Published : 20 Dec 2019 10:58 AM
Last Updated : 20 Dec 2019 10:58 AM

இயக்குநரின் குரல்: முன்பின் தெரியாத பெண்ணை நம்பி - எல்.ஜி.ரவிசந்தர்

ரசிகா

பரத் நடிப்பில், கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் புதிய படம் ‘நான் அவளை சந்தித்தபோது’. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து…

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறதா; அல்லது ஒரு அழகுக்காக வைத்திருக்கிறீர்களா?

தலைப்புதான் படத்தின் கதையே. எனது சொந்த வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்துடன் சிறிது கற்பனையைக் கலந்திருக்கிறேன். அந்தக் கற்பனைகூட உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். 1996-ம் வருடம் அது. சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அந்தப் பெண்ணைச் சந்தித்ததால் எனக்கு நேர்ந்த அனுபவங்கள்தான் 80 சதவீதப் படம். அத்தனையும் எனக்கு உண்மையாக நடந்தவை. படத்தின் முடிவில் எனது உண்மையான கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் ‘ஸ்க்ரோலிங் டைட்டில்’ போடும்போது திரையிலேயே அறிமுகப்படுத்துகிறேன்.

உங்களுக்கு அப்படி என்னதான் நடந்தது?

1996-ல் நான் ஒரு முன்னணி இயக்குநரின் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் என்னிடம் முகவரி எழுதிய ஒரு துண்டுப் பிரசுரத்தைக் காட்டி விசாரித்தார். முகவரியில் குறிப்பிட்டிருந்தபடி, அந்தப் பகுதியில் ஒரு தெருவே கிடையாது. உடனடி வேலை வாய்ப்பு தருவதாக ‘ஃபேக் அட்ரஸ்’ வெளியிட்டிருந்தது ஏதோ ஒரு போலி நிறுவனம். போலி முகவரியை நம்பி வந்துவிட்டோமே என்று அந்தப் பெண்ணுக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் போய்விட்டது.

பயமும் வந்துவிட்டது. ‘மாயவரம் செல்ல எங்கே போய் பஸ் ஏற வேண்டும்?’ என்று கேட்டார். நான் ‘பூக்கடை’ பேருந்து நிலையம் என்றேன். அப்போது வெளியூர் பேருந்து நிலையம் அங்கேதான் இருந்தது. அவர் கண்கள் கலங்கிப்போய் ‘எனக்கு இந்த ஊரில் எதுவுமே புரியமாட்டேன் என்கிறது. என்னை மாயவரம் பஸ்ஸில் ஏற்றிவிடுங்கள் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்’ என்று கெஞ்சி, கண் கலங்கிவிட்டார்.

பெண் அழுதுவிட்டால்தான் நம்மால் தாங்க முடியாதே… அவரைப் பற்றி விசாரித்துக்கொண்டே டவுன்பஸ்ஸில் ஏற்றி, பூக்கடை வந்து இறங்கி, மாயவரம் பஸ்ஸுக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்தேன். அப்படியும் அவர் சமாதானம் ஆகவில்லை. யாரோ என்னைப் பின் தொடர்கிற மாதிரி இருக்கிறது. ‘ஊர் வரைக்கும் எனக்குத் துணையாக வந்து, வீட்டில் என் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள். உங்களுக்கு டிக்கெட் செலவு எல்லாம் நான் கொடுத்துவிடுகிறேன்’ என்று கெஞ்சினார்.

