Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 38: பொறணி பேசும் ஆண்டாளு

பாரததேவி

அந்தக் காலத்தில் காட்டு வேலைக்குப் போகாதவர்களையும் பெரிய பானை நிறைய சோறாக்கி வைக்காதவர்களையும் கேவலமாகப் பேசுவார்கள். அப்பவும், “அப்பதைக்கு அப்ப காய்ச்சித் தின்னுட்டு வெறும் பானையக் கழுவி கவுத்துறவ வீட்டுல அன்னம்தேன் கிடைக்குமா, அன்னலச்சுமிதேன் தங்குவாளா, ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஊருவெளுக்குதவன், முடிவெட்டுதவன், ஊர்காலி மாடு மேய்க்குதவன்னு எத்தன பேரு கஞ்சிக்கு வாராக. இப்படி இவ கஞ்சிப் பானையக் கழுவிக் கவுத்தினான்னா இத்தன பேருக்கும் இவ பதில் என்ன சொல்லுவா” என்று பேசுவார்கள்.

வயிற்றை நிரப்பாத சேது

அதோடு, “தன் பிஞ்சையிலகூடப் போய் கால வைக்காதவ விளங்குவாளா, ஒரு செறங்கா (கையளவு) தானியந்தேன் அவ வீட்டுல தங்குமா, முத்தத்து வெயிலு மொகத்தில படாம நித்தமும் மஞ்சக் குளிக்கணுமின்னல்ல அலயுதா” என்று அப்படிப் பேசுவார்கள். ஆனாலும், இதுக்கெல்லாம் சளைத்தவளல்ல ஆண்டாள். தினமும் அவள் புருசன் சேது காலையில் எழுந்ததும் தன் காளைக்குப் பருத்தி விதையை ஆட்டிப் புண்ணாக்குக் கலந்து தண்ணிக்கு விட்டு, காடி நிறைய இரை போட்டுக் காளையின் வயிற்றை நிரப்புவதிலேயே குறியாயிருப்பவன் தன் வயிற்றை நிரப்ப மாட்டான்.

ஒரு ஈயச் சொம்பு நிறையப் புளிச்ச தண்ணியை மோந்து இரண்டு உப்புக் கல்லைப் போட்டுக் கலக்கிக் குடிக்கிறவன் பொண்டாட்டி ஆண்டாளிடம், “நானு பிஞ்சைக்கு உழவுக்குப் போறேன். நீ பொழுதேற பிஞ்சைக்குக் கஞ்சி கொண்டு வந்துரு” என்று சொல்லிவிட்டுப் போவான். ஆனால், ஆண்டாளுக்கு அடுப்புப் பற்ற வைப்பதென்றால் அப்படி ஒரு சோம்பேறித்தனம். எழுந்ததும் ஊரிலிருக்கும் வீடுகளுக்குப் பொறணி பேச வந்துவிடுவாள். யார் வீட்டில் வெதுவெதுவென்று சூடாகக் கஞ்சி காய்ச்சிருக்கிறதோ அவர்கள் வீட்டில் இரண்டு போனி கரைக்கச் சொல்லி வாங்கி வயிறு நிறையக் குடித்துவிடுவாள்.

பிறகு இன்னொரு வீட்டுக்குப் போவாள். இவள் வருவது தெரிந்தாலே சிலர், “அய்யய்யோ ஆண்டாளு வந்து வீட்டுக்குள்ள மொளஞ்சா பேசிக்கிட்டே இருப்பாளே. பெறவு நம்ம காடு கரைக்குப் போவ முடியாதே” என்று பயந்து கதவடைப்பார்கள். ஆனால், ஆண்டாள் விடமாட்டாள். “எக்கா.. எக்கா” என்று அடைத்த கதவைத் திறந்துகொண்டு, “எக்கா விடியமின்ன கதவ அடச்சீன்னா சீதேவி எப்படி வீட்டுக்குள்ள வருவா?” என்று சொல்லிக்கொண்டே போய் நடுவீட்டில் உட்கார்ந்துகொள்வாள்.

சிலர் இவள் வரவை ரொம்பவும் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால், இவள் வீடு வீடாகப் போவதால் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது, மாமியாரும் மருமகளும் ஒத்துப்போகிறார்களா, புருசனும் பொண்டாட்டியும் பிரியமாக இருக்கிறார்களா இல்லையா என்று பல விஷயம் இவளுக்குத் தெரியும் என்பதால் இவளின் பொறணிக்காகக் காத்திருப்பார்கள்.

ஆண்டாளின் அபயக் குரல்

இப்படி இவள் பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது, “ஏன்த்தா ஆண்டாளு உம்பாட்டுக்கு இப்படி விடிய மின்ன வந்து பேசிக்கிட்டு இருக்கயே, உன் புருசனுக்குக் கஞ்சியத் தண்ணியக் காச்சுனயா இல்லையா?” என்று கேட்ட பிறகுதான், “அய்யய்யோ என் புருசன் விடிய மின்னவே கஞ்சியக் காச்சிப் பிஞ்சைக்குக் கொண்டான்னு சொல்லிட்டுப் போனாருக்கா. நானு அயத்தே (மறந்து) போனேன்” என்று வீட்டுக்கு ஓடுவாள்.

