாங்க.

ஃபேஸ்புக்ன்னா லைக்குகளைச் சேர்த்துறதுபோல, புத்தாண்டுன்னா பைக்குகளைச் சேர்த்து ஊர் சுத்துற குரூப் ஊருக்கு ஒன்பது இருக்கும். மாசக்கணக்குல பேசாத பட்டிமன்ற பேச்சாளருக்குக் கிடைச்ச மைக் போல, புத்தாண்டு ராத்திரில இவங்களுக்கு பைக்கு. டிராக்டர்ல மாட்டைப் பூட்டி ஏரோட்டுற மாதிரி, ஹேண்ட் பிரேக்கை போட்டுக்கிட்டே காரோட்டுற மாதிரி, என்ன செய்யறோம்னே தெரியாம நைட்டு முழுக்க பைக்கில சுத்திக்கிட்டே ‘ஹேப்பி நியூ இயர்’ன்னு கத்திகிட்டே இருப்பாங்க. சென்டர் ஸ்டாண்டைத் தரையில தேய்ச்சுக்கிட்டே போறப்ப தீப்பொறி பறக்கும், அதைப் பார்த்து சனி பகவான் சிரிச்சாருன்னா, போற ரோட்டுல நாலஞ்சு குழி இருக்கும். அப்புறமென்ன, சினிமாவுல சாபு சிரில் போட்ட செட்டுகளைவிட உடம்புல அதிகமா கட்டுகள் இருக்கும்.

நியூ இயர் தேசிய கீதம்

காதலுக்கு ஆயிரம் பாட்டுகள் இருக்கலாம், கட்சிகளுக்கு ஆயிரம் பாட்டுக்கள் இருக்கலாம், ஆனா புத்தாண்டுக்கு பாட்டுன்னா, அது ‘சகலகலா வல்லவன்’ல வர ‘இளமை இதோ இதோ தான்...’ முப்பது வருஷத்துக்கு மேல தனியா நின்னு ரன்னடிச்சு இன்னமும் வின்னடிக்கிற பாட்டு இதுதான். விஜய் சேதுபதின்னா தாடி இருக்கணும், வாட்டர் பாட்டில்ன்னா மூடி இருக்கணும், புத்தாண்டு கொண்டாடினவங்கன்னா இந்த பாட்டை ஒரு தடவையாவது பாடி இருக்கணும்.

புத்தாண்டு வந்துட்டாலே நம்மாளுங்களில் பல பேரு 40 பக்க நோட்டு வாங்கி நாலு பக்கத்துக்கு ‘நியூ இயர் ரெசல்யூஷன்’ எழுதுவாங்க. சில புத்தாண்டு சபதங்களைப் பார்க்கிறப்ப, பத்தி சூடம் காட்டி அதைக் கண்ல ஒத்திக்கலாம்ன்னு இருக்கும். சில ரெசல்யூஷனைகளைப் பார்க்கிறப்ப, அந்த பேனாவை கடன் வாங்கி அதே கண்ல குத்திக்கலாம்னும் இருக்கும். லட்ச ரூபாய் கொடுத்தாலும் லவ் பண்ண மாட்டேன்ல ஆரம்பிச்சு, மிச்ச ஒரு ரூபாய்க்குக் கடைக்காரர் தர சாக்லெட்டை வாங்க மாட்டேன்னு வரைக்கும் ரெசல்யூஷன் எடுப்பாங்க. சிம்பிளா சொல்லணும்ன்னா, பல சபதங்கள், புத்தாண்டு சபலங்கள்.

அடடே ரெசல்யூஷன்

அதுல எப்பவும் முதலாவது, ' ஜிம்முக்கு போறேன் ஸ்லிம்மா மாறுறேன்' வகையறாதான் அதிகம். அஞ்சு வருஷத்துல முடியறது ஆட்சின்னா, இது அஞ்சு நாள் மட்டுமே நடக்கும் நாடக காட்சி இது. அதிலும் மொத்தப் பணத்தை முன் பணமா கட்டுறது, மூட்டை கனமா இருக்கேன்னு அவசரத்துக்கு ஓட்டையா கிடக்குற படகுல ஏறுற மாதிரி. பிளாஸ்க்ல காபி இருந்தா ஊத்தி குடி, அது சூடா இருந்தா ஆத்தி குடின்னு முதல்ல ஒரு மாசம் வாக்கிங் போகணும், அப்புறம் ஜாக்கிங் போகணும், அதுக்கப்புறம் ஜிம் ஓனர்ட பீஸ் பத்தி டாக்கிங் போகணும்.

