Published : 23 Dec 2019 12:18 PM
Last Updated : 23 Dec 2019 12:18 PM

நவீனத்தின் நாயகன் 06: குட்பை தென்னாப்பிரிக்கா!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலானின் சிறுவயதுக் காலம், தென்னாப்பிரிக்கா கொந்தளித்துக் கொண்டிருந்த நாட்கள். அங்கே, கறுப்பு இனத்தவர் பெரும்பான்மையினர், வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. கறுப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையே கிடையாது.

அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். இந்த “இன ஒதுக்கீட்டுக் கொள்கை”க்கு (Apartheid) எதிராக நெல்சன் மண்டேலா 1939–ஆம் ஆண்டில் போராட்டங்கள் தொடங்கினார். அரசுக்கு எதிராகப் புரட்சி, அமைதியைக் குலைப்பு, கலக உருவாக்கம் என வரிசையாகக் குற்றங்கள் சாட்டி, கொடுங்கோல் அரசு கைது செய்தது. அடுத்த 27 ஆண்டுகள் சிறையில்.

மண்டேலா சிறையில் இருந்தபோதும், அவர் தொண்டர்கள் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தார்கள். இதை ஒடுக்க, அரசாங்கமும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. 1976 –ல் வந்தது ஒரு உச்சகட்டம். அரசாங்கம், புதிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்தது. அதுவரை, வெள்ளையர், கறுப்பர் ஆகிய இரு இனத்தவரும், ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி கற்றார்கள். புதிய சட்டம், ஆங்கிலத்தோடு, வெள்ளையர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே பேசிய ஆஃப்ரிக்கான்ஸ் (Afrikaans) மொழியையும் கட்டாயப் பாடமாக்கினார்கள்.

மொழி எப்போதுமே, உணர்வுகளைத் தூண்டும் சமாச்சாரம். ஜூன் 16. ஸோவெட்டோ (Soweto) என்னும் ஊரில், கறுப்பினப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஊர்வலம் நடத்தினார்கள். கலைந்து போகச் சொன்னது போலீஸ். கண்ணீர்ப் புகைத் தாக்குதல். மாணவர்கள் எதிர்கொண்டு நின்றார்கள். இப்போது காட்டாட்சி காட்டியது தன் ரத்தவெறியை. போலீசின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் ஓலமிட்டன.

சுமார் 700 மாணவச் செல்வங்கள் மரணம். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் போராட்டங்கள். ஆனாலும் அரசு திருந்தவில்லை. இந்தச் சம்பவம் “ஸோவெட்டோ எழுச்சி” (Soweto Uprising) என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையர் ஆதிக்கம் மறைந்தபின், தென்னாப்பிரிக்கா, ஒவ்வொரு வருடமும், ஜூன் 16 – ஐ, இளைஞர்கள் தினமாக அனுசரிக்கிறார்கள்; ஆப்பிரிக்காக் கண்டத்தின் பிற நாடுகளில் இந்த நாள் ``ஆப்பிரிக்கக் குழந்தைகள் தினம்.” சாம்பலாகிவிட்ட இளம் மொட்டுகளுக்கு அஞ்சலி!

ஈலான் பள்ளிக்குப் போகத் தொடங்கினான். வெள்ளையர் இனக் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடம். அவன் தோல் வெள்ளை நிறம் தான் என்றபோதும், யூத இனத்தைச் சேர்ந்தவன். ஹிட்லர் (1889 – 1945) கட்டவிழ்த்து விட்டிருந்த யூதர் வெறுப்பலை தென்னாப்பிரிக்கா உட்பட்ட நாடுகளில் ஓயவில்லை. சக சிறுவர்கள் ஈலானோடு விளையாட மறுத்தார்கள். அவனைக் கேலி செய்தார்கள்.

ஸோவெட்டோ எழுச்சியால், அம்மா, அப்பா அவனிடம் பள்ளியில் பிறரோடு பழகுவதில் கவனம் காட்டச் சொன்னார்கள். வகுப்புச் சிறுவனோடு ஏதாவது சின்னச் சண்டை வந்து, அவன் பெற்றோர் அரசியல் பலம் கொண்டவர்களாக இருந்துவிட்டால்….அவன் ஜாக்கிரதையாகப் பிறரோடு பழகுவதையே நிறுத்தினான். அவன் விலகி நின்றாலும், சண்டைகள் தேடி வந்தன.

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு நாள். அசெம்பிளிக்குப் போகும்போது ஒரு பையன் மேல் தெரியாமல் இடித்துவிட்டான். மதியம். கான்க்ரீட் படிக்கட்டில் ஈலானும், தம்பி கிம்பலும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பையன் ஈலானின் பின் புறமிருந்து பதுங்கிப் பதுங்கி வந்தான். தலையில் எட்டி உதைத்தான். படிக்கட்டில் தரதரவென இழுத்துக்கொண்டு போனான். கீழே காத்துக்கொண்டிருந்தது அந்த “ரவுடி”யின் நண்பர்கள் கூட்டம். ஈலானின் உடல் முழுக்க மிதித்தார்கள்.

