Published : 24 Dec 2019 12:16 PM
Last Updated : 24 Dec 2019 12:16 PM

விசில் போடு 11: மிடில் கிளாஸ் மாதவன்கள்!

‘தோட்டா’ ஜெகன்

‘மிடில் கிளாஸ்’ என்றொரு இனமுண்டு; அதற்குத் தனியாய் ஒரு குணமுண்டு. உலகத்துல எந்த மூலையிலும் மொட்டை மாடியில இருக்கிற தண்ணி டேங்க் வழியறப்ப, தேவையில்லாம வீட்டுல ஜீரோ வாட்ஸ் லைட் எறியுறப்ப, ஆளில்லாத ரூம்ல பேன் சுத்தறப்ப, யாருமில்லாத அறையில டிவி ஓடுறப்ப, அதையெல்லாம் அணைக்க ஒரு கை ஓடோடி வந்தால் அதுதான் ‘மிடில் கிளாஸ்’.

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் வாழும் வாழ்க்கை, எப்பவுமே திரிசங்கு சொர்க்கம். பாச வலையிலும் ஆசை வலையிலும் ஒருசேரச் சிக்கிக்கொண்ட இனம். காசும் முக்கியம் கெளரவமும் முக்கியம்னு நினைக்கிற குணம்தான் மிடில் கிளாஸ் மனம்.

கல்யாணமானவுடன் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போகலாம்னு பிளான் போட்டு, அப்புறம் கல்யாணமாகி குழந்தையுடன் வேன் புடிச்சு போகிற மாதிரி அமையற வாழ்க்கை. அவனவன் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுன்னு கலக்குறப்ப ஆதார் கார்டுக்கும் ரேஷன் கார்டுக்கும் அலையுற வாழ்க்கை. தோட்டம் வைக்கனும்ணு ஆசைப்பட்டு கடைசியில தொட்டில வச்சு பூச்செடி வளர்க்கத்தான் முடியுது. இன்னைக்கு என்ன செலவோன்னுதான் ஒவ்வொரு காலையும் விடியுது.

மசாஜ், மெசேஜ்

நெத்தில இருந்து எடுத்தா வகிடு, நெல்லுல இருந்து எடுத்தா தவுடு, மிடில் கிளாஸ் மக்கள் காலங்காலமா பின்பற்றி நடப்பது வித்தியாசமான சுவடு. நாலு கறுப்பு பேண்ட் இருந்தா போதும் நாப்பது கலர் சட்டைக்குப் போட்டுக்கலாம்னு கண்டுபிடிச்சதும், மிச்சமான இட்லியை வச்சு உப்புமான்னு கரண்டில கிண்டியே நண்டு பிடிச்சதும் நம்மாளுங்கதான்.

ஆறு இன்ச் பென்சில் அரை இன்ச் வந்தாக்கூட விரலுக்குள்ள இடுக்கி எழுதுவோம், ஹோட்டல்ல ப்ரீயா தர ஸ்வீட் சோம்பை பேப்பர்ல கட்டிக்குவோம். ஊத்தி தின்னா நெய் தீர்ந்திடும்னு சோறுக்கு நேரா காட்டுவோம், மொய் வைக்க வேண்டிய விசேஷம்னா, குடும்பத்தோட போக தேர் பூட்டுவோம். கடன் இருந்தாலும் காசு இருக்கிற மாதிரி காட்டிக்குவோம், பெத்த குழந்தைங்கதான் மொத்த சொத்துன்னு பெருமைப்பட்டுக்குவோம்.

குழம்புல போடுற பருப்பு தீர்ந்தாலும் சரி, கால்ல போடுற செருப்பு தேய்ஞ்சாலும் சரி, கொஞ்ச நாள் பொறுத்து வாங்குறவங்கதான் மிடில் கிளாஸ். இருக்கிற தங்க நகையை பேங்க்ல வச்சு அதுல வர பணத்துல புது நகை வாங்குறதும் அவுங்கதான்.

முகத்துக்கு ரெண்டு தடவை சோப்பு போடுறதுதான் நமக்கு பேசியல் மசாஜ், ட்விட்டர், ஃபேஸ்புக்ல லைக் கமெண்ட் போடுறதுதான் நம்மளோட சோஷியல் மெசேஜ். மூணு நாளைக்கு டாக்டர் எழுதி கொடுக்கிற மாத்திரை மருந்தை மூணு வேளைக்கு மட்டும் வாங்கிட்டு வருவோம். இலவசம்னு அரசாங்கம் எது கொடுத்தாலும் முதல் நாளே முதல் ஆளா போய் பெறுவோம்.

பொருளோ புடவையோ, ஐநூறுக்கு ஒண்ணுன்னா வாங்காம, ஆயிரத்துக்கு ரெண்டுன்னு தந்தா வாங்குவோம். பட்ஜெட்டுல விழுந்த துண்டை எப்படி பெண்டு எடுக்கிறதுன்னு நினைப்போடவே தூங்குவோம். இறங்க வேண்டியது தாம்பரமா இருந்தாலும், பஸ் திண்டிவனம் வந்துட்டாக்கூட கண்டக்டர் தர வேண்டிய ஒரு ரூபா சில்லறையை வாங்காம இறங்க மாட்டோம். அட்சய திரிதியைக்கு அரைகிராம் தங்கமாவது வாங்காம உறங்க மாட்டோம்.

