Published : 30 Dec 2019 11:29 AM
Last Updated : 30 Dec 2019 11:29 AM

எண்ணித் துணிக: ‘கோவிந்தா பைனான்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

உங்களுக்கு குழந்தை பிறந்த போது அதற்கு பெயர் வைக்க நீங்கள் பட்ட பாட்டை நினைத்துப் பாருங்கள். எங்கெல்லாம் தேடினீர்கள். எத்தனை புத்தகங்கள் புரட்டினீர்கள். பிரித்து மேய்ந்து நியூமராலஜி பார்த்து பத்தாத குறைக்கு போவோர் வருவோரை எல்லாம் கேட்டு குடாய்ந்து ஃபோன் நம்பர் தெரிந்திருந்தால் படைத்த பிரம்மனிடமே ஒரு வார்த்தை கேட்கலாமா என்று எத்தனை யோசித்தீர்கள்.

ஸ்டார்ட் அப்பும் பிரசவ வேதனையோடு பிசினஸை பெற்றெடுக்கும் வேலையும் வலியும் தானே. ஆரம்பிக்கும் தொழிலுக்கும் பிராண்டுக்கும் மட்டும் எதற்கு வாயில் வந்ததை, இன்னும் சொல்லப் போனால் வரக்கூடாததையெல்லாம் பெயராக வைக்கிறீர்கள்? பிராண்ட் பெயர் என்றால் என்ன? வாடிக்கையாளரும் பிராண்டும் சந்திக்கும் முதல் சந்திப்பு அதுதான்.

பிராண்டின் தன்மையை, பயனை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் தலைப்புச் செய்தி. பிராண்ட் பயனை வாடிக்கையாளர் மனதில் தீபமாய் ஏற்றும் திரி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து அதை ஓரிரு வார்த்தையில் சுருக்கி எழுதும் சித்து விளையாட்டு. இத்தனை மேட்டர் இருக்கும் பிராண்ட் பெயரை சல்லிசாக நினைத்து உங்களுக்கு தோன்றியதை வைப்பீர்களா, அல்லது அதில் கைதேர்ந்தவர்களிடம் ஒப்படைப்பீர்களா?

இருக்கும் பணத்தை புரட்டிப் போட்டு புதியதாய் ஸ்டார்ட் அப் துவங்குகிறீர்கள். தொழில் கொஞ்சம் வளரட்டும், முதலீடு செய்கிறேன் என்கிறார்கள் முதலீட்டாளர்கள். இருப்பதை வைத்து வாடிக்கையாளர்களை கவரவேண்டிய நிலை. பிராண்டைத் தவிர உங்களிடம் இருப்பது அதன் பெயர் மட்டுமே. அதை கொண்டு தானே அனைவரையும் கவர வேண்டும். கையில் காசில்லாத போது பெயர் தானே பிராண்டை விற்கும் விளம்பர பணியையும் செய்யவெண்டும். இது சாத்தியமா?

பேஷாக சாத்தியம். ஷோக்காக பலர் செய்து நேக்காக வென்றும் இருக்கிறார்கள். கால் வெடிப்புக்கு மருந்து என்பதை கை காசு செலவில்லாமல் ஊர் முழுக்க கூறி வெற்றி பெற்ற ‘கிராக்கிரீம்’ செய்தது பலே கில்லாடித்தனம் தானே. வீட்டிற்குள் செடி வளர்க்க உதவுகிறேன் என்பதை பெயரிலேயே சத்தமாய் கூறி மார்க்கெட்டில் மௌன
மாய் வளர்ந்து வரும் ‘ஃபார்ம்@ஹோம்’ என்ற பிராண்ட் பெயரின் சாமர்த்தியத்தை நீங்களும் பிரயோகிக்கலாமே!

இப்படி சொல்வதால் பிராண்டுக்கு அழகான பெயர் வைக்க வேண்டுமா என்று கேட்காதீர்கள். அழகானது, அழகில்லாதது என்று பிராண்ட் பெயருக்கு எதுவும் கிடையாது. பிராண்ட் பெயர் அதன் தன்மைக்கோ, பயனுக்கோ அல்லது பொருள் பிரிவுக்கோ பொருத்தமாய் இருக்க வேண்டும். அவ்வளவே. சிவப்பாய் அழகாய் இருக்க ஆசையென்றால் என்னை வாங்கி சருமத்தில் தேய் என்று பெயரிலேயே கூறும் ‘ஃபேர் அண்டு லவ்லி’ அழகான பெயரா அல்லது பொருத்தமான பெயரா?

