Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

நட்சத்திர நிழல்கள் 38: காயத்ரியின் வாழ்வே மாயம்தான்

செல்லப்பா

பெண்களின் வாழ்வில் கவலை மண்டிக் கிடக்கிறதா, இயல்பான வருத்தங்களை அவர்கள் காவிய சோகங்களாக வரித்துக்கொள்கிறார்களா? பெரும்பாலான பெண்கள் தங்கள் பாடுகளைப் பகிர்ந்துகொள்ள, தங்களது கதைகளைக் காதுகொடுத்துக் கேட்க ஒரு நல்ல துணையைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களது தேவை தங்களது கரத்தை ஆறுதலாகப் பிடித்தபடி தங்கள் கஷ்ட நஷ்டங்களை உள்ளன்புடன் கேட்கும் ஒரு நட்பு. அதுவே போதும் அவர்களுக்கு. தீர்வுகள்கூடத் தேவையில்லை. தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளும் யானை பலம் அவர்களுக்கு உண்டு. மன வருத்தம் தீரும்வரை உடனிருக்கும் உறவு எனும் நம்பிக்கையில் அவர்கள் மண முடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கை பலிக்கிறதா?

சுகங்களையும் சோகங்களையும் சொல்லித் திரியும் நாவுகளுடன் பிறந்த பெண்கள் அவற்றைக் கேட்கச் செவியில்லாக் கணங்களில் கலங்கிப்போகிறார்கள். தனிமைப்பட்டு விட்டதாகத் துயருறுகிறார்கள். இந்தத் துயர் தீர்க்க முன்வரும் பலர் மாய மான்களாக வேடிக்கை காட்டுகிறார்கள்.

ஊற்றெடுக்கும் நீராகத் தோன்றிக் கானல் நீராகக் காணாமல்போகிறார்கள். இருந்தபோதும் இதுதான் இயல்பென்று பெண்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவற்றைத் தாங்கிக்கொள்கிறார்கள்; தளராமல் நடைபோடுகிறார்கள். அரிதிலும் அரிதாக ‘காயத்ரி’போல் நடந்துகொள்கிறார்கள்.

வில்லனான கணவன்

‘காயத்ரி’யாக ஸ்ரீதேவியும் அவளுடைய கணவன் ராஜ ரத்தினமாக ரஜினிகாந்தும் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் வில்லனாக நடித்த காலத்தில் வெளியான படம் இது. நிஜமாவே அவர் அட்டகாசமான வில்லன்தான் என்பதை உணர்த்தியிருப்பார். விஷம் போன்ற வில்லன் அவர். பார்த்தால் வெறும் திரவமாக ஈர்க்கக்கூடிய வகையில் இருப்பார்.

ஆனால், என்ன ஒரு வில்லத்தனம் எனச் சொல்லத்தக்க வகையில் காரியங்கள் இருக்கும். கடைசிவரை தன்னை வெளிக்காட்டாமலேயே நல்ல கணவனாகக் காட்டிக்கொண்டு வில்லனாக இருப்பது என்றால் சாதாரணமா? கணவன்களில் பலர் இப்படியான ராஜ ரத்தினங்கள்தாம் என்பது வேறு விஷயம். காயத்ரிகளைக் காப்பாற்ற அவர்களே களமிறங்கினால்தான் உண்டு. ‘காயத்ரி’ திரைப்படம் என்பதால் ஆபத்பாந்தவன்கள் புறப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் அம்மா, அப்பா வீட்டில் பெண்கள் இளவரசிகளாக வளர்க்கப்படுவதைப் போல்தான் காயத்ரியும் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டாள். தகுந்த வயது வந்தவுடன் வரன் பார்த்து அவளுக்கு மணமும் முடித்துவைத்தார்கள். கண் நிறைந்த கணவன். சகல வசதிகளும் கொண்ட புகுந்த வீடு. வாழ்வு இனி வளமாகக் கழியும் என்றுதான் அவளும் நினைத்திருப்பாள். ஆனால், அவளது வாழ்வு ஒரு பெரிய சோக நாடகமாகவே நடந்து முடிந்துவிட்டது. அந்த நாடகத்தில் அவளுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பை அவள் அறிந்துகொள்ளாமலே விடைபெற்றுக்கொண்டாள்.

கணவன் வீடு என்பது பெண்களுக்குப் பல நேரம் புதிரானதுதான். காயத்ரி விஷயத்தில் அவள் வாழச் சென்ற வீடு உண்மையிலேயே பல மர்ம அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதன் தன்மையை அவளால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. முதலில் அது வீடுதானா என்பதே ஐயமாக இருக்கிறது. கணவன் தன்னிடம் பிரியமாகத்தான் நடந்துகொள்கிறான். ஆனாலும், எதுவோ சரியில்லை என்ற உள்ளுணர்வு அவளை உறுத்திக்கொண்டே இருக்கும். அந்த உள்ளுணர்வுதான் பெண்களுக்கான பாதுகாப்புக் கேடயம். அறிந்தோ அறியாமலோ அதை அவள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

