Published : 22 Dec 2019 09:50 am

Updated : 22 Dec 2019 09:54 am

 

Published : 22 Dec 2019 09:50 AM
Last Updated : 22 Dec 2019 09:54 AM

முகம் நூறு: இசைத் துறையில் வெற்றிபெற குறுக்குவழி உதவாது! - கர்னாடக இசைப் பாடகி எஸ்.சௌம்யா

karnatic-musician-s-sowmya

வா.ரவிக்குமார்

கேட்கும் செவிக்கும் உணரும் மனத்துக்கும் இனிமையாகப் பாடும் முறையை ‘சவுக்கியம்’ என்பார்கள். அப்படிப்பட்ட சவுக்கியமான கர்னாடக இசையைத் திகட்டாமல் ரசிகர்களுக்கு அளிக்கும் எஸ்.சௌம்யா, இசைத் துறையில் மிக உயரிய விருதாக மதிக்கப்படும் ‘சங்கீதக் கலாநிதி’ விருதைப் பெறவிருக்கிறார்.


மரபான கர்னாடக இசையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், தொன்மையான சரஸ்வதி வீணையை வாசிக்கும் கலைஞர், முனைவர் பட்ட ஆய்வுக்காக அறிவியலும் இசையும் சந்திக்கும் புள்ளியாக மிருதங்கத்தின் பன்முகத் தன்மையை அணுகியவர் எனப் பல பரிமாணங்களில் பளிச்சிடுபவர் எஸ்.சௌம்யா. பாடலில் மட்டுமல்ல; அவருடைய பேச்சிலும் ஆதார ஸ்ருதி எதிரொலித்தது!

இசைத் துறையில் மிகப் பெரிய அங்கீ காரமாக மதிக்கப்படும் சங்கீதக் கலாநிதி விருதை நாமும் பெற்றே ஆக வேண்டும் என்ற உத்வேகம் சிறுவயதிலிருந்தே இருந்ததா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் விருது வாங்க வேண்டும் என்பது இல்லை. விருது வாங்குபவர்களைப் பார்ப்பதே பெரிய அனுபவமாக இருக்கும். இதைப் பற்றி நினைப்பதற்கே அப்போது அருகதை இருப்பதாக நினைத்ததில்லை. ஆனால், மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது. என்னுடைய குரு எஸ்.ராமநாதன் அவர்களுடன் சிறு வயதிலேயே வந்து பார்த்திருக்கிறேன்.

மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீதக் கலாநிதி’ விருது என்றாலே மூத்த இசைக் கலைஞர்களுக்கு வழங்குவதுதான், தொடர் வழக்கமாக இருந்தது. பெண்களில் மிக இளம் வயதில் இந்த விருதைப் பெறும் இரண்டாம் கலைஞர் என்னும் பெருமையை எப்படி உணர்கிறீர்கள்?

முதலில் மிகப் பெரிய பாரம்பரியத்தையும் அனுபவத்தையும் கொண்ட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அதன்பின் இளம் கலைஞர்களுக்கும் அவர்களுடைய இசைப் பங்களிப்பையொட்டி இந்தப் பெருமைமிகு விருதை அளிக்கத் தொடங்கினார்கள். ஓர் இளம் இசைக் கலைஞரான எனக்கு இந்த விருது அளித்திருக்கும் அங்கீகாரமும் உத்வேகமும் அளப்பரியது. இசையில் உழைத்து முன்னுக்குவர வேண்டும்; இசைக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு அளித்த அறிவுரை. அதற்கு ஒரு பாடகியாகவும் இசை ஆசிரியராகவும் பரிபூரணமான என்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். தொடர்ந்து வழங்குவேன்.

‘சங்கீதக் கலாநிதி’ எஸ். ராமநாதன், ‘சங்கீத ஆச்சார்யா’ டி. முக்தா ஆகிய இரண்டு பெரிய மரபான இசைப் பள்ளிகளில் பயின்றவர் நீங்கள். அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?

அந்தக் காலத்தில் இருந்த ஆசிரியர்கள் அனைவருமே தங்களின் சீடர்கள் பாடும்போது ‘ஆஹா ஓஹோ' என்றெல்லாம் பாராட்டிவிட மாட்டார்கள். அப்படிப் பாராட்டக் கூடாது என்பதல்ல; வளரும் கலைஞர்களுக்குத் தலைக்கனம் ஏறிவிடக் கூடாது என்பதுதான் காரணம். ஆனால், அவர்களிடமிருந்து நம்முடைய இசையை மெருகேற்றும் கரிசனத்துடன் கூடிய ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கும். டி.முக்தாம்மா, கச்சேரி மேடையிலேயே சீடர்களை அருகில் அமர்த்தி உடன் பாடச் செய்வார். அதெல்லாம் பெரிய கொடுப்பினை.

இளைஞர்களிடம் தகவல் தொழில்நுட்பம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. கர்னாடக இசையைக் கற்றுக்கொள்வதற்கும் அதைப் பலர் நாடுகிறார்களே?

தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதுதான். நொடிப் பொழுதில் விரல் நுனியில் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன, பரிமாற்றங்கள் நடக்கின்றன. மகிழ்ச்சிதான். ஆனால், யூடியூபில் ஒருவர் பாடுவதைப் பார்த்து இசையைக் கற்றுக்கொள்ள முடியாது. இதே தொழில்நுட்பத்தின் மூலம் ‘ஸ்கைப்’பில் ஒரு குருவின் மூலமாக இசையைக் கற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால்தான் அர்ப்பணிப்பு மிகுந்த சங்கீதத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் இசை கற்கும் இளைஞர்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும். இசையில் வெற்றியும் விருதுகளும் பெறுவதற்குக் குறுக்குவழி உதவாது. ஒரு குருவின் வழிநடத்துதல் மிகவும் முக்கியம்.

வெறும் ‘ரெசிபி’யை வைத்துக்கொண்டு எல்லா உணவையும் சமைக்க முடியுமா? அனுபவமும் கைபக்குவமும் இருந்தால்தானே உணவு ருசிக்கும்? அப்படித்தான் இசையும். குருவுடனான உரையாடல் என்பது வெறும் இசையை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அவருடைய அனுபவம், தனிப்பட்ட முத்திரை என எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதுதானே!

மேற்குலகில் காஸ்பல் மியூசிக், ஓபரா போன்ற பல பாணிகள் இருக்கின்றன. கர்னாடக இசை பக்தியால் கட்டப்பட்டிருக்கிறது. நடைமுறை வாழ்க்கையின் மகிழ்ச்சி, சோகம், போராட்டங்களை அது பிரதிபலிப்பதில்லை என்ற விமர்சனமும் இருக்கிறதே?

கர்னாடக இசை நெகிழ்வுத்தன்மை கொண்டதுதான். நீங்கள் மேற்குலகை உதாரணம் காட்டியதால் சொல்கிறேன், இங்கே இல்லாத ஓபராவா? நந்தனார் சரித்திரம், குறவஞ்சி, சங்கத் தமிழ்ப் பாடல்கள், சிலப்பதிகாரம் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையைத்தான் திரைப்பாடல்கள் பிரதிபலிக்கின்றனவே? செம்மொழி என்று தமிழை அதன் செழுமைக்குத்தானே சொல்கிறோம்.

அதேபோல், செவ்வியல் இசையான கர்னாடக இசைக்கென்று ஒரு பெருமை இருக்கிறது. அதேநேரம் நம்முடைய கர்னாடக இசையின் நெகிழ்வுத்தன்மையை அளவிட முடியாது. நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இருந்தால், கர்னாடக இசையின் நெகிழ்வுத்தன்மையை நம்மால் உணர முடியாது.

தமிழில் வளமான சாகித்யங்கள் இருந்தும் கர்னாடக இசை மேடைகளில் உங்களைப் போன்ற சிலர்தானே தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடுகிறீர்கள்?

கற்றுக் கொடுப்பவர்கள், கற்றுக் கொள்பவர்கள் இருவருமே இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

கச்சேரிகளில் பதச் சேதம் (வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் இருப்பது) ஏற்படாமல் பாடுவதற்கு என்ன வழி?

எந்த மொழியில் பாடுகிறோமோ அந்தப் பாடலுக்கான அர்த்தம், உச்சரிப்பு சுத்தம் மிகவும் முக்கியம். இலக்கணச் சுத்தமாக எனக்குத் தெலுங்கு தெரியாவிட்டாலும், நான் பாடும் கீர்த்தனைகளுக்கான அர்த்தம், அதில் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்கிற தெளிவு இருக்கிறது. எந்த மொழிக்கும் இது பொருந்தும். கற்றுக்கொள்ளும்போதே ஆழமாகக் கற்றுக்கொண்டு பாடினால் பதச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கடம் எனப் பல விதமான வாத்தியங்களைப் பெண்கள் இன்றைக்கு வாசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான வாய்ப்புகள் கர்னாடக இசை மேடைகளில் கிடைப்பதில்லையே?

பெண் வாத்தியக் கலைஞர்கள் தொடக்கத்தில் மிகவும் குறைவாகவே இருந்தனர். இப்போதுதான் பல வாத்தியங்களில் நிபுணத்துவம் பெற்றுவருகின்றனர். பெங்களூருவில் என்னுடைய கச்சேரிக்கு சுகன்யா ராம்கோபால்தான் கடம் வாசிப்பார். நிறைய வாய்ப்புகள் இனி, பெண் வாத்தியக் கலைஞர்களுக்கும் கிடைக்கும்.

படங்கள்: பு.க.பிரவீன்

முகம் நூறுஇசைத் துறைகுறுக்குவழிகர்னாடக இசைப் பாடகிKarnatic musicianSowmyaசங்கீதக் கலாநிதி விருதுமியூசிக் அகாடமிஇரண்டாம் கலைஞர்தொழில்நுட்பம்கர்னாடக இசைவயலின்புல்லாங்குழல்மிருதங்கம்கடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

iga-swiatek

இகா யுகம்!

இணைப்பிதழ்கள்
weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x