Published : 23 Dec 2019 11:49 AM
Last Updated : 23 Dec 2019 11:49 AM

எண்ணித் துணிக: பெயர் நன்றாயிருந்தால் போதுமா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தொடங்கி, தொழிலை நிர்ணயித்து, பொருளுக்கு பொசிஷனிங் செய்து அதை பிராண்டாக்கிவிட்டேன், இனி விற்க வேண்டியதுதான் பாக்கி என்று நினைப்பவர்கள் கவனத்துக்கு. குழந்தையைப் பெற்றுவிட்டீர்கள் சரி, அதற்கு பெயர் வைத்து டிரெஸ் தைத்து, பொட்டு வைத்து, பவுடர் போட்டு பளபளப் பாக்க வேண்டாமா? பிராண்டுக்கு பெயர் வைத்து லோகோ டிசைன் செய்து, பேஸ்லைன் எழுதி, வெப்சைட் வடிவமைத்து இன்னமும் ஏகப்பட்டது பாக்கியிருக்கிறதே. பிறந்த பிராண்டை முழுமையாக்க வேண்டுமே.

பிராண்டை முழுமையாக்கும் சகல விஷயங்களுக்கும் பிராண்ட் எளிமெண்ட்ஸ் என்று பெயர். மற்ற பிராண்டுகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட, ரிஜிஸ்டர் செய்து பாதுக்காக்கக்கூடிய வகையில் அமையும் பிராண்ட் பெயர், பேஸ்லைன், லோகோ, கேரக்டர், யூஆர்எல், பேக்கேஜிங், ஜிங்கிள் போன்றவைதான் பிராண்ட் எளிமெண்ட்ஸ். பொருளை பிராண்டாக்கி உயிர் கொடுக்க பொசிஷனிங் தேவை என்றால் அந்த பிராண்டுக்கு உணர்ச்சி கொடுக்க, உத்வேகத்துடன் செயல்பட வைக்க தேவை பிராண்ட் எளிமெண்ட்ஸ்.

பிராண்ட் என்பது பொருளுக்கு ஒரு பயனை அறியிடுவது என்றால், அந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்க நீங்கள் செய்யும் இந்த அனைத்து செயல்களும்தான் பிராண்டிங். ஆக, பிராண்ட் என்பது ஐடியா என்றால் பிராண்டிங் என்பது அந்த ஐடியாவை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களும்.
ஏதோ ஒரு பெயர் வைத்தோம், லோகோ செய்தோம், ஒரு கலரில் பாக்கேஜிங் அமைத்தோம், வெப்சைட் திறந்தோம் என்று விளையாட்டாக எளிமெண்ட்ஸை வடிவமைத்தால் வினையாகத்தான் போய் முடியும். கவனத்துடன் செய்ய வேண்டிய பணி இது.

குழந்தையை பெற்றதோடு நிறுத்தாமல் பார்த்து வளர்க்க வேண்டிய பக்குவம் இது. பெயர் நன்றாயிருந்தால் வாடிக்கையாளர் பிராண்டை வாங்குவாரா? லோகோ அழகாக இருந்தால் பிராண்ட் விற்றுவிடுமா? பாக்கேஜிங் ஜோராக இருந்தால் விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்குமா என்று கேட்கலாம். பிராண்ட் எளிமெண்ட்ஸை தெளிவாக, திறமையாக வடிவமைத்தால் பிராண்ட் வாடிக்கையாளர் கண்ணில் பளீர் என்று படும். எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் தனியாகத் தெரியும்.

அட்லீஸ்ட் வாடிக்கையாளரை பிரண்டை எடுத்துப் பார்க்க வைக்கும். அவரை வாங்கவே தூண்டும். ஆக, எளிமெண்ட்ஸை திறமையுடன் வடிவமைத்தால் விற்பது எளிதாகும். பிராண்ட் எளிமெண்ட்ஸ் ஒவ்வொன்றையும் உருவாக்கும் விதம் பற்றி தனித்தனியாகப் பார்ப்பதற்கு முன் இவைகளை வடிவமைக்கும் போது மனதில் நிறுத்தவேண்டிய ஆறு முக்கிய விஷயங்களை அலசுவோம்.

எந்த பிராண்ட் எளிமெண்ட்ஸை வடிவமைக்கும் போதும் அது வாடிக்கையாளர் மனதைக் கவர்ந்து அவரால் மறக்கமுடியாததாக இருக்கும்படி வடிவமைப்பது அவசியம். மனதைக் கவர்ந்தால்தான் போட்டியாளர் பிராண்டுகள் மத்தியிலும் எளிமெண்ட்ஸ் வாடிக்கையாளர் கண்ணை பறிக்கும்.

அவரை வாங்கத் தூண்டும். பிராண்ட் எளிமெண்ட்ஸ் மனதை கவர்ந்தால் மட்டும் பத்தாது. பிராண்ட் பொஷிஷனிங்படி அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். ‘ரின்’ டிடெர்ஜெண்ட் தன் லோகோவாக ‘மின்னலை’ பயன்படுத்துகிறது. மின்னலைப் போல் வேகமாக வெண்மை தரும் என்று இதைவிட அழகாக எப்படி ஒரு டிடெர்ஜண்டால் கூற முடியும்.

