Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

விடைபெறும் 2019: மாற்றத்தின் முகங்கள்

தொகுப்பு:க்ருஷ்ணி

முப்பது கோடி முகங்கள் இன்று நூறு கோடியைத் தாண்டியதல்ல சாதனை; அவற்றில் எத்தனை முகங்கள் நமக்கு நம்பிக்கையைத் தந்தன என்பதே சாதனை. அதிலும் எத்தனை பெண் முகங்கள் இருக்கின்றன என்பதே நாம் அடைந்திருக்கும் பாலினச் சமத்துவத்துக்குச் சான்று. 2019-ல் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்த
முகங்களில் சில இவை:

மூவர் கூட்டணி

ஆண்கள் அரசாளும் களமாகப் பார்க்கப்படும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துவருகிறது. 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் குறிப்பிட்ட சதவீதத்தில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின. தமிழகத்தின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.

சர்வதேச அளவில் நடந்த பெண் அரசியல்வாதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றபோது ஜோதிமணி அணிந்திருந்த ஆடை குறித்துச் சிலர் அநாகரிகமாக விமர்சிக்க, “எந்த இடத்துக்கு எந்த ஆடையை அணிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். தவிர, இது என் தனிப்பட்ட உரிமை; நீங்கள் அமைதியாக இருங்கள்” எனத் தன் கருத்தைப் பதிவிட்டது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

விண்ணைத் தொட்ட சாதனை

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த உதய கீர்த்திகா, விண்வெளி செல்லத் தேர்வு செய்யப்பட்டு, சாதிக்க எதுவுமே தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். போலந்தில் உள்ள பயிற்சி மையத்தால் தேர்வு செய்யப்பட்ட 20 பேரில் இந்தியா சார்பில் தேர்வானவர் உதய கீர்த்திகா மட்டுமே. கிராமச் சூழல், வீழ்ந்தே கிடக்கும் குடும்பப் பொருளாதாரம், வழிகாட்டல் இல்லாத தடுமாற்றம் என அணிவகுத்து நின்ற தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து இந்தச் சாதனையை உதய கீர்த்திகா நிகழ்த்தியிருக்கிறார்.

தேசிய கவுரவம்

எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் ஒரு நதிபோல் தன்போக்கில் பொதுப் பணிகளில் ஈடுபட்டுவரும் சின்னப்பிள்ளைக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் என்பது சின்னப்பிள்ளை ஆற்றிவரும் சேவைக்குச் சான்று. மதுரையைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராமப்புறப் பெண்களின் நல்வாழ்வுக் காகப் பணியாற்றிவருகிறார். மதுக்கடைகளுக்கு எதிராகவும் கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருகிறார்.

முதல் பெருமிதம்

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பரத நாட்டியக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ். சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்ற முதல் திருநங்கை பரத நாட்டியக் கலைஞர் இவர். தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் நர்த்தகியின் உத்வேகத்துக்கான அங்கீகாரங்களே இப்படியான விருதுகள்.

வியக்கவைத்த விஞ்ஞானிகள்

வனிதா முத்தையா, ரிது கரிதால் இருவரும் சந்திராயன் - 2 விண்கல உருவாக்கப் பணியில் முக்கியப் பணியாற்றி, பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு என்ற பிற்போக்குக் கருத்துக்குப் பதில் சொல்லியிருக்கின்றனர். வனிதா முத்தையா, இஸ்ரோவில் திட்ட இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இஸ்ரோவில் பல பெண் விஞ்ஞானிகள் பணியாற்றினாலும் ‘ராக்கெட் பெண்’ என்ற தனி அடையாளத்துடன் நாடுமுழுவதும் அறியப்பட்டவர் ரிது கரிதால். விண்கலத்தின் முக்கிய இயந்திரங்களின் பாகங்களைத் தயாரித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது.

அரசியல் அடையாளம்

ஜவாஹர்லால் நேருவின் கொள்ளுப் பேத்தியாகவும் இந்திரா காந்தியின் பேத்தியாகவும் அறியப்பட்டிருந்த பிரியங்கா காந்தி, 2019 நாடளுமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக (கிழக்கு உத்தரப் பிரதேசம்) நியமிக்கப்பட்டதன்மூலம் அரசியலில் தனக்கெனத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். பெயருக்குப் பின்னால் நிரப்பிக்கொள்ளும் கருவியாகப் பதவியைக் கருதாமல் அதற்கான நியாயத்தை அந்தத் தேர்தலில் அவர் செய்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல்கொடுத்துவருகிறார். “முதலில் இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வருவார்கள். பிறகு பல்கலைக்கழகங்களை அழிப்பார்கள். பிறகு நாட்டின் அரசியல் சாசனத்தை அழிப்பார்கள். நீங்கள் அதை எதிர்த்துப் போராடுவீர்கள். உங்களை ‘முட்டாள்’ என்று சொல்வார்கள். ஆனால், இளைஞர்களின் சக்தியை ஒடுக்க முடியாது” என பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியது அவரது அரசியல் நிலைப்பாட்டுக்குச் சான்று.

சாதிக்கப் பிறந்தவர்கள்

ரக்‌ஷிகா - இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த ரக்‌ஷிகா ராஜ், மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில் செவிலிப் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அதேபோல் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆடம் ஹாரி, விமான ஓட்டியாக நியமிக்கப்பட்ட முதல் திருநம்பி என்ற அடையாளத்துடன் நம்பிக்கை தருகிறார்.

வங்கத்துச் சிங்கம்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா, திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாசிசத்தின் ஏழு அறிகுறிகளைச் சுட்டிக்காட்டித் தன் முதல் நாடாளுமன்றப் பேச்சைத் தொடங்கினார். மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து தன் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சி என்று கூறி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

சமூக நிர்ப்பந்தத்துக்கு உரிமையில்லை

வழக்கறிஞர்கள் மேனகா குருசாமி, அருந்ததி கட்ஜு இருவரும், தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களின் பாலியல் சுதந்திரம் குற்றமாகாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்குவதற்குக் காரணமாக இருந்தவர்கள். தங்களைத் தன்பால் ஈர்ப்புகொண்டவர்களாகத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அறிவித்தனர். சட்டத் துறையில் சிறந்து விளங்குவதுடன் சமூக அந்தஸ்தில் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இப்படி அறிவித்தது, தனி மனித உரிமைக்கும் சமூக நிர்ப்பந்தந்துக்கும் தொடர்பில்லை என்பதை உணர்த்தியது.

இந்தியத் தடகள வீராங்கனை டுட்டி சந்த், தான் தன்பாலின உறவில் இருப்பதாக 2019 மே மாதம் அறிவித்தார். இதற்காகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்டார். ஆனால், 100 மீ. ஓட்டத்தில் தன் தேசிய சாதனையையே முறியடித்தவர், ‘என்னைக் கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்’ என ட்வீட் செய்து, பலரது பாராட்டையும் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x