Published : 16 Dec 2019 09:48 AM
Last Updated : 16 Dec 2019 09:48 AM

அவமானம், யுத்தம், வெற்றி! - ஃபோர்டு Vs ஃபெராரி 

ஜெ. சரவணன்
saravanan.j@hindutamil.co.in

சில நேரங்களில் பணம், புகழ் எல்லாவற்றையும்விட தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் சிலர் செல்வதுண்டு. அப்படியொரு யுத்தம்தான் 1960-களில் ஃபோர்டுக்கும், ஃபெராரிக்கும் நடக்கிறது. தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ஃபோர்டு Vs ஃபெராரி திரைப்படம் அதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

பிரான்சில் 1923 முதல் நடக்கும் 24 மணி நேர தொடர் கார் பந்தயத்தில் ஃபெராரி தொடர்ந்து பல வருடங்கள் சாம்பியனாக இருந்து வருகிறது. இந்த கார் பந்தயத்தில் ஃபெராரியை தோற்கடிக்க வேண்டும் என்பது ஃபோர்டின் கனவு. கனவு என்று சொல்வதைவிட வெறி என்றே சொல்லலாம். அதற்கு காரணம் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் பட்ட அவமானம்.

1960-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இளைஞர்கள் அதிகமாக வருமானம் ஈட்ட தொடங்கியிருந்த காலம். இளைஞர்கள் சம்பளம் வாங்கியதும் முதலில் வாங்க நினைக்கும் பொருளாக இப்போது மொபைல் இருப்பது போல் அப்போது ஆட்டோமொபைல் இருந்தது.

இளைஞர்கள் பெரும்பாலும் ஃபெராரி கார்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்தனர். ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை குறைந்து கொண்டே வந்தது. ஒரு நாள் அதன் தலைவர் அனைத்து ஊழியர்களையும் அழைத்து “விற்பனையை அதிகரிக்கும் ஐடியாவோடு வருபவர்களுக்கு ஃபோர்டில் தொடரும் வாய்ப்பு கிடைக்கும்” என்று ஒரு குண்டை போடுகிறார். ஆட்டோ மொபைல் துறையில் இன்றும் புகழப்படும் ஜாம்பவான் லீ அயகோக்காவுக்கும் சேர்த்தே இது சொல்லப்பட்டது. அப்போது அவர் ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் இருந்தார்.

வெற்றி என்பது வெறும் வார்த்தையல்ல

“ஃபெராரியை இளைஞர்கள் வாங்குவதற்கு காரணம் அது வெற்றியின் அடையாளமாக இருப்பதுதான். ஃபெராரி என்றால் வெற்றி, ஆனால் ஃபோர்டுக்கு என்ன அடையாளம் இருக்கிறது” என்று லீ அயகோக்கா ஃபோர்டு நிறுவனத் தலைவரிடம் விளக்குகிறார். ஏனெனில் வெற்றி வெறும் வார்த்தையல்ல. அதன்பின் மிகப்பெரிய சந்தையும் இருக்கிறது என்பது பிசினஸ்மேன்களுக்கு மட்டுமே தெரியும். ஃபோர்டின் அடையாளத்தை மாற்ற வேண்டும். அதன் விற்பனையை அதிகரிக்க வேண்டுமெனில் ஃபோர்டு பந்தயக் கார் உற்பத்தியிலும் இறங்க வேண்டும் என்று யோசனை சொல்கிறார்.

அந்த சமயத்தில் ஃபெராரி பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஃபெராரியை வாங்கிவிடலாம் என்ற முடிவையும் அவர் முன்வைக்கிறார். நிறுவனத்தின் சில சோம்பேறி நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ஒப்புக்கொள்கிறார். ஃபெராரியை வாங்குவதற்கான டீலிங்கை முடிக்க லீ அயகோக்கா ஒரு குழுவுடன் போகிறார்.

