Published : 22 Dec 2019 09:59 AM
Last Updated : 22 Dec 2019 09:59 AM

நட்சத்திர நிழல்கள் 37: கணவன் சாமியல்ல தேன்மொழி

செல்லப்பா

திருமணம் பாதுகாப்பானது என்பதற்காகப் பெற்றோர் பலர் தம் பெண்களுக்கு மணமுடித்துவைப்பதையே வாழ்வின் லட்சியமாகக் கருதிச் செயல்படுகிறார்கள். ஆனால், நிம்மதியும் பாதுகாப்பும் தரும் என்று நம்பி நிறைவேற்றப்படும் திருமணங்களே பல நேரத்தில் அவர்களது மகிழ்ச்சியைப் பறித்துவிடுகின்றன.

கணவன் என்ற பெயரில் சில வாடாவழிகள் குடும்பத்தின் நிம்மதியைக் குழிதோண்டிப் புதைப்பார்கள். அப்படி ஒருவனைக் கணவனாகப் பெற்றிருந்தாள் சிதம்பரத்துக்காரியான தேன்மொழி. சிதம்பரத்தில் நடராஜர் ஆட்சி!

தேன்மொழியின் கணவன் குடிகாரன், புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவன், சீட்டு விளையாடுபவன், கேபரே நடனத்தைக் கண்டுகளிப்பவன். ஆனால், நல்லவன். திகைப்பாக இருக்கிறதா? இவ்வளவு கெட்ட பழக்கங்கள் கொண்டவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? ஏனெனில், இவை கெட்டவை என்பது அவனுக்கும் தெரியும்; ஆனாலும், அவனால் கைவிட முடியவில்லை.

இளகிய மனம் கொண்ட அவனால் இவ்வளவு பலவீனங்களையும் எளிதில் விட முடியவில்லை. எனவே, அவன் மிக நல்லவன். சிரிக்காதீர்கள். சமூகம் அப்படித்தான் நம்புகிறது. பாலத்து சோதிடர்கள் கிரகம் சரியில்லை என்பார்கள்; பலவீன மனிதர்கள் விதி என்பார்கள்; பெற்றோர்கள் போகப்போகச் சரியாகிவிடும் என்பார்கள். ஆனால், மனைவியின் நிலை? மூக்கைச் சிந்தியபடியே முற்றத்திலும் மூலையிலும் உட்கார்ந்து காலத்தைக் கழிக்க முடியாதே?

இளங்கோவின் லீலைகள்

இளங்கோவைப் போன்ற கணவர்கள்வழியே குழந்தைகளும் உருவாகிவிடும். தேன்மொழிக்கும் இந்து, சுடர் என இரண்டு பெண் குழந்தைகள். இப்படிப்பட்ட ஒருவனுக்குத் தேன்மொழியை ஏன் கட்டிக்கொடுத்தார்கள் எனத் தோன்றலாம். ஆனால், அதற்குக் காரணம் இருக்கிறது. தேன்மொழியின் தந்தையும் இளங்கோவின் தந்தையும் நண்பர்கள். பெண்களின் திருமணம் எப்படியெல்லாம் நிச்சயிக்கப்படுகிறது என்ற வியப்பேற்படுகிறதா? பெற்றோர்களால் வேறென்ன செய்ய முடியும்? தெரியாத பேயைவிடத் தெரிந்த பிசாசே மேல் என எண்ணிவிடுகிறார்கள்.

இளங்கோவுக்கு ஆசிரியர் பணி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைவிடப் படுசுவாரசியமானவை இளங்கோவின் லீலைகள். அவர் பகவான், இவன் சாதாரண மனிதன். இவனது சிலையை வைத்து வழிபடவா முடியும்? படுபாவி எனத் திட்டத்தான் முடியும். மின் கட்டணம் கட்டச் சொல்லி மனைவி பணம் கொடுத்து அனுப்பினால், அவன் ஊரை எல்லாம் சுற்றிவிட்டு, சினிமா கதாநாயகிகள் அணிவது போன்ற கண்கவர் ஆடையை மனைவிக்கு வாங்கிவருவான். பார்த்ததுமே முகம்சுளிக்கும் அவள், கணவன் அன்புடன் வாங்கிவந்துவிட்டானே என அதை அணிந்துகொண்டு பாட்டெல்லாம் பாடி ஆடுகிறாள். மனைவிக்குத்தான் எத்தனை கொடுமைகள்? அவள் படும் பாட்டைவிடக் கொடுமையானவை இத்தகைய பாடல்கள்.

