Published : 23 Dec 2019 12:01 PM
Last Updated : 23 Dec 2019 12:01 PM

அவசரகால நிதியும் ஆதாயம் ஈட்டட்டும்

பொதுவாகவே நடுத்தர குடும்பத்தினர் அனைவருமே அவசர கால தேவைக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் சேமித்து வைத்திருப்பர்.

திடீரென ஏற்படும் மருத்துவ செலவு, உறவினர் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் செல்வதற்கு ஆகும் செலவுக்கு இத்தகைய அவசர கால சேமிப்பு நிதியை பயன்படுத்துவது வழக்கம். இவ்விதம் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருக்கும் தொகையும் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அது எவ்வாறு என்பதை ஆராய்ந்து அத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

வங்கிகளில் தற்போது சேமிப்புகளுக்குமிகக் குறைந்த வட்டியே அளிக்கப்படுகிறது. சமீபத்தில் பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. பிற பொதுத் துறை வங்கிகளும் இதேபோன்று வட்டி விகிதத்தைக் குறைக்கக் கூடும். தனியார் துறை வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி,ஐசிஐசிஐ வங்கி போன்றவை ரூ.50 லட்சம்வரையிலான சேமிப்பு கணக்கு நிதிக்கு3.5 சதவீத வட்டியை அளிக்கின்றன.

சேமிப்புக் கணக்கில் மிகப் பெரும் தொகையை வைத்திருப்பது நிதி நிர்வாகத்தில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவதில்லை. நீங்கள் அவசர கால தேவைக்கென வைத்துள்ள நிதி உங்களுக்கு சவுகர்யமான நேரத்தில் எளிதாக எடுக்கும்வகையில் இருப்பது மிகவும் முக்கியமானது. அந்தவகையில் சேமிப்புக் கணக்கில் இருப்பில் வைத்திருப்பது ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், இதைத் தவிர வேறு சில வழிகளும் உள்ளன. அத்தகைய சேமிப்பு முறைகள் மூலம் ஓரளவு கூடுதல் வட்டியையும் ஈட்ட முடியும்.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க், கோடக் வங்கி உள்ளிட்டவை சேமிப்புகளுக்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி அளிக்கின்றன. புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு தொகையை பராமரிப்பது என்பது மிகவும் சோர்வடையச் செய்யும் செயலாகவே அமையும். இதனால் உங்கள் சேமிப்பில் கூடுதலாக உள்ள தொகையை நிரந்தர வைப்புத் தொகைக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்க சூழலை நன்குணர்ந்து அதில் முதலீடு செய்ய தயங்கினால் நீங்கள் வங்கிகள் அளிக்கும் இந்த ஆட்டோமேடிக் ஸ்வீப் முறையை தேர்வு செய்யலாம். அதாவது உங்களது சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலுள்ள தொகை நிரந்தர கணக்கு தொகைக்கு மாறும். ஒருவேளை உங்களது அவசர கால தேவை அதிகமாக இருந்தால் நிரந்தர சேமிப்பு கணக்கிலிருந்து மாற்றி எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் அனைத்து வகையான சேமிப்புகணக்குக்கும் இத்தகைய தானியங்கி ஸ்வீப் வசதிகள் கிடைக்காது. உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியின் சேமிப்பு கணக்கில் எடுக்காமல் இருக்கும் தொகை தானாகவே கோல்ட் பிளஸ் சேமிப்பு கணக்குக்கு மாறிவிடும். அதாவது ரூ.75 ஆயிரத்துக்கு மேலான தொகை நிரந்தர கணக்குக்கு மாறிவிடும். இதில் ரூ.25 ஆயிரம் மடங்குகளில் நிரந்தர வைப்பு கணக்குக்கு மாறும்.

இதேபோல ஹெச்டிஎஃப்சி வங்கிக் கணக்கில் இதுபோன்ற ஸ்வீப் இன் மற்றும் ஸ்வீப் அவுட் வசதி கிடையாது. ரூ.5 கோடிக்கு மேலான தொகை மட்டுமேஇதுபோன்று நிரந்தர கணக்கு தொகைக்கு மாற்றும் வசதி உள்ளது. அதேசமயம் நிரந்தர வைப்புத் தொகை காலத்தையும் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக்சிஸ் வங்கியில் ஆறுமாதம் முதல் 5 ஆண்டு வரை நிரந்தரவைப்புத் தொகைக்கு அனுமதிக்கப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை காலம் ஓராண்டு மற்றும் ஒரு நாள் ஆகும்.

நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டிவிகிதம் அது வைக்கப்படும் கால அளவைப் பொறுத்து மாறும். ஒருவேளை அதன் முதிர்வு காலத்துக்கு முன்பாக அவசர தேவைக்கு உங்களுக்கு நிதி தேவைப்பட்டு அதை எடுத்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

வருமான வரி விகிதம்:

வங்கியின் சேமிப்பு கணக்கிலிருந்து பெறப்படும் வட்டித் தொகை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்வரை இருந்தால் அதற்கு வருமான வரிசட்டம் 80 டிடிஏ பிரிவின்கீழ் வரி கிடையாது. நிரந்தர சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்பட்டு அதிலிருந்து வட்டி கிடைத்தாலும் வரி விதிப்பு விதியில் மாற்றம்கிடையாது. ஒருவேளை முதிர்வு காலத்துக்கு முன்பாக நீங்கள் பணத்தை எடுக்கும்பட்சத்தில் அதற்கு விதிக்கப்படும் அபராத தொகை உள்ளிட்டவற்றை வருமான வரி தாக்கலில் பதிவு செய்யலாம்.

நீங்கள் அவசர கால தேவைக்காக வைத்துள்ள நிதி ஓரளவு வட்டி வருவாயைதிரட்டலாம் என நீங்கள் முடிவு செய்தால் ஸ்வீப் எனும் வசதியை தேர்வு செய்யலாம். அதற்கு முன்பு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்து கொண்டு இந்த வழிவகையை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு ஓரளவு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் துணிச்சல் இருந்தால், லிக்விட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் உங்களதுசேமிப்பு ஓரளவு கூடுதல் ஆதாயம்ஈட்டும்.இதில் கடன் பத்திர முதலீடுகளில் குறைந்தபட்ச முதிர்வு காலம் 91 நாட்களாகும்.

இத்தகைய லிக்விட் ஃபண்ட் திட்டங்கள் பெரும்பாலும் திறந்த நிலை அடிப்படையிலானவை. இத்திட்டத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு லாக்-இன் காலம்ஏதும் கிடையாது. ஏழு நாட்களுக்குள் திரும்ப எடுத்தால் மட்டுமே மிகச்சிறிய தொகை பிடித்தம் செய்யப்படும்.அதுவும் பங்குச் சந்தை விதிமுறைகளுக் உட்பட்டதே.

2017-ம் ஆண்டிலிருந்து லிக்விட் ஃபண்டுகளில் எளிதில் முதலீடு செய்யும் வசதியை செபி ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய திட்டங்களிலிருந்து வெளியேறினால் அன்றைய தினமே வர்த்தக முடிவுக்குப்பிறகு வங்கிக் கணக்கில் பணத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்ய வழியேற்படுத்தியுள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை (ரூ.50 ஆயிரம் வரை) எடுக்க முடியும்.

பரஸ்பர நிதி திட்டங்களை செயல்படுத்தும் நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம் ``எனி டைம் மணி கார்டு’’ என்ற பெயரில் ஏடிஎம் கார்டை அளித்துள்ளது. இதன் மூலம் லிக்விட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிதிட்டங்கள், அதாவது லிக்விட் ஃபண்ட்கள் வங்ககளின் நிரந்தர வைப்பு தொகைசேமிப்பு திட்டத்தை விட சற்று சிக்கலானது. அதாவது பங்குச் சந்தை ஏற்ற,இறக்கங்களால் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் கொண்டவை. இதனால் முதலீட்டுக்கான வருமானம் அதன் செயல்பாடுகளைப் பொருத்தே அமையும்.

இருந்தாலும் லிக்விட் ஃபண்ட் முதலீடானது ஓரளவு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. இது ஓரளவு வங்கிவட்டி விகிதத்தை விட குறைவதற்கான வாய்ப்பு இல்லாதது. மேலும் முதலீட்டுதொகைக்கு பங்கம் ஏற்படுத்தாதவைஆகும். அதேபோல உங்களுக்கு பணம் தேவைப்படும்போது உடனடியாக ரிடெம்ஷன் செய்யும் வசதியும் உண்டு. லிக்விட் ஃபண்டுகள் சராசரியாக 6.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆதாயம் ஈட்டக் கூடியவை. இது வங்கிகள் அளிக்கும் வட்டியை விட அதிகமாகும். இருப்பினும் நீங்கள் அடையும் ஆதாயத்துக்கு எந்த அளவு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x