Published : 30 Dec 2019 12:12 PM
Last Updated : 30 Dec 2019 12:12 PM

நவீனத்தின் நாயகன்: புதிய வானம், புதிய பூமி!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலான் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான். அலைபேசிகள் இல்லாத காலம். காசுபோட்டு போன் செய்யும் கடைக்கு (Booth) வந்தான். மாமா தாத்தாவுக்கு போன் செய்தான். அடித்துக்கொண்டேயிருந்தது. யாரும் எடுக்கவில்லை. அடுத்து அம்மாவுக்கு போன். காத்திருந்தது அதிர்ச்சி.

மாமா தாத்தா கனடா நாட்டிலேயே இல்லை. அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார். செய்தித் தொடர்பு வளர்ச்சி அடையாததால், அவர் அம்மாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவன் வரவைப்பற்றி அம்மா எழுதிய கடிதமும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவன் புதிய நாட்டில் சொந்தக் கால்களில் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம்.

கை நிறையப் பணம் இருந்தால் சமாளிக்கலாம். அதுவுமில்லை. தன் சிக்கனச் சேமிப்பிலிருந்து அம்மா கையில் கொடுத்திருந்தது சின்னத் தொகை. அது தீரும்முன் சம்பாதிக்கும் வழி தேட வேண்டும். இருக்கும் காசை ஒவ்வொரு பென்னியாகக் கணக்குப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். முதலில், தங்குவதற்கு மலிவான இடம் வேண்டும்.

மூன்று வேளை சாப்பிடக் காசு கிடையாது. அரைவயிற்று உணவோடு நாட்கள் கடத்த அவன் உடலும், மனமும் தயார். குறைவான வாடகையில் எங்கே தங்கமுடியும் என்று பலரிடம் விசாரித்தான். ஒருவர் ``இளைஞர் ஹாஸ்டலுக்கு” வழி காட்டினார். நீண்ட தூரம். சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

அப்பாடா! வந்தது ஹாஸ்டல். அறை கிடைத்தது. பயணக் களைப்புக்குக் கொஞ்சம் ஆசுவாசம். அடுத்த சில நாட்கள் கால்நடையாகவே மான்ட்ரியால் நகரத்தைச் சுற்றிப் பார்த்தான். இனியும் இங்கே தங்கினால், வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகாது. என்ன செய்யலாம் என்று யோசித்தான். கனடா நாட்டு பஸ்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு சலுகைத் திட்டம் இருந்தது. 100 டாலர்கள் டிக்கெட். நாடு முழுக்க எங்கேயும் போகலாம், விருப்பமான ஊர்களில் ஏறலாம், இறங்கலாம்.

டிக்கெட் வாங்கினான். கனடா நாட்டிலிருந்த அனைத்துச் சொந்தக்காரர்கள் விலாசங்களையும் அம்மா தந்திருந்தார். அவற்றை ஊர்வாரியாகப் பட்டியல் போட்டான். முதலில் எந்த ஊர்? “தென்னாப்பிரிக்கா வரும்முன், ஜாஷூவாத் தாத்தா வசித்த ஸஸ்க்காச்சுவான் மாநிலம். மருத்துவம், அரசியல், சமூக சேவை எனப் பல துறைகளில் கொடிகட்டிப் பறந்த அவருடைய பேரன் தனக்கு உதவி செய்ய யாராவது கிடைப்பார்கள் என்னும் நம்பிக்கை. நட்டாற்றில் தவிப்பவனுக்கு ஒரு நாணல். ஒரே ஒரு பிரச்சினை – ஸஸ்க்காச்சுவான் 1,900 மைல்கள் தூரம். எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது தூரம் என்ன தூரம்?

சில நாட்கள் பஸ் பயணம். ஸஸ்க்காச்சுவான் மாநிலம். முதலில் வந்தது ஸ்விஃப்ட் கரென்ட் (Swift Current) என்னும் ஊர். தூரத்து உறவுக்காரர் வீடு இங்கே இருந்தது. சாலையில் போகும் கார்களை நிறுத்தக் கை காட்டினான். ஒரு நல்லவர், சொந்தக்காரர் வீட்டில் கொண்டுபோய் விட்டார். ஜாஷுவாவின் பேரன் என்று அறிமுகம் செய்துகொண்டான். தாத்தாவிடம் அன்பும், மதிப்பும் கொண்ட அவர் ஈலானை மனமார வரவேற்றார். எத்தனை காலம் வேண்டுமானாலும், தங்களோடு இருக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார்.

