Published : 15 Dec 2019 11:13 AM
Last Updated : 15 Dec 2019 11:13 AM

விடைபெறும் 2019: தடம்பதித்த வீராங்கனைகள்

பூட்டிய விலங்கு அறுபட்டால் பெண்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இந்திய விளையாட்டு வீராங் கனைகளே சாட்சி. 2019-ல் பல வரலாற்று சாதனைகள் படைத்த வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு:

போராடி வென்றவர்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.யு. சித்ரா, ஆசியத் தடகளப் போட்டியில் 1500 மீட்டர் பிரிவில் மூன்றாம் முறையாகத் தங்கம் வென்று சாதித்தார். பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். சித்ராவுக்கு இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. ஆசியப் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் பட்டியலை இந்தியத் தடகள சம்மேளனம் வெளியிட்டது. அதில் சித்ராவின் பெயர் இல்லை. எதற்கும் துவளாத அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் வழங்கிய நீதி சித்ராவைப் போட்டியில் கலந்துகொள்ள வைத்தது.

சச்சினை வென்ற ஷபாலி

ஹரியாணாவைச் சேர்ந்த பதினைந்து வயதான ஷபாலி வர்மா மிக இளம் வயதில் அரை சதம் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் பதினாறு வயதில் புரிந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ஷபாலி.

மாவட்டத்தின் முதல் பெருமை

புதுக்கோட்டை வட்டாப்பட்டியைச் சேர்ந்த பூவிதா, தேசியக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில் நடைபெற்ற தேசியக் குத்துச்சண்டைப் போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பூவிதா.

போல்ட்டின் சாதனையை முறியடித்த அல்லிசன்

அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெல்லிக்ஸ் உலக தடகளப் போட்டிகளில் ஜாம்பவானாக இருந்த ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தார். தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400 தொடர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தார் அல்லிசன். இதன்மூலம் உலக தடகளப் போட்டியில்12 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் அல்லிசன். ஆனால், உசேன் போல்ட் 11 தங்கப் பதக்கங்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

தடகளத்தின் தங்க மங்கை

ஹிமா தாஸ், தடகளத்தின் தங்க மங்கை. 2019-ல் மட்டும் சர்வதேசத் தடகளப் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 2018-ல் ஆண்டு உலக ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் ஹிமா தாஸ்.

ஒரே தோட்டா இரண்டு தங்கம்

இளவேனில் வாலறிவன், இந்த ஆண்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. சர்வதேச அளவில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். சர்வதேச அளவில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் ராக்கெட்’ விருதை இவர் பெற்றிருக்கிறார்.

உலகப் போட்டியில் ஒருவர்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா பெண்கள் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக சேலம் வீராங்கனை மாரியம்மாள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த இவர், கைத்தறித் தொழிலாளியின் மகள்.

சாம்பியன் பெண்கள்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை 15 வயதான கோரி காஃப் முதல் சுற்றிலேயே வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த சர்வதேசத் தடகளப் போட்டியில் 32 வயதான ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ், தங்கம் வென்றார். குழந்தை பிறப்புக்குப் பிறகு ஷெல்லி கலந்துகொண்ட முதல் போட்டி இது. இதில் 100 மீ. பிரிவு ஓட்டத்தை 10.71 விநாடிகளில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தி, உலகின் மிக வேகமாக ஓடும் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

மாற்றத்தின் வெற்றி

ஸ்லோவாகியா நாட்டில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனிதா ஆண்டோ தங்கம் வென்றார். இப்போட்டியில் வென்றதன்மூலம் தொடர்ந்து ஆறாம் முறையாகத் தங்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

கலக்கிய கபடி அணி

மலேசியாவில் நடைபெற்ற உலகக் கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் தமிழகம் சார்பில் மதுரையைச் சேர்ந்த குருசுந்தரி மட்டுமே இடம்பெற்றிருந்தார். 15 ஆண்டுகளாகக் கபடி ஆடிவரும் குருசுந்தரி கோவை வனத்துறை வனக்கோட்டத்தில் பணிபுரிந்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x