இங்கே பிஞ்சையில் இவள் புருசன் சேது உழுது கொண்டிருப்பான். காலை வெயில் சுள்ளென்று உறைக்கும். வயிறு பசியில் கூப்பாடு போடும். இதோ இப்ப வந்துரும் கஞ்சி, அதோ அப்ப வந்துரும் கஞ்சி என்று வழியை வழியைப் பார்ப்பான். பார்த்துக்கொண்டே இருப்பான். ஆனால், ஆண்டாள் மட்டும் வரவே மாட்டாள். இவனுக்குப் பசியும் களைப்புமாகக் கோபம் உச்சி மண்டையைத் தாக்கும். உழவை அப்படியே விட்டுவிட்டு வீட்டை நோக்கி வேகமாய் வருவான்.

ஆண்டாள் அப்போதுதான் அடுப்பைப் பத்த வைத்துக் கொண்டிருப்பாள் அல்லது அரிசியை உலையில் போட்டுக் கொண்டிருப்பாள். கொட்டத்தில் காளை மாடுகளின் சாணி அப்படியே கிடக்கும். வந்ததே சரி என்று அடி அடி என்று அடிக்க நினைப்பான். ஆண்டாள் புருசன் கையை ஓங்கு முன்னமே, “அய்யய்யோ எல்லாரும் ஓடியாங்க. என் புருசன் என்னைக் கொல்லுதான்” என்று அவயக்குரல் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்து விடுவாள்.

சுட்ட கத்தரியும் வெங்காயமும்

ஊர்க்காரர்கள் வந்து சேதுவைத் தடுத்து ஆண்டாளுக்குப் புத்திமதி சொல்லிவிட்டுப் போவார்கள். சேதுவுக்கோ இன்னும் கோபம் ஆறாது. ஆனாலும், அங்கே உழவுக்காட்டில் காளைகள் ஏரைச் சுமந்தவாறு வெய்யிலில் நிற்பதை நினைத்து இன்னொரு சொம்பு புளிச்சத் தண்ணியை மோந்து குடித்துவிட்டு, “இன்னும் அர நாளியல்ல பிஞ்சைக்குக் கஞ்சி வந்து சேரணும்.

இல்லே...” என்று முடிக்காமல் கோபத்தின் முடிச்சோடு போவான். அதன் பிறகுதான் இவள் வேண்டா வெறுப்பாய்க் கஞ்சியைக் காய்ச்சி, தூக்குப் போனியில் ஊத்திக்கொண்டு போவாள். அதிலும் அவளுக்கு வெஞ்ஞனம் வைக்க நேரம் இருக்காது. ஒரு புளித்துவையல் அல்லது சுட்ட வாளைக்கருவாட்டுத் துண்டு. அதுவும் இல்லையென்றால் கத்தரிக் காயையும் வெங்காயத்தையும் சுட்டு, தக்காளியோடு பிணைந்து எடுத்துக்கொண்டு போவாள்.

வீடு நிறையக் கத்திரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் என்று கிடக்கும். ஆண்டாளுக்கு ஊர் பொறணி பேச நேரம் இருக்குமே தவிர காயறுத்து, அம்மியில் மசால் அரைத்து, வெஞ்ஞனம் வைக்க நேரமிருக்காது. இவள் கஞ்சியைக் கொண்டுபோன பிறகும் சேதுவுக்குக் கோபம் அடங்காது. “வீட்டுக்குள்ள அம்புட்டுக் காயும் கனியும் செழும்பா கெடக்கே. கக்க, கனிக்க வெஞ்ஞனத்த அள்ளி வச்சு சாப்பிடுவோமின்னு கொண்டு வாரயா?” என்று வைது கொண்டே கஞ்சியைக் குடிப்பான். ஆனாலும், ஆண்டாள் புருசனின் வசவுக்கோ அடிக்கோ பயப்படவில்லை. அவளுக்கு எழுந்ததும் வீடு வீடாகப் போய்ப் பொறணி பேச வேண்டும். இல்லாவிட்டால் அவளுக்குத் தலையே வெடித்துவிடும். இப்படியே நடந்தது.

ஒருநாள் சேது, “நீ இப்படியே பிஞ்சயில வேல செய்யிறவனுக்குக் கஞ்சி கொண்டாராம இருந்தீன்னா உன்ன சாட்டக்கம்பால நாலு வெளுப்பு வெளுத்து உன் அப்பன்கிட்ட கொண்டுபோயி விட்டுட்டு வந்துருவேன். பொண்டாட்டி இருந்தும் கஞ்சிக்குக் காத்தா பறக்குதவன் பொண்டாட்டி இல்லேன்னா நிம்மதியா நானே கைகஞ்சியா காச்சிக் குடிச்சிட்டுப் போறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு போனான்.

ஆனால், புருசன் சொன்னதை ஆண்டாள் காதிலேயே வாங்கவில்லை. வழக்கம்போல விடியற்காலையில் புருசன் காட்டுக்குப் போனதும் இவளும் எந்தெந்த வீடு திறந்து இருக்கு என்று அந்தந்த வீட்டுக்குள் நுழைந்து பொறணி பேச ஆரம்பித்துவிட்டாள். இப்படி இவள் பேசிக்கொண்டிருந்தபோது தூரி என்பவள், “எத்தா ஆண்டாளு, இறவைக்குப் போயிருக்க என் புருசனுக்கு நானு கஞ்சி கொண்டு போவணும். நீ இப்பப் போயிட்டு பொளுதூர வாரியா?” என்று கேட்டதும்தான் ஆண்டாளுக்குத் திடுக்கென்றது.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x