இளங்கோ உச்சபட்சமாக ஒரு காரியம் செய்து போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். இளங்கோ நல்லவன்தான். ஆனால், சேர்க்கை சரியில்லையே. நண்பர்கள் அவனை வற்புறுத்தி கேபரே நடனத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அந்த வகையில் இவன் கிருஷ்ணரைவிட மேம்பட்டவன். தானாக எங்கேயும் செல்வதில்லை. நண்பர்கள்தாம் அவனுடைய சத்ருக்கள். மனிதர்களின் தவறுகளுக்குக் கடவுள் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். தம் நாயகனின் தவறுகளுக்குப் பழிபோட மனைவிகளுக்கு யாராவது வேண்டுமே? அதற்காகத்தானே நண்பர்கள் இருக்கிறார்கள். இளங்கோவின் தந்தையும் மனைவியும் காவல் நிலையத்துக்கு வந்து அவனை விட்டுவிடக் கோருகிறார்கள்.

சாமியே சரணம்

காவல் நிலைய ஆய்வாளர் அருமையான நிபந்தனை ஒன்றை விதிக்கிறார். சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்ப தரிசனம் செய்து வந்தால் எல்லாத் தீங்கும் இளங்கோவைவிட்டு விலகிவிடும் என்கிறார். அதற்கு அவன் ஒப்புக்கொண்டால் அவனை விட்டுவிடுவதாகச் சொல்கிறார். முதலில் முணுமுணுக்கும் இளங்கோ இறுதியில் சம்மதித்து வெளியில் வருகிறான். ஆனாலும், வெளியில் வந்த பிறகு சபரிமலைக்குச் செல்ல முடியாது என்று சொல்லித் திட்டாந்தரமாக மறுக்கிறான். அவனால் குடிக்காமல் இருக்க முடியாது என நண்பர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

அவனது சுயமரியாதையை நண்பர்கள் சீண்டிவிடுவதால் தன்மானம் தலைக்கேற தலையில் இருமுடி சுமக்க முடிவுசெய்துவிடுகிறான். இதுவரை குடித்துக்கொண்டும் கும்மாளமிட்டுக்கொண்டும் இருந்த இளங்கோ இப்போது வேறு ஆட்டத்தைத் தொடங்குகிறான். இனி, அவனைச் சாமி எனத்தான் அழைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகளுக்குக்கூட அவன் அப்பாவல்ல; அப்பாசாமி. ஆம், ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ (2006).

கணவனின் பக்தியைக் கண்டு தேன்மொழிக்குப் பெரும் மகிழ்ச்சி. கடவுள் கண் திறந்துவிட்டார் என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள். ஆனால், இனிதான் அவள் மூச்சுவிடவே சிரமப்பட வேண்டியதிருக்கும் என்பது ஐயப்பன் ஏற்பாடு என்பது அவளுக்குத் தெரியாதே. பக்திப் பழமாக சபரிமலைக்குச் சென்றுவந்த இளங்கோவுக்கு இப்போது குடியைவிட சபரிமலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவன் மாலையைக் கழற்ற முடியாது என அடம்பிடிக்கிறான். தேன்மொழிக்குத் தேள்கொட்டியது போலாகிவிட்டது. முன்பு பாட்டிலைப் பிடித்ததைவிட இப்போது பக்தியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