ஈலானுக்குக் சுயமரியாதை அதிகம். அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. தீவிரமாக வேலை தேடினான். பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்தவனுக்குக் கவர்னர் வேலையும், கலெக்டர் வேலையுமா கிடைக்கும்? தோட்டக்காரன், மரம் அறுப்பவன், கிடங்குகளில் தானியங்கள் அள்ளிக் கொட்டுபவன் எனக் கிடைத்த பணிகளையெல்லாம் செய்தான். வாய்ப்புக் கதவு தானாகத் திறக்கும் என்னும் குணம் அவனுக்கில்லை. தானே உதைத்துத் திறப்பான். ``வேலை வாய்ப்பு அலுவலகத்துக்குப்” போனான். ”பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்த தன்னைப் போன்றவர்களுக்கு எந்த வேலையில் அதிகச் சம்பளம் கிடைக்கும்?” என்று விசாரித்தான்.

கிடைத்தது பதில். மரம் அறுக்கும் ஆலையில் கொதிகலன் (Boiler) அறையில் படிந்திருக்கும் கரி, மண் போன்ற அழுக்குகளைத் துடைத்துச் சுத்தம் செய்யும் வேலை. சீருடை அணிந்துகொண்டு, சிறிய குழாய் வழியாக அறைக்குள் நுழைய வேண்டும். தாங்கமுடியாத சூடு. உடல் வியர்த்து ஊற்றும். முப்பது நிமிடங்களுக்கு மேல் உள்ளே இருக்க முடியாது. குழாய் வழியாக வெளியே வந்து மறுபடியும் உள்ளே. இப்படிப் பல உள்ளே, வெளியே-க்கள். சம்பளம் மணிக்கு 10 டாலர்கள். ஈலான் யோசிக்கவேயில்லை. சம்மதித்தான். வேலையில் சேர்ந்தான்.

அவனோடு 30 பேர். மூன்றாம் நாள். 25 பேர் காணாமல் போனார்கள்; ஐந்தாம் நாள். ஈலானும், இன்னும் இரண்டே இரண்டு பேரும்! தான் சேமித்தால் மட்டுமே, குடும்பம் கனடா வர முடியும், தங்கள் தலைவிதி மாறும் என்று ஈலானுக்குத் தெரியும். எனவே, செலவில் சிக்கனம், சிக்கனம். தினமும் சாப்பாட்டுச் செலவுக்கு ஒரே ஒரு டாலர்தான். காலையில் சூப்பர் மார்க்கெட் போவான். ஒரு* ஹாட் டாக் (Hot Dog) – ம் ஆரஞ்சு ஜூஸும் வாங்குவான். நாள் முழுக்க இது மட்டும்தான்.

* இரு பன்கள் அல்லது ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே, பன்றி இறைச்சி, சிக்கன், மாமிசம், சுவையூட்டும் சாதனங்கள் வைத்த உணவுப் பண்டம். வயிற்றை நிறைக்கும். இத்தனை சிரமங்களோடு பணம் சேமித்தான். அவன் கால் ஊன்றத் தொடங்கியதும், அம்மா தென்னாப்பிரிக்கச் சொத்துகளை விற்றார். மகன் கிம்பல், மகள் டோஸ்க்காவோடு கனடா வந்தார். ஈலானுக்கு அன்பான புகலிடம் தந்த தூரத்து உறவுக்கு மனமார நன்றி சொன்னார்.

குழந்தைகள் எதிர்காலத்துக்குக் கல்வி மிக முக்கியம் என்பதில் அம்மா தெளிவு. ஆகவே, இந்த வசதிகள் இருந்த, அன்ட்டேரியோ (Ontario) மாநிலத்தின் கிங்ஸ்டன் (Kingston) நகரத்தில் வாடகைக்கு வீடு எடுத்தார். விண்வெளி ஆராய்ச்சியில் ஈலானுக்கு ஈடுபாடு. இதற்குத் தேவையான பிசிக்ஸ் பாடத்தைக் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ந்தெடுத்தான். “மகாராணி பல்கலைக் கழகத்தில்” (Queen’s University) சேர்ந்தான்.

ஈலானும் தம்பி கிம்பலும் ஒருவருக்கொருவர் ஏற்ற ஜோடி. கனடா புதிய நாடு. பிரபலங்களோடு பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன வழி? காலையில் நாளிதழை எடுப்பார்கள். அன்றைய தலைப்புச் செய்தி ஆட்களைக் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு போன் செய்து லஞ்சுக்கு அழைப்பார்கள். பெரும்பாலானவர்கள் ‘‘டொக்” என்று கீழே வைப்பார்கள். சகோதரர்கள் கவலைப்படவேயில்லை. முயற்சிகளைத் தொடர்ந்தார்கள்.

