Published : 23 Dec 2019 12:36 PM
Last Updated : 23 Dec 2019 12:36 PM

வெற்றியைத் தொட முடியாதவர்கள் எப்போதுமே புலம்புவது அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான்

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

வெற்றியைத் தொட முடியாதவர்கள் எப்போதுமே புலம்புவது அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான். எனக்கு அதிர்ஷ்டமே இல்லை... எனக்கு எதுவுமே நல்லது நடப்பதில்லை என்று சதா புலம்பித் தள்ளிவிடுவார்கள். உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறதா? அதிர்ஷ்டத்தை எப்படி நம் வசமாக்குவது என்பதெல்லாம் பல காலமாக எழும் கேள்விகள்தான். இந்த கேள்விகளுக்கு இரண்டு நண்பர்கள் இணைந்து பதில் தேடியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பிரபல தனியார் முதலீட்டாளராக இருக்கும் ரெஹான் யார் கான், அவரது அமெரிக்க நண்பர் பாப் மிக்லானி இருவரும் எதேச்சையாக ஒரு மாலை நேர உரையாடலின்போது ‘அதிர்ஷ்டம்’ என்ற வார்த்தையைப் பற்றி பேசுகிறார்கள்.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.ரெஹான் யார் கான், ஸ்டார்ட் அப் தொழில்களில் வெறும் 1 லட்சம் டாலர்களை முதலீடு செய்து 75 மில்லியன் டாலர்களாகப் பெருக்கியிருக்கிறார். எப்படி என்று பாப் மிக்லானி கேட்க ‘எனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு, அவ்ளோதான்’ என்கிறார் ரெஹான்.

இப்படியாக சாதாரணமாகத் தொடங்கிய அந்த உரையாடல் சில மணி நேரம் நீள்கிறது. உரையாடல் முழுவதும் ‘அதிர்ஷ்டம்’ என்ற வார்த்தையைப் பற்றியது மட்டுமே. சிலருக்கு கிடைப்பதும் பலருக்கு கிடைக்காததுமாகக் கருதப்படும் இந்த அதிர்ஷ்டத்தை அடைவதுதான் எப்படி? அதற்கு ஏதேனும் மாயமந்திரம் இருக்கிறதா என்ன?

இருவரும் மாறி மாறி கேள்விகளும் பதில்களுமாகப் பேசிக்கொண்டிருக்க பல தொழில்முனைவோர்கள், வெற்றிபெற துடிப்பவர்கள் என பலருக்கும் தேவையான பதில்களை அவர்கள் கண்டடைகிறார்கள். அதை எல்லோருக்கும் பகிர விரும்பி புத்தகமாக எழுதவும் செய்கிறார்கள். அந்தப் புத்தகம்தான் ‘Make your Own Luck'.

சமீபத்தில் மெட்ராஸ் ஸ்கூல் எகனாமிக்ஸ் வளாகத்தில் சென்னை சர்வதேச மையம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றியும், ஸ்டார்ட் அப் உலகத்தைப் பற்றியும்வெற்றி தோல்வி பற்றியும் பேசினார் ரெஹான்.

தன்னுடைய ஆரம்ப கால முதலீடுகளைப் பற்றியும், அந்த நிறுவனங்களை அணுகிய விதம் பற்றியும் அவைபின்னாளில் பல மடங்கு வருமானத்தைக் கொடுத்தது பற்றியும் பேசினார். குறிப்பாக ஓலாவின் கதை ‘அதிர்ஷ்டம்’ அவர் வசமானதில் முக்கிய பங்கு வகிக்கிறது. லோக்கல் டிரான்ஸ்போர்ட் என்பது அப்போது மிகப்பெரிய துறையாக அடையாளம் காணப்படவில்லை.

மும்பையில் பிரபலமாக மேரு கேப்ஸ் போன்றவை அதை நிறுவனமயமாக செய்ய தொடங்கியிருந்தாலும், அவர்கள் பழைய போன் கால் முறையிலேயே சேவை வழங்கிவந்தனர். அப்போதுதான் ஓலாவின் கதை ஆரம்பமானது. அனைத்தையும் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தும் மாடல் ஓலாவிடம் இருந்தது.

எல்லோரும் ஓலா உபரின் காப்பி என்பார்கள். இல்லை, உபரிலிருந்து ஓலா வேறுபட்டது. ஓலா நேரத்தின் அடிப்படையில்தான் தனது கட்டணங்களை நிர்ணயிக்கிறது. நான் ஒரு டெக்கி என்பதால் ஓலாவில் முதலீடு செய்ய தயாரானேன்.

