Published : 23 Dec 2019 12:42 PM
Last Updated : 23 Dec 2019 12:42 PM

பிசினஸில் பெண்களின் இடம் என்ன?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

எல்லா துறைகளிலும் பெண்கள் நுழைந்து சாதித்துக்கொண்டிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் இன்றும் தங்களுக்கான சுதந்திரத்தை வேண்டிப் பெறுபவர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள். வீடுகளில் எல்லா முடிவுகளையும் பெண்கள் எடுத்தாலும்கூட அவர்களுக்கான தொழில் அல்லது வேலை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போதே அவர்களுக்குள்ளே தயக்கமும் பயமும் வந்துவிடுகின்றன.

ஆனால், சந்தையோ முழுக்க, முழுக்க பெண்களைப் பிரதானமாகக் கொண்டே இயங்குகிறது. சீப்பு, சோப்பு முதல் ரவா, கோதுமை வரை, வாஷிங் மெஷின் முதல் வேக்வம் கிளீனர் வரை பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மட்டுமே மையப்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.

இவைஎல்லாமே பெண்கள்தான் எல்லா வேலையும் செய்வது போலவும், அவர்கள்தான் குடும்பத்தை பராமரிப்பது மாதிரியும் சித்திரிக்கின்றன. குடும்பப்பராமரிப்பை விடுங்கள்; ஆண்கள் குளிப்பது கூட இல்லையா? பவுடர், ஷாம்பு போடுவதில்லையா? ஆண்கள் ஏன் விளம்பரங்களில் வஞ்சிக்கப்படுகிறார்கள்?

இதற்கான பதில் ரொம்பவே சுலபம். பெரும்பாலான பொருட்களை பெண்கள்தான் வாங்குகிறார்கள். எந்தக் கடையில் வாங்குவது என்பதிலிருந்து எந்த பிராண்டைத் தேர்ந்தெடுப்பது என்பது வரை சர்வம் பெண்கள் கைங்கர்யமே. நம் வீடுகளில் பர்சேஸ் டிபார்ட்மென்ட்டின் நிரந்தர முதல்வர் பெண்களே. அதனால்தான் மளிகை கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை, ஃபேன்சி ஸ்டோர் முதல் ஜவுளிக் கடை வரை அதிகமாக தென்படுவதும் அவர்களே. ஆண்களைக் காண ஆசைப்படுபவர்கள் பெட்டி கடை வெளியிலோ அல்லது டாஸ்மாக் உள்ளேயோ பார்க்க முடிகிறது!

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலானவற்றை வாங்குவது பெண்கள் என்பதால் அவர்களே விளம்பரங்களில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். சரி, இது ஒருவகையில் நியாயமானது என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால், அதே பொருட்களை விற்கும் கம்பெனிகளின் மார்க்கெட்டிங் துறையிலோ, நிர்வாகத்திலோ ஏன் பெண்களை அதிகம் காண முடிவதில்லை? கடைகள் முதல் கம்பெனிகள் வரை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்களே, ஏன்? கம்பெனியில் வேலை செய்த நாள் முதல் மார்க்கெட்டிங் ஆலோசகனாய் இருக்கும் இக்காலம் வரை, ஆபீஸ் கான்ஃபரென்ஸ் ரூமில் நான் சந்தித்த பெண்கள் மிக சொற்பமே. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், பெரும்பாலான கம்பெனிகளின் நிலையும் இதுதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்திய திருநாட்டில் மட்டும்தான் இந்த இருட்டடிப்பு என்றில்லை. அமெரிக்காவிலும் இதே கதிதான். ‘Fortune 500’ எனப்படும் அமெரிக்காவின் டாப் ஐந்நூறுகம்பெனிகளின் நிர்வாகக் குழுவில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும், 15 சதவீதம்தானாம். நம்மூர் கிராமங்களில் மட்டும்தான் என்றில்லை கம்பெனிகளில் கூட பெண்களுக்கு கள்ளிப்பால் கொடுக்கப்படுகிறது பாருங்கள்!

‘அய்யோ, சமுதாயத்தில் பெண்கள் சரிநிகர்சமானமாக பார்க்கப்படுவதில்லை, அய்யஹோ, ஏன் இந்த அடக்குமுறை, அடடா எதற்காக இந்த ஆணாதிக்கத்தனம்’ என்று கொடி பிடித்து கத்துவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். ஒரு மார்க்கெட்டராக இதைப் பார்க்கும் போது இந்த விஷயத்தின் அனர்த்தம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இதனால் நிகழும் தவறுகளை யாரும் கவனிக்காமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பள்ளி பருவதிலிருந்தே புலம்பி வருகிறோம். திருமணத்துக்கு பிறகு அதைப் புரிந்துகொள்ள முயல்வது முடியாத ஒன்று என்று முடிவு செய்து, அம்முயற்சியை மொத்தமாய் கைவிடுகிறோம். ஆனால், பணியிடங்களிலும் ஏன் இதன் முக்கியத்துவத்தை மறக்கிறோம்?

