Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

வாசிப்பை நேசிப்போம்: தனிமைக்குத் துணை

கொடுமையான தனிமையில்தான் வாசிப்பு தொடங்கியது. என் கணவர் சிறந்த புத்தக வாசிப்பாளர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 42 வயதில் காலமானார். அவரது பிரிவு எனக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதிலிருந்து விடுபட எழுத்தாளர் சுகா எழுதிய ‘உபச்சாரம்’ என்னும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். அந்தப் புத்தகம், என் தனிமையின் கொடுமைக்கு வடிகாலாய் அமைந்தது.

37 ஆண்டுகளாகப் புத்தகங்களை வாசிக்காதது எவ்வளவு பெரிய தவறு எனபதை ‘உபச்சாரம்’ நாவல் உணர்த்தியது. இரா. நாறும்பூநாதன் எழுதிய ‘இலை உதிர்வதைப் போல’ புத்தகத்தில் வரும் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ சிறுகதை என் மனத்தில் பதிந்த கதை. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கதாவிலாசம்’ புத்தகத்தைத் தற்போது வாசித்துவருகிறேன். என் கணவருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் மீது அவ்வளவு ஈடுபாடு. புத்தக அலமாரியில் எஸ்.ராவின் எண்ணற்ற புத்தகங்களை வைத்துள்ளார். கணவரின் மறைவுக்குப் பிறகு என் தனிமைக்குத் துணையாகவும் என் கணவரின் நினைவாகவும் இருப்பவை புத்தகங்களே.

- இராணி கணபதிசுப்ரமணியன், தென்காசி.

தமிழுக்கு மாற்றிய எழுத்து

புத்தகங்களைக் காணும்போதெல்லாம் ஏதோ ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. அனைத்தையும் வாசித்துவிட வேண்டும் என்ற பேராசை. இன்று இணையதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு உள்ளபோதிலும், புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிக்கும் நிறைவுக்கு ஈடாகாது. தொடக்கப் பள்ளிக்குச் சென்ற காலத்தில் அம்மாவுடன் கடைக்குச் சென்று சிறுவர்களுக்கான மாத இதழ்களில் வரும் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பி வாசிப்பேன்.

பள்ளிப் போட்டிகளில் பரிசாகக் கிடைத்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வேன். உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது நண்பர்கள் வாயிலாக அறிஞர் சிலரின் வாழ்க்கை முறையை வாசிக்க நேர்ந்தது. அப்போது நானும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். இளங்கலை இறுதியாண்டில்தான் புத்தகங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. அப்போதுதான் அப்துல் கலாம், மலாலா போன்றோர் குறித்த புத்தகங்களை வாசித்தேன். நான் அதிகமாக வாசிக்க எனக்குத் தூண்டுதலாக இருந்தவள் என் சகோதரி.

அவள் ஒரு நாள்கூட வாசிக்காமல் உறங்கச் செல்வதில்லை. அவளும் நானும் உலகிலுள்ள எல்லாச் சிறந்த நூல்களை வாசிப்பது குறித்து விவாதிப்போம். ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது எதையோ சாதித்ததைப் போன்ற உணர்வு ஏற்படும். ‘Tuesdays with Morrie’, ‘My Journey’, ‘The Kite Runner’, ‘Shiva Trilogy’, ‘What can I give’ உள்ளிட்டவை எனக்குப் பிடித்த ஆங்கிலப் புத்தகங்கள்.

ஆங்கில நூல்களை அதிகம் வாசித்த எனக்குத் தமிழ் நூல்களின் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியவற்றில் நக்கீரனின் ‘காடோடி’ நாவல் முக்கியமானது. காட்டில் வாழும் உயிரினங்களை எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதையும் நாகரிகம் என்ற பெயரில் தொல்குடி மக்களுக்கு நிகழும் அநீதிகளையும் பற்றிப் படித்தபோது வேதனையாக இருந்தது.

ஒவ்வொரு நிகழ்வையும் நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எழுதியுள்ளார் நக்கீரன். எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் புத்தகங்களை வாசிக்கும்போதும் அவரது உரைகளைக் கேட்கும் போதும் தமிழுக்குக் கிடைத்த எழுத்தாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப்போதெல்லாம் ஆங்கில நூல்களைக் காட்டிலும் தமிழ் நூல்களைத்தான் அதிகம் விரும்பி வாசிக்கிறேன்.

முன்பெல்லாம் எனக்கு என்ன பரிசளிப்பது என்று நண்பர்கள் குழம்புவார்கள். ஆனால், இப்போது பரிசென்றாலே புத்தகம் மட்டும்தான் அவர்களுடைய தேர்வு. வாழ்க்கைப் பயணத்தில் யார் உடன் இருப்பினும் இல்லாவிடினும் நல்ல தோழியாக, வழிகாட்டியாகப் புத்தகங்கள் எப்போதும் உடன் இருக்கும். வாசிப்புப் பழக்கத்தை இறுதிவரை தொடர வேண்டும் என்பதே என் ஆசை.

- ஷெர்ஜின் டேவிஸ், கன்னியாகுமரி

வாசிப்புக்கு ஓய்வில்லை

சிறு வயது முதலே வானொலி கேட்பதும் பஞ்சதந்திரக் கதைகள் படிப்பதும் நாளிதழ்கள் வாசிப்பதும் என் தினசரி பழக்கங்களில் ஒன்று. பள்ளி நூலகத்தில் உட்கார்ந்து கதைகளைப் படித்துக்கொண்டே பசியை மறந்திருந்த நாட்கள் என் நினைவிலிருந்து அகலாதவை. பள்ளியில் தமிழ்வழியில் படித்த நான் கல்லூரியில் ஆங்கிலவழிக் கற்றல் முறையால் பாடங்களைப் படிக்க முடியாமல் தவித்துப்போனேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு ஆங்கில மொழியைக் கற்றுகொடுத்தவை புத்தகங்களே. தொடர் வாசிப்புதான் என்னைத் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சிறந்து விளங்கச் செய்தது.

வாசிப்பின் மீதான ஆர்வத்தால் ஆசிரியர் பணியிலிருந்து விலகி, நூலகராகப் பணிமாறுதல் வாங்கிக்கொண்டேன். வாசிப்பதே ஒரு பணியாக மாறும்போது அதிலுள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நூலகத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துகொடுத்தேன்.

ஒவ்வொரு நாளும் நூலகத்துக்குள் நுழையும்போது ஒவ்வொரு புத்தகமும் என்னுடன் பேசுவதுபோல் தோன்றும். நாளிதழ்களில் வரும் முக்கியக் கட்டுரைகளைக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் நூலகத்துக்கு வரும் புது மாணவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது நான் ஓய்வு பெற்றுவிட்டாலும் என் வாசிப்புப் பழக்கம் ஓய்வின்றித் தொடர்கிறது.

- கிளாரா அலெக்சாண்டர், கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x