Published : 24 Dec 2019 10:42 AM
Last Updated : 24 Dec 2019 10:42 AM

சேதி தெரியுமா? - வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

தொகுப்பு: கனி

டிச. 15: குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்று நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த மாணவர் போராட்டத்தில், காவல்துறை மாணவர்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, நாட்டில் மாணவர்கள் போராட்டம் வலுக்கத் தொடங்கியது.

புதிய ராணுவத் தளபதி

டிச. 16: நாட்டின் 28-ம் ராணுவத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவணே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத் வரும் டிச. 31 அன்று ஓய்வுபெறவிருப்பதால், அடுத்த ராணுவத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவணே நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை

டிச. 17: முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப், 2007-ம் ஆண்டு அந்நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக நெருக்கடிநிலையை அமல்படுத்திய குற்றத்துக்காகச் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாலின சமத்துவம்: 112-ம் இடம்

டிச. 17: உலகப் பொருளாதார அமைப்பு (WEF) 2019- பாலின இடைவெளிப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சென்ற ஆண்டைவிட நான்கு பின்னுக்குச் சென்று 112-ம் இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகளில் இந்தியா பின்தங்கி யுள்ளதாக இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது. பாலின நடுநிலைத்தன்மையில் முதல் இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.

ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்கள்?

டிச. 17: ஆந்திரப் பிரதேசத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவைத் தலைநகராக அமராவதி, நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், நிதித் தலைநகராக கர்னூல் ஆகியவை பரிசீலிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தடையில்லை

டிச. 18: குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுகொண்ட
உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த மசோதா தொடர்பான வழக்கு ஜனவரி 22 அன்று விசாரணைக்கு வருகிறது.

சாகித்ய அகாதெமி விருதுகள்

டிச. 18: 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள், 23 மொழிகளில் ஏழு கவிதை நூல்கள், நான்கு நாவல்கள், ஆறு சிறுகதைகள், மூன்று அபுனைவு நூல்கள், மூன்று கட்டுரைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கும், ஆங்கிலத்தில் சசி தரூரின் ‘தி எரா ஆஃப் டார்க்னெஸ்’ புத்தகத்துக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியேறும் பிரிட்டன்

டிச. 20: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வரும் 2020, ஜனவரி 31 அன்று வெளியேறுகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் போரிஸ் ஜாக்சன் கொண்டுவந்த ‘பிரிக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு 358 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 234 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x