மனதுக்கு ஒன்று பிடித்துவிட்டால் மற்றதெல்லாம் அடுத்தபட்சம் தானே. மனதுக்கு ஒன்று பிடிக்கும்போது நம் நினைவில் நிற்கிறது. அதைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் உருவாகிறது. பிராண்ட் எளிமெண்ட்ஸ் வாடிக்கையாளருக்கு பிடித்திருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். ‘பிரிட்டானியாவின்’ டின் டின் ட டின் என்கிற இசை, ‘பெப்சி’யின் நீல நிறம் போன்றவை வாடிக்கையாளர் மனதை கவர்ந்ததால் தானே மார்க்கெட்டில் சக்கை போடு போடுகின்றன.

பிராண்டை வேறு பொருள் வகைகளுக்கோ, வேறு மார்க்கெட்டுக்கோ எடுத்துச் செல்லும் போது அதன் எளிமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும்படி வடிவமைப்பதும் பயன் தரும். பசுவின் பால் என்று தமிழில் பொருள் பட அழகாக ‘ஆவின்’ என்று பெயரிட்டால் தமிழ்நாட்டில் ஓகே. ஆனால் இந்த பிராண்டை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்ல நேர்ந்தால் ஆவின் என்பது அங்கு யாருக்கு புரியும்? காலம் அப்படியே செல்வதில்லை.

வாடிக்கையாளர் எண்ணங்களில் மாற்றம் வரும். ஒரு காலத்தில் அழாகாக தெரிந்த லோகோ பிற்காலத்தில் ஆர்டினரியாக தெரியலாம். ஒரு காலத்தில் கவர்ச்சியாக தெரிந்த கலர் இன்று கன்றாவியாக தெரிவது போல. பிராண்ட் எளிமென்ட்ஸ் காலத்திற்கேற்ப, மாறிவரும் ரசனைகளுக்கேற்ப எளிதில் மாற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுவது பயன் தரும். ‘அருண்’ ஐஸ்க்ரீம் பிராண்டின் லோகோ ஒரு சில வருடங்களுக்கு முன் மாற்றப்பட்டது. என்ன மாற்றம் என்பதை ‘கூகுள்’ செய்து பாருங்கள், நான் சொல்வது புரியும். மனை வாங்கினால் மட்டும் போதாது.

அதைச் சுற்றி வேலி கட்டி பாதுகாக்கிறோம் அல்லவா, அதுபோல பிராண்ட் எளிமெண்ட்ஸை வடிவமைத்தால் மட்டும் போதாது. அதை சட்டப்பூர்வமாக பாதுகாக்க ரிஜிஸ்டர் செய்வதும் அவசியம். ஸ்டார்ட் அப் ஆரம்பித்த கையோடு முதல் காரியமாக பிராண்டின் பெயரை ரிஜிஸ்டர் செய்யுங்கள். பல கம்பெனிகள் தங்கள் பேஸ்லை
னைக் கூட ரிஜிஸ்டர் செய்கின்றன. பிராண்ட் எளிமெண்ட்ஸை வடிவமைக்கும் போது இந்த ஆறு கைட்லைன்ஸையும் ஒரு சேர அனுசரித்து அனைத்தும் அமையும்படி வடிவமைப்பது ரொம்பவே சிரமமான காரியம் தான். அதனால்தான் பிராண்ட் எளிமெண்ட்ஸ் அனைத்தையும் ஒரு கோர்வையாய் ஒன்றை ஒன்று சப்போர்ட் செய்யும்படி வடிவமைப்பது பயன் தரும்.

ஆக, பிராண்ட் வேறு, பிராண்டிங் வேறு. பிராண்ட் என்பது ஐடியா. பிராண்டிங் என்பது அந்த ஐடியாவை பிரதிபலிக்க, வாடிக்கையாளர்களுக்கு ஒலிபரப்ப செய்யப்படும் அனைத்து செயல்களும். பிராண்ட் என்பது ஐடியா என்றால் பிராண்டிங் என்பது அந்த ஐடியாவை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிய வைக்கும் சிக்னல்கள்!
பிராண்ட் ஐடியா என்பது உள்புற செயல்பாடு. இதைத்தான் முதலில் முடிவு செய்யவேண்டும். இதுவே பிராண்டின் பிள்ளையார் சுழி.

அதன் ஆதி அந்தம் அனைத்தும். பிராண்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது அதன் ஆதார ஐடியா. அதை உலகிற்கு பறைசாற்ற செய்யும் வெளிப்புற செயல்கள் பிராண்டிங். அதாவது சிக்னல்கள். ஆக, பிராண்ட் வேறு பிராண்டிங் வேறு என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். பிராண்ட் எளிமெண்ட்ஸின் முக்கிய அம்சங்களை வடிவமைக்கும் வழிகளை விதங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x