Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

இனி எல்லாம் நலமே 38: நாற்பதுக்கு மேல் கோபம் வருவது ஏன்?

அமுதா ஹரி

இனப்பெருக்கக் காலகட்டத்தில் மாதவிடாய் தொடங்குவது எப்படி ஒரு முக்கியமான நிகழ்வோ அதேபோல் ‘மெனோபாஸ்’ என்கிற மாதவிடாய்ச் சுழற்சி நின்றுபோவதும் முக்கியமானது. மெனோபாஸ் என்பதை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் கட்டம், பெரிமெனோபாஸ் (Perimenopause). இது மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்னதாக உள்ள சில மாதங்கள். ஓராண்டுக்கும் மேலாக மாதவிடாய் வராமல் நின்றுவிட்ட பிறகு வரும் காலகட்டம் மெனோபாஸ். அதற்கு முன்பாக ஓராண்டுக்குச் சீரற்றுப் பலவிதப் பிரச்சினைகளுடன் இருக்கும் காலகட்டத்தை பெரிமெனோபாஸ் என்கிறோம்.

மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிட்ட இரண்டாம் கட்டம் மெனோபாஸ் (menopause). மெனோபாஸ் ஏற்பட்ட பிறகான காலகட்டம் போஸ்ட் மெனோபாஸ் (Post menopause) எனப்படும் மூன்றாம் கட்டம். மாதவிடாய் நின்றுவிட்ட பிறகு 12 மாதங்களில் இருந்து 36 மாதங்கள்வரை இருக்கக்கூடிய கால கட்டத்தை போஸ்ட் மெனோபாஸ் என்கிறோம்.

ஆலோசனை அவசியம்

45-லிருந்து 55 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் மெனோபாஸ் வரலாம். பத்து சதவீதத்தினருக்கு 45 வயதுக்கு முன்னதாகவும் இது நிகழலாம். மற்றொரு பத்து சதவீதத்தினருக்கு 55 வயதைக் கடந்த பிறகும் வரலாம். இவற்றில் தவறில்லை. 80 முதல் 90 சதவீதப் பெண்களுக்கு 45 வயதிலிருந்து 55 வயதுக்குள் மெனோபாஸ் நிகழும். பொதுவாக, இது பற்றிப் பெண்களுக்குத் தெரிந்திருந்தாலும் 12 மாதங்களுக்கு மாதவிடாய் வராதவர்கள் மெனோபாஸ் வந்துவிட்டதை மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை மூலமோ, ஸ்கேன் மூலமோ உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மெனோபாஸ் தொடர்பான சில விஷயங்களைப் புரிந்துகொள்வது நல்லது. மாதவிடாய் முற்றிலும் நிற்பதற்கு முன்னதாகப் பலருக்கும் அதிகப்படியான உதிரப்போக்கு வரலாம். மாதவிடாய் சீரற்று வரலாம். உடன் இருப்பவர்கள் பல உதாரணங்களைச் சொல்லி, இது மெனோபாஸ்தான், இதற்காக டாக்டரிடம் போக வேண்டியதில்லை, ஆறு மாதத்தில் நின்றுவிடும் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டு, ஒரேயடியாக அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

கட்டுக்கதைகளை ஒதுக்குவோம்

என்னிடம் வந்த ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளாக மாதவிடாய் சீரற்று இருந்திருக்கிறது. அதிகப்படியான உதிரப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு போன்றவை இருந்தும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, மருத்துவரைப் பார்க்காமல் இருந்திருக்கிறார். மாதவிடாய் நின்றுவிடும் என்று மூன்று ஆண்டுகளாக மருத்துவரைப் பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார்.

என்னிடம் வந்தபோது நோயுற்றவர்போல் ஒடுங்கிப்போய் இருந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்குக் கருப்பையில் பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. பிறகு அந்தக் கட்டியை அகற்றினோம். ஆகவே, பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் அதிகப்படியான உதிரப்போக்கு, சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி போன்றவை இருந்தால் மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. மற்றவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு நம் உடல்நலத்தை உதாசீனப்படுத்தக் கூடாது.

உணர்வுகள் ஊசலாடும்

மெனோபாஸ் வரக்கூடிய காலகட்டத்தில் சிலருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. சிலருக்கு இது ஒரு கடுமையான காலகட்டமாக இருக்கலாம். மெனோபாஸையொட்டி சிலருக்கு ‘ஹாட் ஃபிளஷ்’ ஏற்படலாம். இரவில் தூக்கத்தில் திடீரென்று வியர்த்துக்கொட்டும். படபடப்பாக உணர்வார்கள். தூக்கம் வெகுவாகக் கெடும். சிலருக்குப் பிறப்புறுப்பு உலர்ந்து போகும்.