அவரது கெஞ்சலில் இரங்கிப்போய்விட்டேன். நாமும் வேலை இல்லாமல் சும்மாதானே இருக்கிறோம் என்று கிளம்பிவிட்டேன். வழியில் மோட்டலில் பஸ் நின்றபோது, பயந்துபோயிருந்த அந்தப் பெண் சாப்பிடக் கூட இறங்கவில்லை. டீயும் பன்னும்போதும் என்று வாங்கி வரச் சொன்னார். 8 மணிநேரப் பயணத்துக்குப் பின் மாயவரம் வந்ததும்தான் அந்தப் பெண்ணுடைய முகத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கண்டேன். மாயவரத்தில் இறங்கி மற்றொரு பேருந்தில் அவரது கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

எல்.ஜி.ரவிசந்தர்

அவரது வீட்டுக்குச் சென்றதுமே அவருடைய அம்மாவும் அப்பாவும் அந்தப் பெண்ணைத் திட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டார்கள். ‘மாயவரத்தோட நீ கிளம்பியிருக்க வேண்டியதுதானே தம்பி… எதுக்கு ஊர் வரைக்கும் வந்தீங்க?’ என்று என்னையும் பிடி பிடி என்று பிடித்துக்கொண்டார்கள். ‘இந்தாங்க பஸ் சார்ஜ்... உடனே கெளம்புங்க என்று என் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தார்’ அந்தப் பெண்ணின் அப்பா. நான் எழுந்து வெளியே வரவும், ஐந்தாறு பேர் என்னை ஒரு குற்றவாளியைப் போல், கைப்பிடியாக அந்த ஊரில் இருந்த கோவில் வாசலில் கூடியிருந்த பஞ்சாயத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் திமுதிமுவென 150 பேர் கூடிவிட்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பமும் அங்கே வர, என் கையில் மஞ்சள் பூசிய தாலிக் கயிற்றைக் கொடுத்து ‘பொண்ணு கழுத்தில கட்டுப்பா’ என்றார்கள். நான் வெலவெலத்துப்போய் ‘நான் எதுக்குங்க கட்டணும்?’ என்று சத்தம் கொடுத்தேன். அவ்வளவுதான் ‘படபட’வென ஒரு பத்துப் பேர் கூடி என்னை வெளுத்துவிட்டார்கள்.

குறைந்தது முப்பது அடியாவது இருக்கும். கன்னம் ஓரமாக வீங்குவதை உணர முடிந்தது. மயக்கமும் வருகிற மாதிரி கண்ணைக் கட்ட, அந்த சமயத்திலும் ‘அந்தப் பெண்ணோட பேரு எனக்கோ, என்னோட பேரு அந்தப் பெண்ணுக்கோ தெரியாதுங்க… வேணுமானா கேட்டுப்பாருங்க. நான் உதவி செய்ய வந்தவன்’ என்றேன். ஒரு மயான அமைதி. அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு விளக்குமாற்றால் அடி விழுந்தது. ‘முன்பின் அறிமுகமில்லாத ஆளை அழைத்து வந்ததற்காகக் கோயிலுக்கு 301 ரூபாய் வரி.

இரண்டு கலம் நெல்லு அபராதம். விதித்தார்கள். எனக்கு ஊர்த்தலைவர் வீட்டில் சாப்பாடுபோட்டு மாயவரம் வரை டி.வி.எஸ் 50 பைக்கில் அழைத்துவந்து விட்டுவிட்டு வந்தார்கள். இந்த நிகழ்வின் நீச்சியாக எனக்கும் அந்தப் பெண்ணுக்குமான நட்பு தொடர்ந்திருந்தால் என்ன நடத்திருக்கும் என்பதைத்தான் திரைக்கதையாக ஆக்கியிருக்கிறேன். கூடுதல் கதைக்காகக் திரைக்கதையில் நான் இணைத்திருக்கும் கதாபாத்திரங்களும் நான் வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் சந்தித்தவைதான்.

உங்கள் நட்சத்திரங்கள்?

பார்த்திபன் சாரின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக அறிமுகமான சந்தோஷ் பிரதாப் ஹீரோவாகவும் சாந்தினி நாயகியாகவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர படத்தில் 20-க்கும் அதிகமான துணைக் கதாபாத்திரங்கள்.

மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் கதையைக் கேட்டுவிட்டு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிரிக்க மட்டுமல்ல; உணர்வு பூக்கும் தருணங்களையும் சிறந்த திரை அனுபவமாகக் கொடுக்கும் பொழுதுபோக்குப் படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x