ஆனால், அங்கு நிலைமையே தலைகீழாக மாறிவிடுகிறது. ஃபெராரியை ஃபோர்டுக்கு விற்பது குறித்து முடிவெடுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஃபியட் உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைக்கிறது. ஃபோர்டு சொன்ன விலையைவிட கூடுதலாகத் தருவதாகச் சொல்லி ஃபெராரியை வாங்கிவிடுகிறது.

அத்தோடு நிற்கவில்லை. ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரி, ஃபோர்டு நிறுவனத் தலைவரை அவமானப்படுத்தும்படி பேசிவிடுகிறார். “உங்கள் தலைவர் தன்னை ஹென்றி போர்டு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்... அவர் ஹென்றி போர்டுக்கு இரண்டாவதுதான் என்று சொல்லுங்கள்” என்று கூறுவது ஃபோர்டு நிறுவனத்தின் தலைவரை கோபத்தின் உச்சிக்குக் கொண்டுசெல்கிறது.

வெற்றிக்கு விதையாகும் அவமானம்

அவர் பட்ட அவமானத்தை என்ன விலை கொடுத்தாவது துடைத்தாக வேண்டும் என்று எண்ணி யுத்தத்தை துவக்குகிறார். ஃபோர்டு பந்தயக் கார் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். லெ மான் கார் பந்தயத்தில் ஃபெராரியைத் தோற்கடிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இப்படி வெறுமனே வார்த்தையில் நடக்கக் கூடிய காரியமல்ல அது. லீ அயகோக்கா பந்தயக் காரை உருவாக்கும் தன் பயணத்தை தொடங்குகிறார்.

கரோல் ஷெல்பி என்ற கார் பந்தய வீரரை அணுகி விஷயத்தைச் சொல்கிறார். ஷெல்பி கார் பந்தயத்தில் ஈடுபடுவதை விட்டு, பந்தயக் கார்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவருகிறார். ஃபெராரியை ஜெயிக்கக்கூடிய காரை உருவாக்குவது கடினம் என்று முதலில் பின்வாங்குகிறார், ஆனால் கென் மைல்ஸ் மீதுள்ள நம்பிக்கையில் ஒப்புக்கொள்கிறார்.

தோற்றத்தில் திறமை வெளிப்படுவதில்லை

கென் மைல்ஸ். திரைப்படத்தின் கதாநாயகன். பகுதி நேர பந்தய கார் வீரர், முழு நேர மெக்கானிக். காரை அணு அணுவாக ரசித்து காதலிப்பவன். மெக்கானிக் என்பதாலும், பெரிய அளவில் வருமானம் இல்லை என்பதாலும் உடையும் தோற்றமும் அழுக்காகத்தான் இருக்கும்.

ஆனால், காரை ஓட்ட ஆரம்பித்தால் யாராலும் ஜெயிக்க முடியாத வேகமும், லாவகமும் அவனிடம் உண்டு. ஷெல்பியின் நண்பன். கென் மைல்ஸுடன் சேர்ந்து ஃபெராரியை தோற்கடிக்கும் ஃபோர்டின் கனவுக்கு அடித்தளம் போடுகிறான் ஷெல்பி. கென் மைல்ஸின் ஒவ்வொரு யோசனையும் ஃபோர்டு ஜிடி என்ற பந்தயக் காராக உருப்பெறுகிறது.

ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சியைக் கெடுக்கும் சில நிர்வாகிகள் அவனுடைய தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் காரணம் காட்டி அலுவலக அரசியல் செய்து பந்தயத்தில் கலந்துகொள்ளும் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிடுகிறார்கள். அந்த வருடமும் ஃபெராரியிடம் தோற்றுப் போகிறது ஃபோர்டு.