சொந்த மனைவியையே புரிந்துகொள்ள முடியாத மார்க்கெட்டர்கள்... மற்ற பெண்களை எப்படி புரிந்து, அவர்கள் தேவையை அறிந்து தங்கள் பிராண்ட் வடிவமைப்பிலிருந்து பொசிஷனிங் வரை, பாக்கேஜிங் முதல் விளம்பரங்கள் வரை அனைத்தையும் எப்படி திட்டமிட முடியும்? அவர்கள் பிராண்டுகளை வாங்கப்போவது பெண்கள்தான் என்ற பட்சத்தில் அவர்களைத் தங்களால் சரியாக புரிந்துகொள்ள இயலாது எனும் போது, தங்களுக்கு உதவ மார்க்கெட்டிங் துறையிலும் நிர்வாகத்திலும் பெண்களை அல்லவா அதிகம் நியமிக்க வேண்டும்?

அதற்காக ஆபிசில் உள்ள ஆண்களை அடித்து துரத்துங்கள் என்று சொல்லவில்லை. பெண்களை மையப்படுத்தியே பல பொருட்கள் இருக்கையில் மார்க்கெட்டிங்கில், நிர்வாகத்தில் பெண்கள் பங்களிப்பு இருக்கவேண்டியதன் அவசியத்தை, அவசரத்தை அறிவுறுத்துகிறேன். பெண் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்துகொள்ள முடியும் என்று சினிமா முதல் சீரியல் வரை சொல்கிறார்களே. யாரும் இதை மறுத்ததாய் தெரியவில்லையே... ஒருவேளை இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில், மார்க்கெட்டிங் விளையாட்டில் அவர்களை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்தானே!

நமக்கு பெண்களிடம் எந்த குணங்கள் பிடிக்காதோ அவைதான் மார்க்கெட்டிங் பணி செய்யஅவசியமானவை, நிர்வாகம் செய்ய முக்கியமானவை. மார்க்கெட்டிங்கில் உள்ள பல ஆண்கள் மார்க்கெட், வாடிக்கையாளர், போட்டியாளர்கள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பதுபோல் நினைத்துக்கொண்டு அதிகம் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இதனாலேயே பல கம்பெனிகள் வாடிக்கையாளர்களை சரிவர புரிந்துகொள்ளாமல் தவறான முடிவுகள் எடுக்கின்றன. கேள்வி கேட்கும் குணத்தில்பெண்கள் எப்படி என்பதுதான் கணவன்மார்களுக்கு கண்கலங்க தெரியுமே. கேள்வி கேட்டு, பதிலை எப்படி வாங்குவது என்பது பெண்களுக்கு கைவந்த கலை. பொருள் பிரிவு, வாடிக்கையாளர், போட்டியாளர் போன்றவற்றைப் பற்றி தெரிந்திருந்தும் கேள்விகள் கேட்டு குடைந்து புதிய தகவல்கள் பெற பெண்கள்தான் சரியான தேர்வாக இருக்க முடியும்!

அதோடு மார்க்கெட்டிங் துறையில் பெண்களைஅதிகம் சேர்த்துக்கொள்வதில் இன்னும் பல சவுகரியங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய வேண்டிய சில துறைகளில் மார்க்கெட்டிங்கும் ஒன்று. டீவியில் சீரியல் பார்த்துக்கொண்டே சமையலும் செய்து, குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தந்து, கிடைத்த கேப்பில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, பக்கத்து கடைக்கு ஃபோன் செய்து சாமான் ஆர்டர் செய்துகொண்டே பேப்பர் படிக்கும் நம்மிடம் பத்து வேலைகள் தந்து அதை செய்கிறோமா என்று வேவு பார்த்து, நாம் செய்யாத பட்சத்தில் திருமணம் செய்த நாளிலிருந்து நாம் செய்த தவறுகளை எல்லாம் கால வரிசைப்படி கரெக்ட்டாக ஸ்லோகம் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டே அறையை பெருக்கி துடைக்கும் அசகாய சூரர்கள் பெண்கள். இந்த அஷ்டாவதானிகளை மார்க்கெட்டிங்கில் சேர்த்துக்கொள்வது கம்பெனிகளுக்கு பிரமாதமாய் பயன் தரும்.

