Published : 28 Dec 2019 11:24 AM
Last Updated : 28 Dec 2019 11:24 AM

நல வாழ்வு கேப்ஸ்யூல்: நோயாளியின் ஒத்துழைப்பு தேவையில்லை

கண் நோயாளியின் கண்பார்வையை அவரது ஒத்துழைப்போ உதவியோ இல்லாமல் பரிசோதிக்கும் கருவியை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து சங்கர நேத்ராலயா மருத்துவமனை உருவாக்கியுள்ளது. அறிதிறன் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் கண் பரிசோதனை செய்வதற்கு இது உதவும்.

ஸ்டிமுலஸ் மானிட்டர் எனப்படும் ஒளித்திரையை வெறுமனே பார்த்தால் போதும். பரிசோதிக்கப்படுபவரின் தலையில் மின்முனைகளைப் பொருத்தி அவர்களது மூளையின் வழியாகத் தெரியும் காட்சிகளை ஸ்டிமுலஸ் மானிட்டர் பதிவு செய்துகொள்ளும். இந்த இயந்திரம் சிறியது, பயன்படுத்துவதற்கு எளிமையானதும் மலிவானதுமாகும்.

கிருமிகள் நல்லது

பிறந்த பின்னர் ஒரு வயது வரை கிருமிகளோ, மற்ற தொற்றுகளோ இல்லாத சூழ்நிலையில் தனித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு லூகேமியா என்ற புற்றுநோய் வருவதற்குச் சாத்தியம் அதிகம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் லூகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குப் பிறப்பதற்கு முன் ஏற்படும் மரபணு திடீர் மாற்றம் ஒரு காரணம்; அத்துடன் குழந்தையாக இருக்கும்போது தொற்றுகளே இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள் திடீரென்று தொற்றுகள் பாதிக்கும் சூழலுக்கு வரும்போதும் இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது.

உருது, தமிழில் பாரம்பரிய மருத்துவம்

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் வண்ணம் யுனானி, சித்த மருத்துவக் கல்வியில் உருது, தமிழைக் கற்பிக்கும் மொழியாக்க நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது. ஹோமியோபதி, யுனானி, சித்த மருத்துவக் கல்வி எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் ஐம்பது சதவீத இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளே தீர்மானிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கண்களைக் காக்கும் மருத்துவர்

நல்ல கண்பார்வைத் திறனுக்கான உரிமை உலகில் மற்றவர்களைப் போன்றே ஏழைகளுக்கும் உண்டு. வாழ்க்கை மிகவும் குறுகியது. 30 நபர்களுக்குப் பார்வை தருவதற்காக ஒரு கிராமத்துக்குச் செல்வதற்கு ஆறு மணிநேரம் பிடிக்கிறது. ஆனால், ஒரு நாளின் மதிப்பு அதைவிட வேறென்ன இருக்க முடியும்?

- நேபாள மலைப்பகுதி கிராமங்களுக்கு நடந்துசென்று ஒரு லட்சம் பேருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சண்டுக் ரூயிட்

முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை

அமெரிக்காவில் இனரீதியான பாகுபாடுகள் மிகவும் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கரான டேனியல் ஹேல் வில்லியம் மருத்துவம் படித்து அறுவை சிகிச்சை நிபுணர் ஆனவர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக ப்ராவிடண்ட் மருத்துவமனையையும் பயிற்சிப் பள்ளியையும் இணைத்து சிகாகோவில் உருவாக்கினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குச் சொந்த மான அவர்களே நிர்வகிக்கும் முதல் மருத்துவமனை இதுதான்.

தொகுப்பு: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x