Published : 31 Dec 2019 10:59 am

Updated : 31 Dec 2019 11:09 am

 

Published : 31 Dec 2019 10:59 AM
Last Updated : 31 Dec 2019 11:09 AM

40-ம் ஆண்டில் ‘லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்’!

london-review-of-books

சு. அருண் பிரசாத்

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ‘தி டைம்ஸ்’. அதன் இலக்கிய இணைப்பிதழாக ‘டைம்ஸ் லிட்ரரி சப்ளிமெண்ட்’ (TLS) வந்துகொண்டிருந்தது. அது 1979-ல் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தியது. அப்போது ஒரு புதிய இலக்கிய இதழ் தொடங்கப்பட வேண்டும் என்று இலக்கிய விமர்சகர் ஃபிராங் கெர்மோட் ‘அப்சர்வர்’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார்; சில மாதங்களில் ‘தி லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்’ஸின் முதல் இதழ் வெளியானது.


எல்ஆர்பி (LRB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ், லண்டன் யுனிவர்சிடி கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் கார்ல் மில்லர், டைம்ஸ் லிட்ரரி சப்ளிமெண்ட்-ன் முன்னாள் ஆசிரியர் மேரி-கே வில்மெர்ஸ், ஜோனதன் கேப் பதிப்பகத்தில் ஆசிரியரான சுசானா கிளாப் ஆகியோரை நிறுவன ஆசிரியர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. வெளிவரத் தொடங்கி முதல் ஆறு மாதங்களுக்கு, ‘நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்’ஸின் உள் இணைப்பாக வந்துகொண்டிருந்த எல்ஆர்பி, 1980 மே மாதம் தனி இதழாகப் பரிணமித்தது.

கலை விமர்சன இதழ்

ஐரோப்பாவின் முன்னணிக் கலை, இலக்கிய இதழ்களுள் ஒன்றாகத் திகழும் எல்ஆர்பி கலை, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து வரலாறு மற்றும் தத்துவம் வழி உலகிலுள்ள முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகளை வெளியிடுகிறது; புத்தக விமர்சனங்களோடு, நினைவுக் குறிப்புகள் (memoir), ரிபோர்டாஜ் எனப்படும் விரிவான செய்திக் கட்டுரை அலசல்கள், கவிதைகள், கடிதங்கள், நாட்குறிப்பு ஆகியவற்றைத் தாங்கி மாதம் இருமுறை எல்ஆர்பி வெளியாகிறது.

இருபதாம் நூற்றாண்டு மற்றும் சமகாலத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் எனப் பல்வேறு நபர்கள் எல்ஆர்பியில் எழுதியுள்ளனர். இத்தனை பேரின் செறிவான, ஆழமான கட்டுரைகள் வெளிவருவதே உலகம் முழுக்க உள்ள தீவிர வாசகர்களை எப்போதும் எல்ஆர்பி-ஐ வாசிக்கச் செய்கிறது. மேரி-கே வில்மெர்ஸ் 1992-ல் எல்ஆர்பி-யின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 2018-ல் எல்ஆர்பி இதழின் சராசரிச் சுற்று 75,725 பிரதிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எல்ஆர்பியின் தலை மையகம் அமைந்துள்ள லண்டன் ப்ளூம்ஸ்பரியில் 2003 மே மாதம், ‘லண்டன் ரெவ்யூ புக் ஷாப்’ திறக்கப்பட்டது. கருத்துரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் போன்றவை இந்தப் புத்தகக் கடையில் நடைபெறும். எல்ஆர்பி 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்வேளையில், ஃபேபர் பதிப்பகம் ‘லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்: ஆன் இன்கம்ப்ளீட் ஹிஸ்ட்ரி’ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

40-ம் ஆண்டுச் சிறப்பு

எல்ஆர்பி-யின் 40-ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி இதழின் இணையத்துக்குப் புது வடிவம் பெற்றுள்ளது; கட்டணம் செலுத்திய உறுப்பினர்களைத் தவிர மற்றவர்கள் எல்ஆர்பி இணையதளத்தில் மாதத்துக்கு நான்கு கட்டுரைகளை மட்டுமே வாசிக்க இயலும். ஆனால், 40-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் 2020 ஜனவரி 15 வரை தளத்தில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வாசிக்க முடியும்.

இந்த அறிவிப்பைக் கண்டதும் வாசகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போய்விட்டனர். மற்ற பணிகளைவிடுத்து வாசிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருந்த கட்டுரைகள் அனைத்தையும் இப்போது ஒவ்வொன்றாக வாசித்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ் இணையதளம்: https://www.lrb.co.uk/

தி நியூ யார்கர் ‘கேலிச்சித்திர’ சிறப்பிதழ்!

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து வெளியாகும் உலகப் புகழ்பெற்ற வார இதழான ‘தி நியூ யார்க்கரி’ன் 2019 டிசம்பர் 30 இதழ் கேலிச்சித்திரச் சிறப்பிதழாக வெளியாகி உள்ளது.

இதழின் கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் உள்ளிட்ட அனைத்தும் கேலிச்சித்திரங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

வித்தியாசமான, புதுமையான, பரிசோதனை முயற்சிகளுக்குப் பெயர் பெற்ற நியூ யார்க்கர் இதழ் 93 ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதழை வாசிக்க: https://www.newyorker.com/magazine/2019/12/30


லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்London Review of Booksகலை விமர்சன இதழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x