Published : 28 Dec 2019 11:32 AM
Last Updated : 28 Dec 2019 11:32 AM

ஐந்தில் விதைத்தால் என்றும் நிலைக்கும்

திருவருட் செல்வா

‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது’ எனும் பழமொழி இன்றைய கால கட்டத்துக்கு அதிகத் தேவையான ஒன்று. குழந்தைகளையும் மாணவர்களையும் நெறிப்படுத்தும் தலையாய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. 2020-ல், உலகில் உள்ள இளைஞர்களில், 50 சதவீதத்தினர் இந்தியர்களாகத்தாம் இருப்பர் என்கிறது ஆய்வு ஒன்று.

இவர்களைச் சரிவர நெறிமுறைப் படுத்தினால், நமது சுய வளர்ச்சியும் குடும்பத்தின் வளர்ச்சியும் மேம்பட்டு அதன் பிரதிபலிப்பாக அது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும். ஐந்தில் வளையவைக்கக்கூடிய பட்டியலில் உணவு, ஒழுக்கம், தூக்கம், வாசிப்பு, சுற்றம், சுற்றத்தாரின் நல்லுறவு போன்றன உள்ளன. அவற்றில் முக்கியமானது நமது உணவுப் பழக்கத்தையும் உணவுப் பண்பாட்டையும் குழந்தைகளுக்குப் புகட்டுவதே.

சிறுவயதிலேயே நேரும் பாதிப்புகள்

இன்றைய காலகட்டத்தில், சிறுவயதிலேயே சர்க்கரை நோய், உடல்பருமன், புற்று நோய், மன அழுத்தம், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, கண்பார்வைக் குறைவு, முடி உதிர்தல், இளநரை, வழுக்கை போன்றன ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

குழந்தைகளுக்கு வரக்கூடிய உடல் சார்ந்த, மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு, புற்று நோயில் ஏற்படும் mutation போன்று உணவு முறையில் ஏற்படக்கூடிய mutation முக்கியக் காரணம் எனலாம். இது போன்ற நோய்கள் அனைத்துக்கும் மூல காரணம் உணவு மட்டுமல்ல; சரியான, முறையான உணவுப் பழக்கத்தை, குழந்தைக்குப் பழக்கத் தவறிய பெற்றோரும்தாம்.

எது பிடிக்கும்?

குழந்தைகளை, அவர்கள் போக்கி லேயே சென்றுதான், அவர்களை நம் வசப்படுத்த வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு விருப்பமான முறையில் உணவைத் தயார் செய்து கொடுப்பது நல்லது. பள்ளி செல்லும் குழந்தைக்கு ஊட்டம் நிறைந்த உணவு கொடுக்கிறேன் என வேலை மெனக்கெட்டு அவர்களுக்குப் பிடிக்காத உணவை, அவர்களுக்குப் பிடிக்காத முறையில் செய்து கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலில் நம் பிள்ளைக்கு எந்த வகையான உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

குழந்தைகளின் உணவு

பெரும்பாலான குழந்தைகள், பள்ளியில் மதிய உணவு சரிவர உட்கொள்ள மாட்டார்கள். அதற்குத் தீர்வு, காலையிலேயே அரிசி வகை உணவு, கீரை, காய்கறி போன்றவற்றைக் கொடுப்பது. சிறு குழந்தைகள் எனில் அவர்களுக்கு ஊட்டி விடலாம். பள்ளி செல்லும் அவசரத்தில் அவர்களும் ஒருவாறு சாப்பிட்டு விடுவர். அதுவே அவர்களது அன்றைய தினம் முழுதும் அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வைக்கும். 5-6 வயது கடந்த குழந்தைகள் எனில், அவர்களையே சாப்பிடப் பழக்குவது நல்லது. வீட்டில் ஸ்பூனில் சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டாம்.

ஸ்பூனில் சாப்பிட்டால், கொஞ்சம் சாப்பிட்ட உடனேயே. வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு விடும். அதே போல மாலை பள்ளி முடிந்து வந்த பிறகு, அவர்களுக்குச் சிறு தானிய கஞ்சி, சுண்டல் போன்றவற்றை வெவ்வேறு முறைகளில் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படா விதமாகச் செய்து கொடுக்கலாம். முக்கியமாக value added service போல அதற்கு வெளிப்பூச்செல்லாம் இயற்கை முறைப்படி செய்தால், வெளித்தோற்றத்துக்கு ஈர்க்கப்பட்டுப் பாதி அளவாவது, உள்ளுக்குள் செல்லும்.