மீண்டும் ஃபோர்டு தலைவர் ஷெல்பியை அழைக்கிறார். தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்க, ஒன்று விடாமல் ஷெல்பி சொல்லிவிடுகிறான். தேர்வு பட்டியல் உங்களை வந்து சேர்வதற்குள் பல கை மாறி அடித்தல் திருத்தலுடன் வருகிறது. இதுபோன்ற நடைமுறைகள் இருக்கும்வரை ஃபெராரியை ஃபோர்டு வெல்ல முடியாது என்கிறான். முழு சுதந்திரம் ஷெல்பிக்கு வழங்கப்படுகிறது. கென் மைல்ஸ் பந்தயத்துக்கு தேர்வாகிறான்.

வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூது

ஆனால், ஆரம்பம் முதலே கென் மைல்ஸ் தோல்வி பெற செய்வதற்கான வேலைகளைச் செய்கிறார்கள் ஃபோர்டின் நிர்வாகிகள். அதையெல்லாம் கடந்து நட்பும் திறமையும் ஜெயிக்கிறது. ஆனால், கடைசியில் சூதே வெல்கிறது. ஃபெராரியை ஃபோர்டு தோற்கடித்துவிட்டாலும், கென் மைல்ஸ் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் சூழ்ச்சி செய்து, ஃபினிஷிங் லைனை முதலில் தொடாமல் காத்திருந்து, பின்னால் வரும் சக ஃபோர்டு கார்களுடன் ஒன்றாக ஃபினிஷிங் லைனை தொட வேண்டும் என்ற உத்தரவு வருகிறது. கென் விருப்பத்துக்கு ஷெல்பி விட்டுவிட்டாலும், ஒருகட்டத்தில் கென் காத்திருந்து மற்றவர்களுடன் ஒன்றாக ஃபினிஷிங் லைனைத் தொடுகிறான். ஃபோர்டு நிறுவனம் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.

ஆனால், கென் மைல்ஸ் சில விதிமுறை காரணங்களால் இரண்டாவதாகவும், பின்னால் வந்த மற்றொரு ஃபோர்டு பந்தய வீரர் முதலாவதாகவும் அறிவிக்கப்படுகிறார். கென் மைல்ஸின் முகத்திலும், ஷெல்பி முகத்திலும் வெற்றிக்கான மகிழ்ச்சியில்லை. அடுத்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் லெ மான்ஸ் பந்தயத்தில் ஃபோர்டு ஜிடி வெற்றி வாகை சூடுகிறது. அதை வைத்து ஃபோர்டு தனது விற்பனையை புதுப்பித்துக்கொண்டது.

ஆனால், அதற்குப் பிறகு ஃபோர்டும், ஃபெராரியும் லெ மான்ஸ் பந்தயத்தில் வெற்றி பெறவே இல்லை என்பதும், தற்போது ஃபோர்டு மீண்டும் தனது விற்பனையில் சவால்களைச் சந்தித்துவருவதும் வேறு கதை. ஃபோர்டு Vs ஃபெராரி படம் இரு நிறுவனங்களுக்கு இடையிலான யுத்தம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், காருக்கும் காரை நேசிக்கும் கென்னுக்கும் இடையிலான உறவும் அழுத்தமாகப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கென் மைல்ஸ் இல்லையென்றால் ஃபெராரியை ஃபோர்டு ஜெயித்திருக்கவே முடியாது. படத்தின் விறுவிறுப்பான பந்தயக் காட்சிகள் பார்வையாளர்களையும் பந்தய வீரர்களாக மாற்றிவிடும் அளவுக்கு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தில் உள்ள கார் பந்தய காட்சிகள், கார் பற்றிய மிக நுணுக்கமான விஷயங்கள் கார் பிரியர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தை தரும். தவிர, இது பிசினஸ் தொடர்பான நுணுக்கங்களையும் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. நட்பு, காதல், குடும்பம், அவமானம், யுத்தம், வெற்றி, தோல்வி, சூது, அரசியல் எனப் பல விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த ‘ஃபோர்டு Vs ஃபெராரி’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x