கண்காணிக்கப்படும் மனைவி

அம்மா தனக்கு எழுதிய கடிதத்தைக் கணவனுடைய அக்கா படித்துப் பார்த்த பின்னரே தருகிறார். தனது தனிப்பட்ட விஷயத்தில் எல்லாம் தலையிடுகிறார்களே என்றிருந்தது அவளுக்கு. கடிதத்தில் சிதம்பர ரகசியம் எதுவும் இல்லை. ஆனால், பிறரது கடிதத்தைப் படிக்கிறோமே என்ற கிலேசம் சிறிதும் இல்லாமல் படிக்கிறார்களே என்று பதைபதைத்தாள் காயத்ரி. தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்த கோபத்தில் அதைக் கிழித்து எறிந்துவிட்டாள். இதுபோன்ற விஷயங்களைக் கணவனிடம் சொன்னாலும் அவனும் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. தான் ஏன் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அவளைக் குடைகிறது.

பிறிதொரு நாள் வீட்டிலேயே அமர்ந்து அக்கா, தம்பி என அனைவரும் குடிக்கிறார்கள். சராசரியான குடும்பத்திலிருந்து வந்த காயத்ரிக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு அவுட் ஹவுஸ் இருக்கிறது. அங்கே செல்ல ஒருநாள் காயத்ரி முயல்கிறாள். ஆனால், செக்யூரிட்டி அவளைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்துகிறான். இதெல்லாம் அவளை அதிகமாகக் குழப்புகின்றன. ராத்திரியில் கணவன் திடீரென எழுந்து எங்கேயோ போய்வருகிறான். இப்படி அடுத்தடுத்து என்னவெல்லாமோ நடக்கின்றன. அவளுடைய பெற்றோர் அவளைப் பார்க்க வருகின்றனர். ஆனால், அப்போதும் தாயைத் தனிமையில் காயத்ரி சந்திக்காமல் பார்த்துக்கொள்கின்றனர்.

ஒருநாள் இரவில் கணவன் எழுந்துசென்ற பிறகு என்ன நடக்கிறது என வேவு பார்க்கும் காயத்ரி அதிர்ந்துபோகிறாள். அங்கே அவள் கண்ட காட்சி ஒரு குடும்பத்தில் நடைபெறும் சம்பவமாகத் தெரியவில்லை. கணவன் வந்ததும் காயத்ரி கேட்கிறாள். அப்படி எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் காயத்ரியின் கற்பனை எனக் கூறி அவன் மழுப்புகிறான். ஒருமுறை அந்த அவுட் ஹவுஸுக்கும் ரகசியமாகச் சென்று பார்த்துவிடுகிறாள். அங்கே ஒரு பெண்ணை அடைத்துவைத்திருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட அவளைப் பார்த்தால் தன் கணவனின் மனைவிபோல் தெரிகிறது. அவளை ஒரு நாள் கொன்றும்விடுகிறார்கள். அதையும் காயத்ரி பார்த்துவிடுகிறாள்.

உத்தமமா, உன்மத்தமா?

கணவனிடம் இவை குறித்து கேட்டபோது அவன் வழக்கம்போல் ஒரு கதையைக் கூறுகிறான். இனியும் அந்த வீட்டில் இருப்பது தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி தப்பிக்க முயல்கிறாள். ஆனால், மாட்டிக்கொள்கிறாள். இப்போது முன்பைவிடக் கெடுபிடி அதிகமாகிவிட்டது. தான் ஓர் ஆபத்தான சூழலில் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பது மட்டும் காயத்ரியின் புத்தியில் உறைத்தது.

இதிலிருந்து சாமர்த்தியமாகத்தான் தப்பிக்க வேண்டும் என்பதால் நிதானமாக யோசிக்கிறாள். தனது கதையை முழுவதும் ஒரு நோட்டில் எழுதி பழைய பேப்பர்களுக்கிடையே வைத்துவிடுகிறாள். அதைப் பார்த்து யாராவது ஒருவர் வந்து தன்னைக் காப்பாற்றிவிடுவார் எனும் நம்பிக்கையில் அப்படிச் செய்கிறாள்.

அதேபோல் அவளைக் காப்பாற்ற இருவர் வருகிறார்கள். ஆனால், அதற்குள் தன்னை மாய்த்துக்கொள்கிறாள் காயத்ரி. தன் கணவனே தன் படுக்கையறையில் இன்னொரு ஆடவனை அனுமதித்துவிடுகிறான் என்பதால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழி தெரியாமல் தன்னைத்தானே கொன்றுவிடுகிறாள்.

படுக்கையறையில் கணவனுடன் அவள் இருந்த ஒவ்வொரு நிமிடமும் படமாக்கப்பட்டுப் பணமாக்கப்பட்டுவிடுகிறது என்பது அவளுக்குத் தெரியாது. அது தெரிந்தால் காயத்ரி எத்தனை முறை சாவாளோ? தற்கொலை செய்துகொண்டதால் காயத்ரி உத்தமி எனச் சொல்லப்பட்டுவிடுகிறாள். ஆனால், அவளது செயல் உன்மத்தத்தின் விளைவு என்று நாம் சொல்கிறோம், அவள் அறிவாளா?

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x