பெட்டிங் பார்ட்டி

உலகத்தைச் சுற்ற முருகன் வேணா மயிலேறி போகலாம், மனுஷன் ஊருக்கும் போகணும்னா ரயிலேறி போகணும்ங்கிறதுதான் யதார்த்தம். அதனால்தான் என்னவோ, நம்மாளுங்க போட்டியெல்லாம் அதானி அம்பானியை விட்டுட்டு அடுத்த வீட்டுக்காரன்கூட மட்டும் வச்சுக்குறாங்க.

திங்கட்கிழமை காலைன்னா ஆபீஸ்ல தூக்கம் வரதும், துவைக்காத துணின்னா நாத்தம் வரதும் சகஜம்தான் என்பது போல, அடுத்தவங்க வாழுறதைப் பார்த்தே ஏக்கம் கொள்வதுதான் மிடில் கிளாஸ் மக்களோட மனசு. பிரிட்ஜ் வாங்கினாக்கூடப் பக்கத்து வீட்டுக்காரனோட உயரமா வாங்கணும், பிளாட் வாங்கினாக்கூட எதிர்வீட்டுக்காரனோட அகலமா வாங்கணும்னு நம்ம ஆசைக்கு அளவுகோலா அடுத்தவங்களை வச்சுதான் வாழுறோம். சொந்தக்காரன் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டா நாம உள்ளுக்குள்ள நொந்து போறதும், சொந்தக்காரன் சொந்தமா வீடு வாங்கிட்டா வெந்து போறதும்னுதான் ஓடுது பல பேரு வாழ்க்கை.

தலைல கொம்பு இருந்தா மாடு, தாடையில தாடி இருந்தா ஆடு. வித்தியாசங்கள் இருந்தாதான் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். ஆனா, நமக்கோ சொந்தக்காரக் குழந்தையோட நம்ம குழந்தை நாலு மார்க் கூட வாங்கிடனும், எப்படியாவது நம்ம வாரிசு டாக்டர், இன்ஜினியர் ஆகிடனும். 10-ம் வகுப்புல ஃபர்ஸ்ட் வந்தா கொலுசு வாங்கி தரேன், 12-ம் வகுப்புல ஃபர்ஸ்ட் அந்த பைக் வாங்கித்தரேன்னு படிப்புலையே பெட்டிங் ஆரம்பிச்ச ஆளுங்க நாமதான்.

தீர்வு சொல்லும் ஜோசியர்

குச்சிகளா சேகரிச்சு குருவி கூடு கட்டுற மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா காசு சேமிச்சு வீடு கட்டுறதுதான் மிடில்கிளாஸின் மாபெரும் கனவு. அப்படியிருந்தும், மாடு மாதிரி உழைச்சு சேர்த்த பணத்தை மனுஷன் மேல நம்பிக்கை வைக்காம, ஈமு கோழி மேல கட்டி ஏமாந்து போவோம். உசேன் போல்ட் வேகத்துல ஓட போறவன் நடத்தற சீட்டு கம்பெனில சேமிப்பைப் போட்டு ஏமாளி ஆவோம்.

மன பிரச்சினையோ பணப் பிரச்சினையோ உடனே ஜாதகத்தைத் தூக்கிட்டு ஓடுற மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜோசியர்தான் சொல்யூஷன் சொல்ற டாக்டரும் வக்கீலும். காதுக்குப் பின்னாடி ஆரம்பிச்சு கண்ணுக்கு முன்னாடி நின்னாலும் அதுக்கு பேரு என்னமோ மூக்கு கண்ணாடி என்பதை மறந்துடுறோம். யாரோ ஜோசியர் சொல்ற ‘டைம் சரியில்ல’ என்பதை நம்பியே எதுவும் முயற்சிக்காம இருந்திடுறோம்.

டிவி வாங்கினப்ப வந்த அட்டைப் பெட்டியிலேர்ந்து துணி வாங்குறப்ப தந்த கட்டைப் பை வரைக்கும் சேமிச்சு வைப்போம். பழசான புடவை பாவாடைய எடுத்து பில்லோவுக்கு கவரா தைப்போம். பைக்குக்கு பெட்ரோல் போடுறப்ப, பைப்ல இருந்து கடைசி நாலு சொட்டு விழுற வரைக்கும் வெயிட் பண்ணுவோம். தூங்குறப்ப தலையணைக்கு அடில சட்டையை வச்சு அயர்ன் பண்ணுவோம்.

ஒரு படையவே வீழ்த்தக்கூடிய வீரனா இருந்தாலும் காதுக்குப் பக்கத்துல வந்து ஹாரன் அடிச்சா பயப்படத்தான் செய்வான். ஆனா, பொங்கலைத் தின்னுட்டு தூங்குறவன் மேல செங்கலை வீசினாலும் எந்திரிக்க மாட்டேங்கிற கதையா, வரி எவ்வளவு சுமத்தினாலும், விலைவாசியை மொத்தமா நம்ம முதுகுல ஏத்தினாலும், அதையும் ஆர்க்யுமென்ட் பண்ணாம அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு போறவங்கதான் மிடில்கிளாஸ் மக்கள். இந்தியாவ இயங்க வைத்து இழுத்து போவதே மிடில்கிளாஸ்தான். அந்த ஒரு காரணத்துக்காகவே நம்ம எப்பவும் ஹைகிளாஸ்தான்.

(விசில் போடுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x