Published : 27 Dec 2019 12:47 PM
Last Updated : 27 Dec 2019 12:47 PM

கூட்டாஞ்சோறு! - கலகலப்புக் கூட்டணி

‘லிங்கா’ படத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் தலைகாட்டி வந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், அவர் தற்போது தெலுங்குப் படவுலகில் பிஸியான இயக்குநர் ஆகியிருக்கிறார். இங்கே மீம் கிரியேட்டர்களும் நெட்டிசன்களும் நடிகர் வடிவேலுவை வாழ வைப்பதுபோல அங்கே நடிகர் பாலகிருஷ்ணா.

அதிவேகத்தில் வரும் ரயிலையே ஒரு படத்தில் தடுத்து நிறுத்தும் (!) காட்சியில் நடித்து, மிகை நாயக பிம்பமாக வலம் வரும் பாலகிருஷ்ணா வைத்து ‘ஜெய் சிம்மா’ என்ற தெலுங்குப் படத்தைக் கடந்த ஆண்டு இயக்கி வெற்றி கொடுத்தார் ரவிகுமார். இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் ‘ரூலர்’ படத்தில் இணைந்தது. கடந்த 20-ம் தேதி வெளியான இந்தப் படம் ‘ஜெய் சிம்மா’ அளவுக்கு இல்லாவிட்டாலும் பாலகிருஷ்ணா ரசிகர்களை ஏமாற்றவில்லையாம்.

மீம் கிரியேட்டர்களோ ‘ரூலர்’ படத்தில் பாலகிருஷ்ணா ஏற்றிருக்கும் காவல் அதிகாரி கெட்-அப்பை வைத்துச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இதற்கிடையில் இந்தக் கூட்டணி மூன்றாம் படத்திலும் இணையவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியால் டோலிவுட் மேலும் கலகலப்பாகியிருக்கிறது.

கலங்கடிக்கும் டிரைலர்

மலையாளப் பட ரசிகர்களை ‘தி குங்ஃபூ மாஸ்டர்’ என்ற படத்தின் ட்ரைலர் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’, ‘பூமரம்’ படங்களின் மூலம் கவர்ந்த மலையாள இயக்குநர் அப்ரித் ஷைன் இயக்கத்தில் நீட்டா கதாநாயகியாக நடித்திருக்கும் படம். ‘பூமரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நீட்டா, இதில் குங்ஃபூ மாணவியாக நடித்திருக்கிறார்.

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு குங்ஃபூ பள்ளியில் குங்ஃபூ கற்றுக்கொண்டு, தனது எதிரிகளைப் பழிவாங்கும் கதை. ட்ரைலரில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகளில் நாயகி நீட்டாவின் வேகத்துக்கும் சண்டை வடிவமைப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘தற்காப்புக் கலையை மையப்படுத்தி, மலையாளத்தில் இதற்குமுன் இப்படியொரு படம் வந்ததில்லை’ என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

காட்சிகளுக்கு கத்தரி

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் நடிப்பில் கடந்த 20-ம் தேதி வெளியானது இந்தியா முழுவதும் வெளியானது ‘தபங் 3'. இந்தியக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள், கட்சிகள், இயக்கங்கள் நடத்தும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் சூழலில் படத்துக்கு எதிர்பார்த்த தொடக்க வசூல் கிடைக்கவில்லை. விமர்சகர்களும் படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

திரையரங்கு வந்த ரசிகர்களோ ‘இத்தனை நீளமான படத்தைப் பார்ப்பது பெரும் தண்டனையாக இருக்கிறது’ என்று கூற தற்போது படத்தின் நீளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறார்கள். குறைக்கப்பட்ட காட்சிகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சோனாக்‌ஷி வரும் காட்சிகள்தானாம். அவர் நடித்த 9 நிமிடக் காட்சிகளைக் குறைத்திருக்கிறார்களாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x