மீட்டிங்கில் ஒருவர் ஒன்றைச் சொன்னார் என்றால் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் அதை ஏற்றுக்கொண்டு பிஸ்கெட் டீயை தின்றுவிட்டு மீட்டிங் முடிக்கப்படுவதுதான் பல ஆபீசுகளில் நடக்கிறது. சொல்லப்பட்ட விஷயம் பற்றி கேள்வி கேட்டால்தானே சொன்ன விஷயம் சரியா, செய்யத் தகுந்ததா என்பது தெரியும். இதற்காகவே ஒன்றிரண்டு பெண்கள் மீட்டிங்கில் இருந்தால் அவர்கள் கேள்வி கேட்டு குடைந்து பேசப்படும் விஷயத்தின் ஆழம் வரை சென்று சரியான முடிவெடுக்க உதவுவார்கள்.

‘வாய் ஓயாமல் பேசுகிறார்கள்’ என்று பெண்களை குறை சொல்கிறோமே, அந்தப் படபட பேச்சை கொண்டு மார்க்கெட்டை மட மடவென்று புரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சு கொடுத்து அவர்களின் தேவைகள், பிராண்ட் பற்றிய அவர்களின் கருத்துகள், போட்டி பொருட்களை பற்றிய அவர்களின் எண்ணங்கள் என்று எத்தனை ஃபீட்பேக் பெறமுடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். வாடிக்கையாளர் ஆய்வு செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆர்டர் செய்து தயாரிக்கப்பட்டவர்கள் பெண்கள்!

பெண்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டிய இன்னொரு இடம் பொருள் வடிவமைப்பு துறை. குறிப்பாக பெண்கள் அதிகம் உபயோகிக்கும் பொருட்களின் பாக்கேஜிங்கை வடிவமைக்கும் போதும் பெண்களின் பங்களிப்பு அதில் அசாத்திய பயன் தரும். பொதுவாகவே பெண்களுக்கு அழுகுணர்ச்சி அதிகம். அவர்களை விட்டு நீங்களும் நானும் மட்டும் பொருளை வடிவமைத்தால் எப்படி இருக்கும்?

நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஆசை லவலேசம் கம்பெனிகளுக்கு இருந்தால், பத்து மணி முதல் ஆறு மணி வரை ஆபீசில் அமர்ந்து செய்வதுதான் வேலை என்ற எண்ணத்தை விட்டொழிப்பதே உசிதம். வேலை என்பது ஆபீசில் மட்டுமே செய்யப்படும் ஒன்று என்ற கோட்பாடு வழக்கொழிந்து போய்கொண்டிருக்கிறது.

வீட்டிலிருந்தே உழைப்பது, ‘ஃப்ளெக்சி ஒர்க்கிங்’ என்று திறமை இருந்தும் ஏதோ சில காரணங்களுக்காக முழுநேரமும் ஆபீஸ் சென்று உழைப்பவர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. இதில் பெண்கள்தான் அதிகம். அப்பேற்பட்ட பெண்களின் திறமையை பயன்படுத்தும் ஆசையிருந்தால், அவர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கலாம். வாரத்துக்கு ஒரு சில நாட்கள் மட்டும் ஒரு சில மணி நேரங்கள் ஆபீசுக்கு வந்துபோகச் சொல்லலாம்.

இதையெல்லாம் சொல்வதால் சாஸ்திரத்துக்கு மட்டும் ஏதோ ஒரு பெண்ணை பிடித்து மார்க்கெட்டிங் துறையிலோ நிர்வாகத்திலோ அமர்த்தி ‘நீ சொன்னது போல் செய்துவிட்டேன், பெண் உரிமை வாழ்க’ என்று அதோடு உங்கள் வேலைமுடிந்தது போல் பேசாமல் இருந்து விடாதீர்கள்.ஆய்வு ஒன்றில் கம்பெனி நிர்வாக போர்டுகளில்ஒரே ஒரு பெண்மணி மட்டும் இருக்கும்போது மீட்டிங்குகளில் அவர் பேசக் கூச்சப்பட்டு அதிகம் பங்களிக்காமல் அமைதியாக இருப்பதையும், குறைந்தது மூன்று பெண்கள் போர்டு மீட்டிங்குகளில் இருக்கையில் தைரியமாக கேள்விகள் கேட்டு அதிகம் பங்களித்து நல்ல முடிவுகள் எடுக்க முடிவதையும் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனால் உங்கள் மார்க்கெட்டிங் முதல் நிர்வாகம் வரை முடிந்தவரை கொஞ்சம் கூடுதலாகவே பெண்களை நியமியுங்கள். உங்கள் பிசினஸும்பிராண்டும் நீண்ட காலம் நிலைத்து இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x