இனப்பெருக்கக் காலகட்டத்தில் இருக்கும்போது, ஈஸ்ட்ரோஜன் சுரப்பால், பிறப்புறுப்பின் பாதை ஈரத்தன்மையுடன் இருக்கும். மெனோபாஸ் பருவத்தையொட்டி ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் இது ஏற்படும். அந்த நாட்களில் உறவில் ஈடுபடும்போது வலி உண்டாகலாம். பிறப்புறுப்பு ஈரப்பசையுடன் இருப்பதால், அந்தப் பகுதிகளில் உள்ள திசுக்களில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவால் கிருமித்தொற்று ஏற்படக்கூடும்.

சிலருக்கு முடி அதிகமாகக் கொட்டும். உணர்வுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதை Mood Swings (உணர்வு ஊசலாட்டங்கள்) என்று சொல்வார்கள். கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, போன்ற உணர்வு ஊசலாட்டங்கள் மனத்தைப் பெரிதும் பாதிக்கும். மனச்சோர்வு வரும். தோல் உலர்ந்து போகலாம். மிகச் சோர்வாக உணரலாம். அடிக்கடி தலைவலி வரலாம். சிறுநீர்த்தடத் தொற்றுகள் வரலாம். மலச்சிக்கல் ஏற்படலாம்.

பெண்களும் அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களும் மற்றவர்களும் ஏன் மெனோபாஸ் இப்படியெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்தில் மாதவிடாய்ச் சுழற்சியின் ஆரம்பத்தைக் கொண்டாடுகி றார்கள். ஆனால், மெனோபாஸ் என்பதைப் பலரும், பெண்களை நாம் அரவணைத்துக் கொள்வதற்கான காலமாகப் பார்ப்பதில்லை. அம்மா, அக்கா எனத் தன் வீட்டுப் பெண்களைச் சொல்லி அவர்கள் சமாளிக்கவில்லையா, நீதான் பெரிதுபடுத்துகிறாய் எனக் கேட்கிறவர்களும் உண்டு.

பெண்களும் மாதவிடாய் என்பது பேசாப் பொருளாக உள்ள சமூகத்தில், மெனோபாஸ் காலத்தையொட்டித் தனக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, அசௌகரியங்களை அது மிகப் பெரிதாகும் வரை பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை. ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்டீரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடியவை. மெனோபாஸ் காலத்தையொட்டி கருப்பை அவற்றைச் சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன.

தீர்வா, பிரச்சினையா?

மெனோபாஸ் காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடையாதா என்றால் உண்டு. மிகத் தீவிரமான பிரச்சினை உள்ளவர்களுக்கு Hormone Replacement Therapy (HRT) வழங்கலாம். ஈஸ்ட்ரோஜன்தான் கொடுப்பார்கள். ஒட்டிக் கொள்வது மாதிரி அல்லது ஆயின்மெண்ட் மாதிரி கொடுப்பார்கள். பிறப்புறுப்பு உலர்ந்து போவதற்குத் தீர்வாக ஈஸ்ட்ரோஜன் ஜெல் கொடுக்கலாம். கால்சியம், வைட்டமின்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். இவை குறையும்போது எலும்புகள் தேய்ந்து மிருதுவாக ஆகிவிடலாம். அதனால், வைட்டமின் மாத்திரைகளைக் கொடுக்கலாம்.

மன ஊசலாட்டத்தால் பெரிதாகப் பாதிக்கப்படும் நிலை வந்தால் அப்போதும் HRT சிகிச்சையை அளிக்கலாம். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டதுமே வேலை செய்ய ஆரம்பித்துவிடாது. பிரச்சினை சீராக ஒரு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட ஆகலாம். அதேபோல் மனரீதியான பிரச்சினை களுக்கும் சிகிச்சை கொடுக்க வேண்டி இருந்தால் அதைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், HRT பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. இதில் சில பின்விளைவுகள் இருப்பதால் வலி அதிகப் பிரச்சினையா, HRT எடுத்துக்கொள்வது அதிகப் பிரச்சினையா என்று யோசித்து முடிவு செய்ய வேண்டும். தெரபி எடுத்துக்கொள்பவர்கள் தகுந்த இடைவெளிகளில் மருத்துவரிடம் கலந்தா லோசித்து மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும். எவ்வளவு நாட்களுக்கு HRT சிகிச்சை எடுப்பது என்று முடிவெடுப்பது நல்லது.

எப்படிக் கையாள்வது?

1. நல்ல உணவு: ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். துரித உணவு, உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். சோயா, சேனைக்கிழங்கு போன்றவை நல்லது.
2. எடையைச் சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான எடை, குறைவான எடை இரண்டுமே நல்லதல்ல. எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படக்கூடும். அதனால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
3. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. சரியான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
5. பலருக்குத் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தியானம் செய்வது, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, இளைப்பாறுதல் போன்றவை மனத்தை அமைதிப்படுத்த உதவும்.
6. டீ, காபியை மெனோபாஸ் காலகட்டத்தில் குறைத்தல் அல்லது விட்டுவிடுதல் நல்லது.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x