Published : 17 Dec 2019 13:00 pm

Updated : 17 Dec 2019 13:00 pm

 

Published : 17 Dec 2019 01:00 PM
Last Updated : 17 Dec 2019 01:00 PM

விடைபெறும் 2019: மைதானத்தை அதிரவைத்த தமிழர்கள்!

farewell-2019

மிது கார்த்தி

விளையாட்டுத் துறையில் ஒரே வீரர் அல்லது வீராங்கனை வாழ்நாள் சாதனையாளராக வலம் வர முடியாது. திடீரென ஒருவர் உச்சத்துக்குச் செல்வார். உச்சத்தில் இருந்தவர் தலைக்குப்புறக் கிடப்பார். குறிப்பிட்ட ஆண்டில் களத்தில் நின்று சாதித்தவர்களே அந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் அரியணையை அடைவார்கள். அப்படி
2019-ம் ஆண்டு தமிழகத்தில் ஜொலித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் யார்?

அஸ்வின் ரவிச்சந்திரன் (கிரிக்கெட்):

இந்திய டெஸ்ட் கிரிக் கெட் அணியின் அசைக்க முடியாத சுழல் மன்னரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், இந்த ஆண்டு ஓசையில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தினார். அது, டெஸ்ட்டில் 350 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனை. விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல் சாதனையைப் படைத்தார். இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் எடுத்து படைத்த சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

வாஷிங்டன் சுந்தர்:

டெஸ்ட் கிரிக்கெட்டுக் கெனச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை இந்திய அணி ஒதுக்கிவிட்ட நிலையில், அதிரடிப் போட்டியான டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்கிறார் இந்தத் தமிழன். சிக்கனமாகப் பந்துவீசுவதில் கெட்டிக்கரரான வாஷிங்டன் சுந்தர், டி20 போட்டிகளில் 27.8 என பவுலிங் சராசரி வைத்து அசத்தி வருகிறார். பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடிய ஆல்ரவுண்டர் இவர். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் இடம்பெறும் வகையில் முன்னேறி வருகிறார்.

கோமதி மாரிமுத்து (தடகளம்):

தோகாவில் நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தமிழச்சி. இந்தத் தொலைவை இரண்டு நிமிடங்கள் 80 விநாடிகளில் கடந்து சாதித்துக் காட்டினார். திருச்சியில் கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த கோமதி, வாழ்க்கையிலும் விளையாட்டிலும் பல போராட்டங்களைச் சந்தித்தவர். சர்வதேச ஆசியப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் கோமதி மாரிமுத்து ஓடி ஜெயித்த தருணத்தை யாராலும் மறக்க முடியாது. ஆனால், ஊக்க மருத்து சர்ச்சையில் கோமதி சிக்கியது கரும்புள்ளியானது.

தினேஷ் கார்த்திக் / விஜய் சங்கர் (கிரிக்கெட்):

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த இரட்டைத் தமிழர்கள். தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் ஒரே நேரத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தது பல ஆண்டுகள் கழித்து நடந்தேறியது. 1987 உலகக் கோப்பையில் காந்த், சிவராமகிருஷ்ணன், 1999-ல் சடகோபன் ரமேஷ், ராபின் சிங் (தமிழக ரஞ்சி அணியைச் சேர்ந்தவர்) ஆகியோருக்குப் பிறகு அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் விஜய் சங்கரும் இடம் பிடித்தார்கள். ஆனால், உலகக் கோப்பையில் பெரிய அளவில் இருவரும் சோபிக்காமல் போனது துரதிர்ஷ்டம்.

மாரியப்பன் (பாரா தடகளம்):

2016-ல் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று நாட்டைத் திரும்பி பார்க்க வைத்த மாரியப்பன், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை அரங்கேற்றினார். துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மாரியப்பன் தகுதி பெற்றார்.

இளவேனில் வாலறிவன் (துப்பாக்கி சுடுதல்):

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்திலிருந்து சீறிப் பாயும் தோட்டாவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் இளவேனில் வாலறிவன். கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை துப்பக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதைப் போல, இந்த ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் சுட்டார் இந்தத் தமிழச்சி. முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றது முத்தாய்ப்பான நிகழ்வானது.

சரத் கமல் (டேபிள் டென்னிஸ்):

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழகத்தின் முகம் இவர். கடந்த ஆண்டு சரத் கமல் காட்டில் அடை மழை. காமன்வெல்த் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலங்கள் என 4 பதக்கங்களை வென்று தரவரிசையில் முன்னேறிய சரத் கமல், இந்த ஆண்டு தேசிய அளவில் பிரம்மாண்டமான சாதனையை அரங்கேற்றினார். தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜி.சத்யனை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த சரத் கமல், 9-ம் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். டேபிள் டென்னிஸில் ஒருவர் 9 பட்டங்களை வெல்வது இதுதான் முதன்முறை.


விளையாட்டுத் துறைவிடைபெறும் 2019Farewell 2019மைதானம்அதிரவைத்த தமிழர்கள்தமிழர்கள்அஸ்வின் ரவிச்சந்திரன்வாஷிங்டன் சுந்தர்கோமதி மாரிமுத்துதினேஷ் கார்த்திக்விஜய் சங்கர்மாரியப்பன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author