தலையைத் தரையில் மோதினார்கள். வேலை முடிந்ததும், உற்சாகக் கூக்குரலிட்டுக்கொண்டு ஓடிப்போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் திகைத்துப் போயிருந்த கிம்பல், தலையிலும், உடலின் பல பாகங்களிலும் ரத்தக் களறியோடு விழுந்து கிடந்த அண்ணன் அருகே வந்தான். செத்துப் போய்விட்டானோ என்று பயம். மூக்கில் விரலை வைத்தான். சுவாசம் வந்தது. ``அப்பாடா” என்று நிம்மதி. வீட்டுக்குப் போனார்கள். நடுங்கிய அப்பா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். மூக்கில் அறுவை சிகிச்சை. உடல் முழுக்கக் கட்டு. ஒரு வாரம் படுக்கை.

அப்பா பள்ளி நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார். அடித்தவன் வெள்ளையர் இனத்தவன். அவன் அப்பா அரசியல் செல்வாக்குக் கொண்டவர். ஆகவே, நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முரடர் கூட்டத்துக்கு இது புதுத்தெம்பு. ஈலானுக்குக் தினமும் அடி, உதை. கொஞ்ச நாட்களில் அப்பாவுக்கு இது பழக்கமாகி
விட்டது.

மகன் அழுதுகொண்டு வந்தாலும், கண்டுகொள்ளவேயில்லை. ஈலானைப் பொறுத் தவரை, வீடு நரகம், பள்ளிக்கூடம் சித்திரவதை பீடம். அடுத்த மூன்று வருடங்கள் இந்தச் சித்திரவதை. ஈலான் அப்பாவை நச்சரித்தான். அவனைப் புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றினார். இங்கே, பிரச்சினைகள் இல்லை. ஆனாலும், பழக்கதோஷத்தால், ஈலானுக்குப் பிறருடன் சகஜமாகப் பழக முடியவில்லை. நாட்கள் நகர்ந்தன.

இந்த ஜீனியஸ் பையன் படிப்பில் எப்படி? முதல் ராங்க் வாங்கி ஜொலித்திருப்பான் என்று நினைப்பீர்கள். இல்லை. மிகச் சாதாரண மாணவன். தனக்குப் பிடித்த பிசிக்ஸ், கம்ப்யூட்டர் இரண்டிலும் முதல் மார்க். அவனுக்குப் பிடிக்காத ``ஆஃப்ரிக்கான்ஸ்” மொழியில் தட்டுத் தடுமாறிப் பாஸ் மார்க். ஈலான் பெரிய ஆளாவான் என்று அவன் ஆசிரியர்களும், சக மாணவர்களும் கனவில் கூட நினைத்ததில்லை.

ஈலானுக்கு நெருக்கமான நண்பன் என்று பள்ளியில் யாருமே கிடையாது. வகுப்புகள் இல்லாத மொத்த நேரமும் தம்பியுடன் மட்டுமே. ஓரிரு மாணவர்கள் நினைவில் நிற்கும் ஒரே சம்பவம் – சயின்ஸ் வகுப்பில், ``பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களுக்குப் பதிலாக ஏன் சூரிய சக்தியைப் பயன்படுத்தக் கூடாது?” என்று கேள்வி கேட்டு ஆசிரியரைத் திணற வைத்திருக்கிறான். பின்னாட்களில் அவன் சிந்தையில் மலர்ந்த சுற்றுப்புறச் சூழல் முயற்சிகளின் முன்னறிவிப்பு!

ஈலானுக்கு வயது 17. பிரெட்டோரியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். பள்ளி அனுபவம் மனதில் ஆறாத ரணமாக இருந்தது. சிறு வயதில் அப்பாவோடு தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலாப் பயணம் போயிருக்கிறான். நாட்டின் பல பாகங்களில் கருப்பர் இனத்துக்கு எதிராகத் தலைவிரித்தாடிய வன்முறையை நேரடியாகப் பார்த்திருக்கிறான். நாட்டின் மீதே வெறுப்பு வந்தது. வெளிநாடுகளுக்குப் போனபோது, இந்த வெறுப்பு தீவிரமானது.