முயற்சி திருவினையாக்கியது. ‘‘நோவா ஸ்காட்டியா” (Bank of Nova Scotia) என்னும் பிரபல வங்கியின் உதவித் தலைவர் பீட்டர் நிக்கல்சன் (Peter Nicholson). அவருக்கு போன் செய்தார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்கும் பழக்கமில்லாத அவர் ஏனோ எடுத்தார், பேசினார். இளைஞர்களின் உந்துதல், துணிச்சல் அவரைக் கவர்ந்தது. லஞ்ச் அழைப்பை ஏற்றார். அவர் ரொம்ப பிசி ஆள். ஆகவே, அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்புறமாகத் தேதி தந்தார். அண்ணனும், தம்பியும், உடனேயே சம்மதம் சொன்னார்கள்.

வந்தது அந்த திருநாள். முந்தைய நாள் இரவு, ஈலானுக்கும், கிம்பலுக்கும் தூக்கமே வரவில்லை. பெரிய மனிதரைச் சந்திக்கும் முதல் வாய்ப்பு. அவரோடு எப்படிப் பழக வேண்டும் என்று அம்மாவின் மூட்டை மூட்டையான அறிவுரைகள். பொழுது புலர்ந்தவுடனேயே ரெடியானார்கள். மூன்று மணிநேர ரெயில் பயணம். அம்மா குறிப்பாகச் சொல்லியிருந்தார், ``காலம் தவறாமை மிக முக்கியம். பீட்டர் நிக்கல்சன் சொன்ன நேரத்துக்கு முன்னாடி போனாலும், பின்னாடி போனாலும் அவருக்குச் சிரமம். அதைச் செய்யக் கூடாது.”

“டாண்” என்று இருவரும், பீட்டர் நிக்கல்சன் குறிப்பிட்ட நிமிடம் தப்பாமல் அவர் அலுவலக அறையின் முன்னால். ‘‘இத்தனை பொறுப்பான இளைஞர்களா?” என்று முதல் பார்வையிலேயே இருவரையும் பிடித்தது. பேசப்பேச இன்னும் பிடித்தது. லஞ்ச் முடிந்தது. கோடை விடுமுறையில் நோவா ஸ்காட்டியா வங்கியில் சம்பளத்தோடு பயிற்சி பெறும் வாய்ப்பை ஈலானுக்குத் தந்தார்.

ஈலான் கோடு போடச் சொன்னால், ரோடு மட்டுமல்ல விமான ரன்வேயே போடுபவன். அவனுக்குப் பிறந்த நாள் வந்தது. சாதாரணமாகக் குடும்பத்தோடு கேக் வெட்டுவது மட்டுமே. இப்போது, அம்மாவோடு பேசினான். பார்ட்டி நடத்தச் சொன்னான். பிரத்தியேக அழைப்பு - பீட்டர் நிக்கல்சனின் மகள் கிறிஸ்ட்டிக்கு (Christie). வந்தாள். ஈலான் உதிர்த்த முதல் வாக்கியம் கேட்ட அவள் அதிர்ந்தாள் - “எனக்கு எலெக்ட்ரிக் கார்கள் ரொம்பவும் பிடிக்கும். உனக்கு….?” அழகான பெண்களிடம் அசடு வழியும் இளைஞர்கள் மத்தியில், அறிவியல் பேசிய ஈலானைக் கிறிஸ்ட்டிக்குப் பிடித்தது. ‘‘பார்வைக்கு ஸ்மார்ட். பழகுவதில் வித்தியாசம். அவன் என்னைக் கவர்ந்தான்”.

ஈலானும், கிறிஸ்ட்டியும் அடிக்கடி சந்தித்தார்கள். ஆனால், இது உடல் கவர்ச்சியல்ல, காதல் அல்ல, அறிவுபூர்வமான ஈர்ப்பு. கிறிஸ்ட்டி இப்போது புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர். அவர் நினைவுகூரும் ஒரு சம்பவம் ஈலானின் கேரக்டரைப் புரிந்துகொள்ள உதவும். “நள்ளிரவு. ஈலான் போன். சொன்னான். சாப்பிடுவதற்குக் கணிசமான நேரம் வீணாகிறது. வேறு ஏதாவது வழியில் உடலுக்கு ஊட்டச்சத்துக்களைப் பெற முடிந்தால், நேரம் மிச்சமாகும். உழைக்க அதிக நேரம் கிடைக்கும்.”

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்.* எனக் குமரகுருபரரின் ``நீதிநெறி விளக்கம்” நூலின் வரிகளுக்கு வாழும் உதாரணம்!

* தம் கடமைகளில் கருத்தாக இருப்பவர்கள் உடல்வலி, பசி, தூக்கம் ஆகியவற்றை மறப்பார்கள்; யார் தங்களுக்குத் தீமை செய்தாலும் பொருட்படுத்தமாட்டார்கள்; எத்தனை நேரம் உழைக்கிறோம் என்று நினைக்கமாட்டார்கள்; யார் அவமதித்தாலும் உதறித் தள்ளு
வார்கள்.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x