மார்க்கெட்டிங்கில் மாற்ற கூடாதது, எளிதில் மாற்ற முடியாதது பிராண்ட் பெயர் தான். அதனால் தான் பிராண்ட் பெயரை ஒரு முறைக்கு பல முறை யோசித்து, ஆற அமர அலசியெடுத்து, ஆழமாக சிந்தித்து, தீர்க்கமாய் வையுங்கள். ‘நீ இப்படி சொல்கிறாய், ஆனால் அர்த்தமே இல்லாத டாடா, பிர்லா என்றெல்லாம் பெயர் வைத்து அவர்கள் வெற்றி பெறவில்லையா’ என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அந்த பிராண்டுகள் பிறந்து வளர்ந்த காலம் வேறு. அக்காலத்தில் போட்டி இல்லை. போட்டுத்தள்ள பல பிராண்டுகள் இல்லை. இருந்த ஒரு சில பொருள் பிரிவுகளில் இருந்ததோ ஒன்றிரண்டு பிராண்டுகள் மட்டுமே. அந்த காலத்தில் புடவை கடைக்கு ‘உள்ளே வராதே’ என்று பெயர் வைத்திருந்தால் கூட விற்றிருக்கும். ஆகவே பழைய பிராண்டுகளை பார்த்து சூடு போட்டுக்கொள்ளாதீர்கள்.

உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு பெயர் வைக்கும் போது சில மாபாதகங்களை செய்து தொலைக்காதீர்கள். சென்டி மெண்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் பண்ணுவது. அப்பா பெயரை வைப்பேன், அம்மா பெயர்தான் ராசி, குலதெய்வத்தின் பெயர் எனக்கு குட்லக் என்று பெயர் வைக்காதீர்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் ஸ்டார்ட் அப் பிழைக்கவாவது அப்படி செய்யாதீர்கள்.

அது போல் நியூமராலஜி பார்த்துத் தான் பெயர் வைப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். உங்கள் பெயருக்கு வேண்டுமானால் நியூமராலஜி முதல் பயாலஜி வரை எதையாவது பாருங்கள். யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். கேட்டு வாங்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நல்ல பெயரை கூட நியூமராலஜி பார்க்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாத சொற்களைச் சேர்த்து யாருக்கும் எதுவும் புரியாத வண்ணம் பெயரிடாதீர்கள்.

பொருத்தமான பெயர் வைத்தால் ஸ்டார்ட் அப்பிய்த்துக்கொண்டு விற்குமா என்று சிலர் குதர்க்கமாய் கேட்கலாம். பொருத்தமில்லாத பெயர் வைத்தாலும் பிராண்டை விற்க முடியும். தாராளாய் வையுங்கள். என்ன, அப்பெயரை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க நிறைய செலவழிக்க வேண்டிவரும்.

பணம் இருந்து அதை செலவழித்து ஒழிப்பேன் என்று நேர்த்திக் கடன் இருந்தால் பேஷாய் செலவழியுங்கள். ஒழுங்காய் பெயர் வைத்தால்தான் விற்குமா என்று கேட்கும் குதர்க்கவாதிகளுக்கு அடியேனின் சின்ன கிராஸ் கேள்வி. பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்து அதற்கு ‘கோவிந்தா பைனான்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா?

பொருட்கள் முதல் சினிமா வரை பெயருக்கு ஒரு பரபரப்பும் பிரகாசமும் இருக்கவே செய்கிறது. ஒரு திரைப்படத்துக்கு ‘பேட்டரி’ என்று பெயர் இருந்தால் அது எப்பேற்பட்ட படமாக இருக்கும் என்ற யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா. செல்போன் பேட்டரி பற்றிய கதையா இல்லை ஆக்ஷன் படமா என்று கேள்விகள் மனதில் எழுகிறதா இல்லையா? அப்படத்தை பார்க்கிறீர்களோ இல்லையோ படத்தின் பெயர் உங்களை யோசிக்க வைக்கிறதல்லவா. அதுதான் பிராண்ட் பெயரின் மகாத்மியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x