சிதம்பரத்தில் இளங்கோ சாமியைப் பார்க்க பக்தர்கள் வரத் தொடங்குகிறார்கள். எந்நேரமும் பூஜை, புனஸ்காரம் என ஆச்சாரமாகிவிட்டார் இளங்கோ. குடித்த காலத்தில் இரவிலாவது அவளருகே வந்த இளங்கோ, சாமியாகிவிட்ட பிறகு அவளை நெருங்குவதே இல்லை. பக்தர்களுக்கு அருள்தரும் இளங்கோ சாமி என்றபோதும், அவனுக்குச் சித்தம் கலங்கிவிட்டது என்றுதானே மற்றவருக்குத் தோன்றும்? அவனை எப்படிப் பள்ளியில் சேர்ப்பார்கள்? அதுவும் காவியுடை தரித்துப் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த முடியுமா? ஆனால், பூஜைக்குச் செலவாகுமே? பூஜை பொருட்களைக் கடவுளா கொண்டுவந்து தருவார்? வீட்டில் கைவைக்கத் தொடங்குகிறான் இளங்கோ. குழந்தைகளின் உண்டியலை உடைத்துவிடுகிறான். குடிக்கும்போதுகூட இப்படியான காரியங்களில் ஈடுபடாத அவன் கடவுளுக்காக எந்தக் கீழான காரியத்துக்கும் தயாராகிவிடுகிறான்.

சாமியல்ல ஆசாமி

கணவன் எந்நேரமும் குடியே கதி என்று இருந்தாலும் கோயிலே கதி என்று இருந்தாலும் மனைவிக்குத் துயரம்தானே? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேன்மொழி ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து கடவுள் படங்களையும் உருவங்களையும் வீதியில் போட்டு உடைத்துவிடுகிறாள். வந்திருந்த பக்தர்களையும் திட்டி அனுப்பிவிடுகிறாள். தன் பக்தியைப் புரிந்துகொள்ளாததால் இளங்கோவும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆசிரமத்துக்குச் சென்றுவிடுகிறான்.

வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. கணவன் சாமியாராகிவிட்டார் என்பதற்காகப் பிள்ளைகளை அப்படியே தெருவில் விட்டுவிடவா முடியும்? தேன்மொழி தனக்குத் தெரிந்த தையல்வேலையைக் கொண்டு சம்பாதிக்கத் தொடங்குகிறாள். தனக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் திறம்படச் செயல்பட்டுக் குடும்பத்தை நடத்துகிறாள்.

எல்லாக் கணவர்களையும் போல இளங்கோவுக்கும் திருந்துதல் என்னும் நோய் அடிக்கடி வந்து செல்லும். இப்போதும் அவன் அந்த நோய்வாய்ப்பட்டான். திடீரெனத் திருந்திவிடுகிறான். மனிதருக்கு நல்வழி போதிக்கத்தானே கடவுளர்கள் அவதாரம் எடுத்தார்கள். ஆகவே, தனியே வாழ்ந்தபோதும் ஐயப்பன் குடும்பத்தின் அருமையை இளங்கோவுக்கு உணர்த்திவிடுகிறார். மீண்டும் வீடு தேடி வருகிறார் இளங்கோசாமி. தன் தவறுகளை மன்னிக்கச் சொல்லி வேண்டுகிறார். எல்லா மனைவிகளையும்போல் மறுக்கிறாள் தேன்மொழி.

குழந்தைகள் மறுகுகிறார்கள். அப்பா அப்பா என அழுகிறார்கள். திடமாக இருந்த தேன்மொழியின் மனம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய இளங்கோவை வீட்டில் சேர்த்துக்கொள்கிறாள். கணவன் இல்லாத காரணத்தால், தங்கையின் திருமணத்தில் ஒளிப்படம் எடுக்கக்கூட வராமல் ஒளிந்தவள்தானே தேன்மொழி? காலையில் எழுந்தவுடன் தாலியைத் தொட்டு வணங்கிப் பின் தன் வேலையைத் தொடங்கும் தமிழ்ப் பெண்ணான அவள் வேறு எப்படி முடிவெடுப்பாள்? தனியே இருக்கும்போது சரியாக முடிவெடுத்த தேன்மொழி மீண்டும் தவறான முடிவெடுத்துவிட்டாளே என வருந்த வேண்டாம். என்ன செய்வது எல்லாம் கடவுள் செயல்!

1998-ல் ‘சிந்தாவிஷ்டையாய சியாமளா’ என்னும் பெயரில் மலையாளத்தில் வெளியான படத்தின் மறு ஆக்கம் இப்படம்.

தங்கர் பச்சான் இயக்கி நடித்த இந்தப் படத்தில் தேன்மொழி வேடமேற்றவர் நவ்யா நாயர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் படத்தைப் போலவே சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள:
chellappa.n@hindutamil.co.in
படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x