ஏராளமான நாடுகள் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துக்கொண்டிருந்தார்கள். அரசியல் உறவுகளை முறித்தார்கள், வியாபாரத் தொடர்புகளைத் துண்டித்தார்கள். தங்கள் நாடு தீவாகிக் கொண்டிருப்பது புரிந்தது. ஒரே நம்பிக்கை ஒளியான மண்டேலாவும் சிறையில். தென்னாப்பிரிக்காவுக்கு விமோசனமே இல்லை என்று நம்பிக்கை இழக்கும் நிலை. தென்னாப்பிரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது. 18 வயதான அனைவரும் கட்டாய ராணுவ சேவை செய்யவேண்டும். காட்டாட்சிக்கு சல்யூட் அடிக்க ஈலான் விரும்பவில்லை.

பல காரணங்கள். முடிவு ஒன்றே தான். தென்னாப்பிரிக்காவை விட்டு ஓடவேண்டும். ஏதாவது வெளிநாடு போகவேண்டும். எங்கே போகலாம்? மனித உரிமைகளுக்கு மதிப்புத் தரும் நாடு, சமத்துவம் நிலவும் நாடு எங்கே இருக்கிறது? அலசினான்.

அமெரிக்காவும் நிறவெறி பிடித்த தேசமாக இருந்தது. 1955 முதல், மார்ட்டின் லூதர் கிங் (1929 – 1968) கறுப்பர்களின் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டங்கள் தொடங்கினார். இதன் உச்சகட்டம், 1963 – ல் அவர் முழங்கிய “கனவொன்று கண்டேன்” (I have a dream) பேச்சு. எங்கே போகலாம் என்று ஈலான் சிந்தித்துக்கொண்டிருந்த 1987–ல், அமெரிக்காவில், மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகள் நனவாகத் தொடங்கியிருந்தன. ஈலானுக்கு இலக்கில் தெளிவு- வருங்காலம் அமெரிக்காவில்!

அம்மாவோடு பேசினான். சில யதார்த்தங்கள் தெரிந்தன. அமெரிக்காவுக்குப் போவதும், அங்கே புதுவாழ்வு தொடங்குவதும் அத்தனை சுலபமல்ல. விசா எளிதாகக் கிடைக்காது. படிக்கப் போனால், மாணவ விசா கிடைக்கும். ஆனால், கல்லூரிக் கட்டணங்களும், ஹாஸ்டல் செலவும் மிக அதிகம். அத்தனை வசதி கையில் இல்லை.

உதவி செய்யவும் யாருமில்லை. அம்மா குறுக்குவழி காட்டினார். அவர் கனடா நாட்டில் பிறந்தவர். கனடா சட்டப்படி, அவர் வாரிசுகள் குடியுரிமை பெற முடியும். அம்மாவின் சில தூரத்து சொந்தங்களும் அங்கே இருந்தார்கள். தேவைப்பட்டால் கை கொடுப்பார்கள். கனடாவிலிருந்து அமெரிக்கா போவது ஈஸி.

ஈலான் உடனேயே அப்ளை செய்தான். ஒரு வருடம். வந்தது அவன் கனடா பாஸ்போர்ட். அம்மா, கனடாவின் மான்ட்ரியால் (Montreal) நகரத்திலிருந்த தன் மாமாவுக்குக் கடிதம் எழுதினார் – “என் மகன் வருகிறான். கனடா அவனுக்குத் தெரியாத தேசம்.

எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.” மாமாவை நம்பி ஈலான் புறப்பட்டான். அவன் வாங்கியது பிரெட்டோரியா நகரத்திலிருந்து மான்ட்ரியாலுக்கு ஒன்வே டிக்கெட். செலவு மிச்சம் என்பதோடு, திரும்பிவரும் ஐடியாவே இல்லையே?
வழிநெடுக எதிர்பார்ப்புகள்.

ஏர்போர்ட்டுக்குத் தன்னை வரவேற்க வரும் மாமா, தாத்தா, தன் அம்மா வழித் தாத்தா போல் பாசமுள்ள மனிதராக இருப்பார். அவனை இதுவரை பார்த்திராத அவர் அவனை எப்படி அடையாளம் கண்டுகொள்வார்? அம்மா புத்திசாலி. நிச்சயம் அவன் போட்டோவை மாமாவுக்கு அனுப்பி இருப்பார். அவனை எப்படி வரவேற்பார்? கட்டிப் பிடித்தா? மான்ட்ரியால் விமான நிலையம்.

இறங்கினான். கண்கள் அலைந்தன. ஒரே கூட்டம். பயணிகளைக் காத்திருந்தவர்கள் கட்டிப் பிடித்தும், முத்தம் கொடுத்தும், ஆரவாரக் கூச்சலிட்டும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்தைப் பார்க்க்கும்போதும், இவர் மாமாத் தாத்தாவோ என்னும் எதிர்பார்ப்பு. கூட்டம் மெள்ள மெள்ளக் கரைந்தது. மாமா வரவேயில்லை.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x