Published : 23 Dec 2019 11:33 AM
Last Updated : 23 Dec 2019 11:33 AM

125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழையும் யமஹா: பிஎஸ் 6-ல் முன்னணி மாடல்கள் அறிமுகம் 

இரு சக்கரமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கரமாக இருந்தாலும் சரி, தற்போது வாகன விற்பனை மந்த நிலையில் உள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் யமஹா நிறுவனம் பெரும் நம்பிக்கையுடன் சமீபத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் ஏதும் அறிமுகம் செய்யப்படவில்லை. அனைத்தும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள்தான்.

இருப்பினும், இந்த அறிமுகங்கள் யமஹா நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வருகைதான். ஏனென்றால், யமஹா இந்த முறை ஸ்கூட்டர் பிரிவில் 125 சிசி மாடலில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் தற்போதைய அறிமுகம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் முதல் விற்பனையாகும் வாகனங்கள் பிஎஸ் 6 விதிகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில் யமஹா அதன் முன்னணி தயாரிப்புகளை பிஎஸ் 6-ன் கீழ் தயாரித்து மேம்படுத்தப்பட்ட மாடல்களாக அறிமுகம் செய்துள்ளது.

ஃபேஸினோ 125 எஃப்ஐ, ரே இஸட் ஆர் 125 எஃப்ஐ, ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ, எம்டி-15, ஆர்-15 வெர்சன் 3 ஆகிய மாடல்களை இந்த மாதத்தில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூட்டர் மாடலில் யமஹாவின் முக்கிய தயாரிப்பு என்றால் அது ஃபேஸினோதான். இதுவரை ஃபேஸினோவில் 110 சிசி மாடல்கள்தான் வெளிவந்து இருக்கின்றன.

இந்நிலையில் புதிய ஃபேஸினோ 125 சிசி-யில் வெளிவந்துள்ளது. அதேபோல் பிஎஸ்6 விதியின்கீழ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இன்ஜின் திறன், மைலேஜ் என்ற இரு முக்கிய அம்சங்களும் முந்தைய மாடலில் இருந்து மேம்பட்டுள்ளது.

இதன் இன்ஜின் திறன் 30 சதவீதமும், மைலேஜ் 16 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.2 பிஎஸ் பவரை 6500ஆர்பிஎம்-ல் இதன் இன்ஜின் உற்பத்தி செய்யும். இந்த மாடலின் எடை 99 கிலோ.

கிட்டதட்ட முந்தைய மாடல்களைவிட 4 கிலோ குறைவு. டிஸ்க், டிரம் இருவகையிலும் கிடைக்கிறது. நவீன வசதிகள் பல பொருத்தப்பட்டுள்ளன. டிராஃபிக்குக்கு என்று தனி சென்சார் உள்ளது. டிராஃபிக் சமயங்களில் வாகன இயக்கத்தை அது கட்டுப்படுத்துகிறது. விவித் ரெட்,மெட்டாலிக் பிளாக், எல்லோ காக்டெய்ல், மேட்டி ப்ளூ, டார்க் மேட்டில் ப்ளூ, சுவேவ் காப்பர் மற்றும் சியான் ப்ளூ உள்ளிட்ட வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விலை ரூ.66,400 முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஃபேஸினோவின் தோற்றம் பேமிலி மாடல் போன்றது என்றால், ‘ரே’ ஸ்போட்ர்ஸ் மாடல் போன்று தோற்றம் கொண்டது. அந்த வகையில் அன்றாட பயன்பாடுகள் தவிர்த்து சாகச அனுபவத்தை விரும்புவர்களை நோக்கமாகக் கொண்டு ரே இசட் ஆர் 125எஃப் ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ இரு மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய ரே இசட் ஆர் 125எஃப் ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ இரண்டும் தோற்றத்தில்தான் மாறுபடுகிறதே தவிர, இன்ஜின், மைலேஜ் போன்ற பிற அனைத்தும் இரு மாடல்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் யமாஹா உள்ளது.

ஸ்ட்ரீட் ரேலி, ஆஃப் ரோடு மாடல் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது. வேகமாக செல்கையில் காற்று கையில் உராய்வதை தடுக்கும் வகையில் ஆக்ஸிலேட்டர் கவர் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்த மாடலுக்கு கூடுதல் ஸ்போர்டிவ் லுக் கொடுக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே வகையான இன்ஜின்தான் பொருத்தப்பட்டு உள்ளது. இன்ஜின் 8.2 பிஎஸ் பவரை 6,500 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முகப்பில் ஒய் வடிவ எல்இடி பொறுத்தப்பட்டு இருக்கிறது.

அது இந்த மாடல்களை கூடுதல் ஸ்டைலாக காட்டுகிறது. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ப்ளூ, மேட் ரெட் மெட்டாலிக் மற்றும் ரெட்டிஷ் யெல்லோ காக்டெய்ல் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கின்றன. ஸ்ட்ரீட் ரேலி, டீப் பர்பிளிஷ் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஸ்பார்க்கிள் கிரீன் இரு கலர்களில் மட்டும் கிடைக்கும். இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஸ்கூட்டர் மாடல்களின் அறிமுகத்தோடு, பைக் மாடலும் புதிய அறிமுகம் செய்துளது.

எம்டி-15 மற்றும் ஆர்15 வெர்சன் 3 இரண்டின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. எஃப்இசட், ஆர் 15 மாடல்கள் யமாஹாவின் பைக் பிரிவில் அதிகம் விரும்பப்படுபவை. ஆனால் வெளி நாட்டு சந்தையில் எம்டி- சீரியஸ்க்கு வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த வருடத் தொடக்கத்தில் எம்டி 15 மாடலை அறிமுகம் செய்தது. டிவிஎஸ் அப்பாச்சி, ஹோண்டா ஹார்னெட், சுசூகி ஜிக்சர் போன்ற 150 சிசி மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதன் மேம்பட்டுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடல் பிஎஸ் 6 விதியின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குறிப்பிடத்தக்க மாறுதல்களை இது கொண்டிருக்கவில்லை. முந்தைய மாடலில் உள்ள அதே 155 சிசி இன்ஜின்தான் இதிலும். 19.3 பிஎஸ் பவரை 14.4 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும்.

டபுள் டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ளது. கச்சிதமான அவுட் லைன் இந்த மாடலுக்கு பலம் சேர்க்கிறது. லிட்டருக்கு 48 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. முந்தையமாடலின் விலை ரூ.1.36 லட்சமாக உள்ளது. எனில் இதன் விலை அதைவிட 10 சதவீதம் அளவில் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்டி 15-க்கும் கேடிஎம் 125-க்கும் கடும்போட்டி நிலவுகிறது. அதேபோல் ஆர்15 வெர்சன் 3- மேம்படுத்தப்பட்ட மாடலைப் பொருத்தவரையில், பிஎஸ் 6 விதியின்கீழ் தயாரிக்கப்பட்டு இருப்பதே அதன் தனிச் சிறப்பு. 155 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 18.6 ஹார்ஸ் பவரை 10,000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும். இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x