Published : 22 Dec 2019 09:56 AM
Last Updated : 22 Dec 2019 09:56 AM

வாசிப்பை நேசிப்போம்: பிரிந்த நண்பர்களைச் சந்தித்தேன்

மதுவுக்கு அடிமையாக இருந்த என் மாமாவின் நினைவிலிருந்து விடுபட என் அத்தை அவர் தோழி மணியக்காவிடம் படிப்பதற்கு ஏதாவது வாங்கி வா என்று அனுப்புவார். இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய எனக்கு அப்போது ‘தேவி’, ‘ராணி’, குங்குமம்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற வார இதழ்கள் அறிமுகமாயின. அவற்றின் தொடர் வாசிப்பால் ஒரு கட்டத்தில் என்னால் வாசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்டேன்.

ஆனால், வீட்டின் வறுமை காரணமாக என்னால் புதிய புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாது. அப்போது என் அப்பா எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த சரவணா பேக்கரி அருகில் உள்ள பழைய தள்ளுவண்டிக் கடையில் நிறையப் பழைய புத்தகங்கள் உள்ளன என்று சொன்னதுடன் இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

காசை வாங்கி கொண்ட எனக்குத் தலை கால் புரியவில்லை. தள்ளுவண்டிக் கடையிலோ மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது இரண்டு ரூபாய் புத்தகம் ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. அதே புத்தகத்தைப் படித்து முடித்துத் திருப்பிக் கொடுத்தால் ஐம்பது பைசா கொடுப்பதாகக் கடைக்காரர் சொன்னார்.

நான் அடைந்த பரவசத்தைச் சொல்லவா வேண்டும்? கைநிறையப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தேன். இதற்கிடையே என் அப்பா தனியார் நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தார். ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்றால்கூட ஒரு வாரத்துக்கு முன்பே சொல்ல வேண்டும். நிறுவனத்தில் ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். நிறுவனத்தில் எங்கே பார்த்தாலும் மனிதத் தலைகள் கடல் அலைபோல் தென்படும்.

படாதபாடு பட்டு அப்படி விடுமுறை எடுக்கும் நாட்களில் அவ்வளவு நாள் பிரிந்திருந்த புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். எங்கள் வீட்டில் மின் வசதி இல்லாததால் சிம்னி விளங்கு வெளிச்சத்தில்தான் படிக்க முடியும். ஆனால், சிம்னி வெளிச்சம் புத்தகம் படிக்கப் போதுமானதாக இருக்காது. இதனால் நான் ‘காண்டா விளக்கு’ வைத்து படிப்போன்.

காண்டா விளக்கிலிருந்து வெளிச்சம் அறை முழுவதும் பரவும். தூங்கிக்கொண்டிருக்கும் அப்பா என்னிடம் சத்தம் போடுவார். ஆனால், அதையெல்லாம் நான் காதில் வாங்கிக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், அந்த நேரத்தில்தான் எழுத்தாளர்கள் தேவிபாலா, சிவசங்கரி, அனுராதா ரமணன், சுபா, சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் ஆகியோரின் கதைகளைப் படித்துக்கொண்டிருப்பேன்.

பள்ளிக்குச் செல்லாத எனக்கு ஆங்கில வார்த்தைகளை ராஜேஷ்குமார் நாவல்களும் அறிவியலை சுஜாதாவின் நாவல்களும் கற்றுத்தந்தன. ஆனால், இந்த சந்தோஷம் எல்லாம் திருமணம் வரைதான். திருமணத்துக்குப் பிறகு முழுநேர குடும்பத் தலைவியாகிவிட்டேன். இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர், “ஒரு இன்ப அதிர்ச்சி யைக் காட்டவா?” எனக் கேட்டார்.

என்னெவென்று பார்த்தால் புத்தகங்கள். குழந்தைகளின் புத்தகத்தை மட்டும் பார்த்துச் சலித்த என் கண்களுக்கு, பிரிந்த நண்பர்களை மீண்டும் சந்தித்தது போல் இருந்தது அந்தத் தருணம். பழைய பாதையில் புதிய பயணத்தைத் தற்போது தொடங்கியிருக்கிறேன்.

- ஆர். சொர்ணலெட்சுமி, கும்பகோணம்.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும்.

நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப் படத்துடன் எழுதி அனுப்புங்கள். எந்தப் பதிப்பகம் என்பதையும் குறிப்பிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x