இந்த வருஷம் முழுக்க ஃபேஸ்புக் வரமாட்டேன்னு படம் பிடிக்கும் ஒரு செட்டு. இந்தப் பக்கம் டிக்டாக் செய்ய மாட்டேன்னு அடம்பிடிக்கும் ஒரு செட்டு. புல்லு மேல நடக்கிறப்ப செருப்பு போடலாம், புளி குழம்பு வைக்கிறப்ப பருப்பு போடலாமா? ஒரு வாரம் மட்டுமே ஓடப்போற படத்துக்கு ஒன்பது பக்கம் விளம்பரம் எதுக்கு? சமூக வலைத்தளைங்களில் மேய்வது தவறில்லை, அதில் வாழ்வதுதான் தவறு.

செல்போனை அதிகமா நோண்ட மாட்டேன்னு வேண்டிக்கு வாங்க பலர். அதெல்லாம் மாமியார் சரியில்லைன்னு சாமியாரா போற கதைதான். நெஞ்சு மேல போட்டா சட்டை, நெத்தி மேல போட்டா பட்டைன்னு சிம்பிளா முடியுற விஷயம் இது. தேவையற்ற ஆப்களைத் தூக்கிட்டா, வெட்டியா இருக்கும் கேப் குறைந்து லைஃப் டாப்புக்குப் போகுமே.

மந்திர வார்த்தை

கொண்டாட்டத்தில் குடிப்பது என்பது போய் இப்பலாம் குடிப்பதே கொண்டாட்டமா மாத்திக்கிட்டாங்க சில பேர். தமிழ்நாட்டுல புத்தாண்டு அன்று விக்கிற பாட்டில்களின் எண்ணைக்கையில பாதி கூட போலியோ சொட்டு மருந்து பாட்டில்கள் தீர்ந்ததில்லை. கெட்ட பழக்கங்களுக்கு கொள்ளி வைக்கறேன்னு சபதம் எடுத்துக் கிறவங்க, கார்த்திகை தீபம் வரட்டும் விளக்கை வைப்பேன், கிரகணம் புடிக்கிறப்ப உலக்கை வைப்பேன்னு எதுக்கு தள்ளி வைக்கணும்? அறிவிச்சு செஞ்சாத்தான் போராட்டம், அன்னைக்கே செஞ்சுட்டா வாழ்க்கை பூந்தோட்டம். இந்த வருஷம் அரியர்ஸ் கிளியர் பண்ணனும்னுகூட ரெசல்யூஷன் எடுக்கிறாங்க.

புதுமையா செய்ய சபதம் எடுக்கலாம். கடமையைச் செய்ய எதுக்கு சபதம்? பாட்டையா சட்டை ஓட்டையா இருந்தா எனக்கென்னன்னு நம்ம பணி படிப்பதேன்னு இருந்துட்டா எதுக்கு அரியர் எழுத கொரியர்ல போகணும்?
குடும்பத்தோட கொண்டாடுற பண்டிகைகளுக்கு மத்தியில கும்பலோட கொண்டாடக்கூடியது ஆங்கில புத்தாண்டுதான். எந்தக் கொண்டாட்டத்தில் மத சாயமோ கலாச்சார கலரோ பூசப்பட்டு இருக்கும். ஆனால், நம்மளோட பக்கத்துல நிக்கிறவர் பேரு தெரியாது, ஊரு தெரியாது, சொல்லப்போனா ஆளே யாருன்னே தெரியாது, இருந்தும் நம்மளோட மிங்கிள் பண்ண வைக்கிற மந்திர வார்த்தைதான் 'ஹேப்பி நியூ இயர்'.

ஆக, எல்லோருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’!

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x