Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

பெண்கள் 360: தேர்தலில் திருநங்கைகள்

தொகுப்பு: ரேணுகா

தமிழகத்தில் டிசம்பர் 27 முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (டிசம்பர் 30) நடைபெறவுள்ளது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தேர்தலில் திருநங்கைகளான நந்தினி, ரியா, அழகர்சாமி (எ) அழகு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பொதுவாகத் தேர்தல்களில் போட்டியிடும் திருநங்கைகள் பெரும்பாலும் சுயேச்சையாகத்தான் போட்டியிடுவார்கள்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாகப் பெரிய கட்சிகளில் ஒன்றான திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் இரண்டாம் வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரியா என்ற திருநங்கை போட்டியிடுகிறார். அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி ஊராட்சியின் ஒன்றாம் வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியில் வசிக்கும் நந்தினி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். விருதுநகர் சின்னபேராலி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (எ) அழகு பட்டாணி, பெரியபேராலி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் முதல் திருநங்கை அழகு.

பாலியல் புகாரில் முதியவர் கைது

குழந்தைகளைத் தவறாகச் சித்தரிக்கும் ஆபாசப் படங்களைப் பார்த்ததுடன் அவற்றைப் பார்க்கச் சொல்லி கல்லூரி மாணவிகளைக் கட்டாயப்படுத்திய மோகன் (72) என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நகரில் இதுபோன்ற குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. சூளைமேட்டைச் சேர்ந்த மோகன், வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தன்னுடைய மனைவியுடன் வசித்துவரும் மோகனின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். இவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் தங்கியுள்ள கல்லூரி மாணவிகளிடம் தன்னுடைய கைபேசியில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால், ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் மோகன் குறித்துப் புகார் அளித்துள்ளனர். பாலியல் வக்கிர எண்ணத்துடன் மாணவிகளிடம் அந்தப் படங்களைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதை மோகன் ஒப்புக்கொண்டார். மேலும், அவருடைய கைபேசியில் ஏராளமான ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோகன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்துத் துணிச்சலுடன் புகார் அளிக்கப் பெண்கள் முன்வர வேண்டும் எனக் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பதக்கத்தை மறுத்த மாணவி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ரபிஹா, தனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 27-ம் பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். இவ்விழாவில் 19, 289 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

அவர்களில் 17 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றிருந்தனர். தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற ரபிஹா, அவர்களில் ஒருவர். இவர் பட்டம் வாங்குவதற்காக விழா அரங்கில் சக மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் வருகைக்கு முன்பு மாணவி ரபிஹா காவல் துறையினரால் விழா அரங்கிலிருந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டார். குடியரசுத் தலைவர் சென்ற பிறகுதான் மீண்டும் விழா அரங்கினுள் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் பட்டம் வாங்கச் சென்ற மாணவி ரபிஹா மேடையில் அமர்ந்திருந்த துணைவேந்தரிடம், எந்தவிதக் காரணமும் கூறாமல் குடியரசுத் தலைவர் வருகையின் போது தன்னை ஏன் வெளியே அழைத்துச் சென்றனர் எனக் கேட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் தனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார்.

மாணவி ரபிஹாவின் இந்தச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமியப் பெண்ணாண அவர் ஹிஜாப் அணிந்திருந்ததால்தான் வெளியேற்றப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கான காரணம் ரபிஹாவிடமும் தெரிவிக்கப்படவில்லை.

தாய்ப்பால் தானம்

அகமதாபாத்தை சேர்ந்த ருஷினா என்பவர் குறைப்பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்குத் தன்னுடைய தாய்ப்பாலைத் தானமாக வழங்கிவருகிறார். ருஷினாவுக்கு அண்மையில்தான் ஆண் குழந்தை பிறந்தது. தன் மகனுக்குப் பால் கொடுத்த பின்பும் தனக்குத் தாய்ப்பால் அதிகமாகச் சுரப்பதை ருஷினா உணர்ந்துள்ளார். இந்நிலையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தானம் தரக்கோரிய தகவலை ஃபேஸ்புக்கில் அவர் பார்த்துள்ளார்.

இதையடுத்து 20 மி.லி. பாலை ருஷினா அந்தக் குழந்தைக்குத் தானமாகக் கொடுத்துள்ளார். பின்னர் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் சரியாகச் சுரக்காத, உடல்நலன் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பாலைத் தானமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ருஷினா. தற்போதுவரை அவர் 12 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளார்.

‘ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பின் காரணமாகச் சில பெண்களுக்கு வழக்கத்தைவிட அதிக அளவு தாய்ப்பால் சுரக்கும். இந்த ‘ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம்’ பாதிப்பை உரிய சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ருஷினாவைப் போன்றோர் இதைப் பாதிப்பாகக் கருதாமல் சேவையாக நினைத்துப் பச்சிளம் குழந்தைகள் பலரைக் காப்பாற்றிவருகிறார்கள். இவர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கும் ‘மாம்’ (Mother's Own Milk) என்ற அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x