Published : 18 Dec 2019 10:47 AM
Last Updated : 18 Dec 2019 10:47 AM

கதை: மழை எப்படி வரும்?

கீர்த்தி

முல்லைக் காட்டில் சில ஆண்டுகளாக மழை இல்லை. ஆறு, குளங்களில் நீர் வற்றி சிறுசிறு குட்டைகளாக மாறிவிட்டன. ’இப்படியே போனால் நம் காடு என்ன ஆகும்? மழையை எப்படி வரவழைப்பது?’ என்று யோசித்த சிங்கராஜா, விலங்குகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

"மழையை எப்படி வரவழைப்பது என்று அமைச்சர்கள் ஆலோசனை யைக் கூறலாம். அதன்படி மற்ற விலங்குகள் செயல்பட வேண்டும்" என்றது சிங்கராஜா.முதலில் புலி எழுந்து, "அரசே, தட்டான்கள் தாழப் பறந்தால் மழை வரும். எனவே தட்டான்களைத் தாழப் பறக்கும்படி உத்தரவிடலாம்" என்றது. "ஆஹா! நல்ல யோசனையாக இருக்கிறதே! தட்டான்களைத் தாழ்வாகப் பறக்கச் சொல்லுங்கள்" என்று உத்தரவிட்டது சிங்கராஜா.

தட்டான்களிடம் சிங்கராஜாவின் உத்தரவைச் சொல்ல, அவையும் தாழ்வாகப் பறக்கத் தொடங்கின. நாட்கள்தான் கடந்தனவே தவிர, மழை பெய்யவில்லை. சிங்கராஜாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. உடனே அடுத்த ஆலோ சனைக் கூட்டத்தைக் கூட்டியது. இப்போது சிறுத்தை எழுந்து, "அரசே, மயில் தோகை விரித்து ஆடிய சற்று நேரத்தில் மழை வருவதை நான் பார்த்திருக்கிறேன். மயில்களை ஆடச் சொல்லலாம்" என்றது. "அருமை! ஆடச் சொல்லுங்கள்" என்று உத்தரவிட்டது சிங்கராஜா.

ஆண் மயில்கள் அனைத்தும் தம் தோகைகளை விரித்து அழகாக ஆடத் தொடங்கின. நாட்கள் கடந்தன. ஆடி ஆடி மயில்கள் களைத்துப் போயின. ஆனால், மழை மட்டும் வரவேயில்லை. ஏமாந்து போன சிங்கம் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. இந்த முறை யானை எழுந்து, "கழுதைகள் காதுவிடைத்து நின்றால் மழை வரும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கழுதைகளை அழைத்து காதுகளை விடைத்து நிற்கும்படி சொல்லலாம்" என்றது.

"ஓ... இது புதிதாக இருக்கிறதே! அப்படியே செய்யச் சொல்லுங்கள்" என்றது சிங்கராஜா. காடு முழுவதிலும் உள்ள கழுதைகள், தங்கள் காதுகளை விடைத்து நின்றன. ஒரு வாரம் கடந்தது. மழை வரவே இல்லை. மீண்டும் சிங்கராஜா ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

இந்த முறை கரடி எழுந்து, "அரசே! எறும்புகள் உணவை எடுத்துத் தங்கள் புற்றுகளில் சேர்க்கத் தொடங்கினால் மழை வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றது. கரடியின் யோசனை சிங்கராஜாவுக்குச் சரியாகத் தோன்றியது. அது உடனே எறும்புகளுக்கு உத்தரவிட்டது.

எறும்புகள் தங்களுக்குக் கிடைத்த உணவை, புற்றுகளில் வைக்கத் தொடங்கின. ஒரு வாரம் கடந்தது. ‘மழை வருமா?’ என்று சிங்கராஜா காத்திருந்து ஏமாந்து போனது. மழை வரவேயில்லை. சிங்கராஜா அடுத்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. இந்த முறை ஓநாய் எழுந்து, "தவளைகள் கத்தினால் மழை வரும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதை அனுபவத்தில் பார்க்கவும் செய்திருக்கிறேன்" என்றது. "அற்புதம் ஓநாயே! தவளைகள் கத்தத் தொடங்கியதும் மழை வருவதை நானும் பார்த்திருக்கிறேன். குளம் குட்டைகளிலுள்ள தவளை களை அழைத்துக் கத்தச் சொல்லுங் கள்" என்று உத்தரவிட்டது சிங்கராஜா.

சிங்கராஜாவின் உத்தரவுப்படி காட்டிலுள்ள அனைத்துத் தவளைகளும் கத்தின. தவளைகளின் நாராசமான குரல் காடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. ‘எப்படியேனும் மழை வந்தால் போதும்’ என்று நினைத்த சிங்கராஜா, அதைப் பொறுத்துக்கொண்டது. நாட்கள் கடந்தனவே தவிர, மழையைக் காணோம். சிங்கராஜாவுக்குக் கோபம் வந்தது. "தவளைகளை நிறுத்தச் சொல்லுங்கள்" என்று கர்ஜித்தது சிங்கராஜா.

மறுகணமே தவளைகள் கத்துவதை நிறுத்தின. மறுபடியும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது சிங்கராஜா. "விலங்குகளே, அமைச்சர்கள் இதுவரை சொன்ன எந்த ஆலோசனையும் பலன் அளிக்கவில்லை. வேறு பலன் அளிக்கும்படியான ஆலோசனை சொல்பவருக்கு நிச்சயம் பெரிய பரிசு தருகிறேன்" என்று சொன்னது.

அப்போது முயல் ஒன்று சிங்க ராஜாவின் முன்னே வந்து நின்றது. "என்ன முயலே, அறிவு நிரம்பிய அமைச்சர்கள் சொன்ன ஆலோசனைகளே பலிக்கவில்லை. நீ ஏதேனும் சொல்லப் போகிறாயா?" என்று கேட்டது சிங்கராஜா. "அரசே, மழை வரப் போகிறது என்றால் தட்டான்கள் தாழப் பறக்கும், மயில் தோகை விரித்து ஆடும், கழுதைகள் காதுகளை விடைத்து நிற்கும், எறும்புகள் உணவைப் புற்றுகளில் பதுக்கி வைக்கும், தவளைகள் கத்தும்.

இவை எல்லாம் உண்மைதான். ஆனால், அவை இப்படிச் செய்வதால்தான் மழை பெய்கிறது என்பது வெறும் நம்பிக்கை. கடல், ஏரி, குளம், ஆறுகள், மரங்களிலுள்ள நீர் ஆவியாகி மேலே சென்று, மேகங்களாகி, குளிர்ந்தால்தான் மழை வரும். நாம் மரங்களை நடும் முயற்சியில் இறங்கலாம்” என்றது முயல்.

சிங்கராஜாவுக்குப் பெரிய உண்மை புரிந்தது. "முயலே, இத்தனை நாளும் இதை உணராமல் இருந்துவிட்டேன். எத்தனையோ பேர் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலோசனை சொன்னார்கள். நீதான் அறிவியலின்படி ஆலோசனை சொல்லியிருக்கிறாய்.

மரங்களை நடுவோம்" என்று மனம் மகிழ்ந்தது சிங்கராஜா. விலங்குகள் அனைத்தும் சிங்கராஜாவின் உத்தரவுப்படி மரக்கன்றுகளை நட்டன. சில மாதங்களிலேயே மழை பெய்து காடு குளிர்ந்தது. சிங்கராஜாவின் புதிய அமைச்சராக முயலுக்குப் பதவியும் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x