Published : 23 Dec 2019 10:50 AM
Last Updated : 23 Dec 2019 10:50 AM

ஹுண்டாயின் ‘ஆசம்’ ஆரா 

இந்திய கார் சந்தையில் ஹுண்டாய் தொடர்ந்து தனது எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஹுண்டாய் கோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் தனது செடான் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஆரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார் இன்றைய இளம் தலைமுறையினருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்போர்ட்டியான டிசைன், துடிப்பான செயல் திறன் என ஆரா அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஹுண்டாயின் எக்சென்ட் மாடலுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் நீளம் 3,995 மிமீ, 1,680 மிமீ அகலம், 1,520 மிமீ உயரம் என்ற அளவில் உள்ளது. இது மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்டுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்களுடன் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த செக்மென்டில் முதன்முறையாக டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இதில்தான் உள்ளது. இந்த ஆரா தற்போது சந்தையில் உள்ள மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா டிகோர், ஃபோர்டு அஸ்பயர், ஃபோக்ஸ்வேகன் அமியோ ஆகியவற்றுக்குப் போட்டியாக உள்ளது.

டிசைனைப் பொருத்தவரை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ஆரா உள்ளது. ரூஃப் லைன், கிளாஸ் மற்றும் பின்பக்க தோற்றம் ஆகியவற்றின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. முன்பக்கத்தில் கிரில் டிசைன் இன்டக்ரேட்டட் எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்க விளக்குகளும் பிரமாதமாக பொருத்தப்பட்டுள்ளன.

முன்பக்க தோற்றம் வழக்கமான ஹுண்டாய் கார்களைப் போலவே இருந்தாலும், ஆராவின் பின்பக்க தோற்றம்தான் அதை அழகாக்குகிறது என்று சொல்லலாம். மேற்கூரை பின்பக்கத்தில் சென்று சேரும்விதம் கூபே கார்களில் இருப்பதைப் போலவே உள்ளது. இதனால் காருக்கு ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றம் கிடைக்கிறது.

இன்டீரியர் விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. அதேபோல் விலையும் குறிப்பிடப்படவில்லை. ஜனவரி மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது மற்ற விவரங்கள் தெரியவரும். விலை தோராயமாக ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சத்துக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x