அவர்களாய் விருப்பப்பட்டுச் சாப்பிடும்போது மட்டுமே அது முழுமையாய் சத்தாய் அவர்களுக்குச் சேரும். செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை விட்டொழிப்பது நல்லது. அதற்குப் பதில், சிறுதானிய வகையிலோ பாரம்பரிய அரிசி வகையிலோ செய்யப்பட்ட பானங் களைக் குழந்தைப் பருவத்திலேயே கொடுத்துப் பழக்கினால், வளரும் பருவத்தில் அவர்களே அந்த உணவுக்குப் பழகிவிடுவர்.

யார் சிறந்த குழந்தை?

குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, நல்ல திடகாத்திரமான உடற் திண்மையுடன் இருந்தால்போதும். உங்கள் குழந்த சிறந்த உடல் அமைப்பு உடையவராக இருந்தால், பருவ மாற்றங்களில் சின்ன உடல் பிரச்சினைகளுடன், நோய் அவர்களை விட்டுச்செல்லும். சுறுசுறுப்புடன், நோயெதிர்ப்பு ஆற்றலுடன் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். இதன் முழுப் பொறுப்பும் பெருமையும் பெற்றோரையே சாரும்.

எது சத்தான உணவு?

மனிதனின் உடல், அவன் வாழும் இடத்தின் பருவ மாற்றங்களுக்கு ஏற்பவே அமையும். இந்தக் கூற்று, காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பொருந்தும். நாம் வாழும் இடத்தில் (நாட்டில்) விளையும் உணவை நாம் உட்கொள்ளும்போது, நம் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். நம் மொழி, நம் உரிமை போன்று நம் உணவு எனும் எண்ணமும் பெருமையும் நமக்கு ஏற்பட வேண்டும். அப்படி நமக்குத் தோன்றும் தருணமே மாற்றத்துக்கான வெற்றி எனலாம்.

நாமே வழிகாட்டி

பெற்றோரே குழந்தைகளுக்கு எப்போதும் முன்மாதிரி. குழந்தைகளுக்கு முன்பு உணவுகளை ஒதுக்காமல் பெற்றோர் உண்ணத் தொடங்கினால் மட்டுமே, குழந்தை கள் அவர்களைப் பார்த்து உண்ணத் தொடங்குவர். வேண்டா உணவு எது, வேண்டிய உணவு எது என்பதை நமது உணவு உட்கொள்ளும் முறைகளின் மூலம் உணர்த்துவதே, குழந்தைகளின் வளர்ச்சிக்காக நாம் செய்யத் தொடங்கும் முதல் தியாகம் ஆகும்.

உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். ஒரு பருக்கை அரிசி எவ்வாறு உருவாகிறது என்பதைப் படங்களுடன் கூடிய விளக்கங்களாகக் காண்பிக்கலாம். வெளியில் செல்லும் பொழுதும், ஒரு வேளை உணவின்றிக் கஷ்டப்படும் மனிதர்களைக் காண்பித்து, உணவின் பெருமையையும் அருமையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எதனையும் எடுத்துக்காட்டுடன் சொன்னால் மட்டுமே குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதியும்.

நாமே பொறுப்பு

குழந்தைகள் பாலர்களாகும்வரை மட்டுமே நம் கட்டுப்பாட்டில் இருப்பர். குறைந்தது அந்தப் பருவம் வரையிலாவது, நல்ல சத்து நிறைந்த இயற்கை உணவு வகைகளைக் கொடுத்துப் பழக்கினால், அவர்கள் வளரும் பருவத்தில் இக்கால உணவை உண்ணப் பழகினாலும், கூடவே நம் உணவை ஒதுக்கமாட்டார்கள்.

அவ்வாறு பழக்கத் தவறினால், முறையற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளால், அவர்களுடன் சேர்ந்து நாமும் பின்னாளில் வருந்த நேரிடும். குழந்தை தாயின் கருவறையில் இருக்கும்போதே, முறையான உணவுப் பண்பாட்டைக் கருவுற்ற தாய் பின் பற்றினால், பிறக்கும் குழந்தையின் மரபணுவில் அது அமையப் பெறும்.

வளரும் பருவத்தில் நல்லுணவை ஊட்டக் கஷ்டப்பட வேண்டிய தேவையும் பெற்றோருக்கு இருக்காது. எவ்வித நிலையற்ற வெளிப்புற மாயைகள் வந்து மறைந்தாலும், அவர்களது மரபணுவின் மூலம், நம் உணவுப் பண்பாடு தொடர்ந்துகொண்டே இருக்கும்.

தவறவிட்ட பழமை, பண்பாடு போன்றவற்றையும் திரும்ப மீட்டெடுப்பது என்பது மலையைப் புரட்டுவது போன்றது. அதைத் தவறாமல் குழந்தைகளினுள் விதைக்கும் பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது. பொறுப்பை உணர்ந்தால், அதை ஒழுங்கே நிறைவேற்றினால், நாமும், நமது சந்ததியினரும் என்றும் செழிப்போம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: siddhathiru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x