எவ்வளவு விரைவாக இன்று உற்பத்தி செய்கிறோம், எவ்வளவு விரைவாக சந்தையில் போட்ட முதலீட்டை எடுக்கிறோம். லாபம் எந்த அளவுக்கு விரைவாக பல மடங்காகிறது. இதுதான் முக்கியம். இதற்கு தொழில்நுட்பம் உதவி புரிந்தது. தொழில்நுட்ப பயன்பாடுகளை நோக்கி முதலீடுகளைத் திட்டமிட்டேன். ஓலாவின் பாதை சரியானதாக இருந்தது. அதனால் அதில் நான் தொடர்ந்து முதலீடு செய்தேன். பின்னர் என் தாயும் அதில் முதலீடு செய்தார்.

தொழில் செய்வதாக இருக்கட்டும், முதலீடு செய்வதாக இருக்கட்டும் சந்தைவாய்ப்புகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் எவ்வளவு விரைவாக பணத்தை மடங்குகளாக மாற்ற முடியும்என்று யோசிக்க வேண்டும். இன்று எல்லாமே டைமிங். யாருக்கும் முதலீட்டைப் பெருக்குவதில் காத்திருக்க விருப்பமில்லை. உடனடியாக முதலீட்டின் மீது வருமானம் கிடைக்க வேண்டும். தான் ஒரு டெக்கி என்பதால் தொழில்நுட்பம் இல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றார்.

அதிர்ஷ்டம் எந்த முயற்சியும், பயிற்சியும் எடுக்காதவர்களைத் தேடி வராது. தேவையான தயாரிப்புகளுடன் இருந்தால் மட்டுமே அதிர்ஷ்டம் வசமாகும்.

வழக்கமானவர்கள் செய்யும் விஷயங்களை நீங்கள் வித்தியாசமாக செய்தால் கவனம் உங்கள் மீது வரும். வெற்றி பெற நினைப்பவர்கள் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. பிரச்சினைகளைப் பார்த்து பயந்துகொண்டே இருப்பவர்களுக்கு ஒருபோதும் அதற்கான தீர்வு கிடைக்காது.

ஒரு பிரச்சினை உங்களுக்கு அழகான ஒரு தீர்வை கொடுத்தால், அது நல்ல பிரச்சினை என நினைக்க வேண்டும். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொழில்நுட்பத்தின் உதவியால் கண்டடையும்போது அதன் மூலம் நல்ல ஸ்டார்ட் அப் தொழில்கள் உதயமாகும். என்னால் அப்படியான ஸ்டார்ட் அப்களை உருவாக்க முடியாவிட்டாலும், அவற்றை அடையாளம் கண்டு முதலீடு செய்கிறேன் என்றார்.

அதேபோல் எப்போதும் வெற்றியேகிடைக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. நானும் வாய்ப்புகளைத் தவறவிட்ட அனுபவம் பெற்றிருக்கிறேன். பல துறைகளில் முதலீடு செய்தபோது, நிதி சேவைகள் துறையைப் புரிந்துகொள்ளவில்லை. சொல்லப்போனால் எனக்கு அதுபற்றி எதுவும் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நிதி சேவைகள் துறையிலும் முதலீடுகளை மேற்கொண்டிருப்பேன்.

அதிர்ஷ்டத்தை வரவேற்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தயாராக இல்லையென்றால் எந்த அதிர்ஷ்டமும் நம்மை நெருங்காது. தயார் செய்துகொள்வதில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். அதிர்ஷ்டம் பொதுவானது; அது வரும்போது தயாராக இருப்பவரை அணுகுகிறது, தூங்குபவரை புறக்கணிக்கிறது. யாரும் பயணிக்காத பாதையில் நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்றார்.

ரெஹானின் முதலீட்டு நிறுவனமான ஓரியஸ் வென்சர்ஸ் முதலீடு செய்துள்ளமுக்கியமான நிறுவனங்களில் சில ஓலா, ஃபார்ம்ஈசி, கோ மெக்கானிக், கன்ட்ரி டிலைட், துருவா ஆகியவை அடங்கும்.

ரெஹானின் வெற்றியும் வார்த்தைகளும் சிலவற்றை உணர்த்துகிறது.ஒருவர்தான் கவனமாகப் பார்த்து பார்த்து தொடர்ச்சியாக செய்யும் சில விஷயங்களால் தன்னுடைய நிலையையே தலைகீழாக மாற்றிக்கொள்ள முடியும். இனி ஸ்டார்ட் அப் தொழில்களுக்கான காலம் என்பதால் பல தொழில் முனைவோர்களுக்கு இந்த விஷயம் தேவையாக இருக்கிறது. கடுமையாக உழைக்கும் பலருக்கு வெற்றி வாய்ப்பு என்பதுகிடைப்பதில்லை. எல்லா துன்பங்களையும் தோல்விகளையும் அனுபவித்தாலும் தொடர்ந்து முயற்சியும் போராட்டமுமாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அதிர்ஷ்டம் வசமாகும். காத்திருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x