Published : 15 Dec 2019 10:57 AM
Last Updated : 15 Dec 2019 10:57 AM

வாசிப்பை நேசிப்போம்: கதாபாத்திரங்களுடன் பயணிக்கலாம்

கதாபாத்திரங்களுடன் பயணிக்கலாம்

தொடக்கப் பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்டது என் புத்தக வாசிப்பு. அதிகாலையில் விழிப்பதே திண்ணையில் அமர்ந்து தினசரியை வாசிக்கும் அப்பாவின் முகத்தில்தான். நாளிதழ்களுடன் இலவச இணைப்பாக வரும் சிறுவர் இதழ்களில் தொடங்கிய என் வாசிப்பைத் திருக்குறள் பக்கம் திருப்பியவர் அப்பாதான்.

அம்புலிமாமா, காமிக்ஸ், க்ரைம் நாவல், கவிதைகள், குடும்ப நாவல் என்று வயதுக்கேற்றாற்போல் வாசிப்பு நிலை மாறிகொண்டே இருந்தது. இருபது வயதில் அஞ்சல் துறையில் எழுத்தராய்ப் பணியில் சேர்ந்தேன். வேலையில் சேர்ந்த புதிதில் அலுவலக நண்பரிடம் இரவல் வாங்கிப் படித்ததுதான் ‘பொன்னியின் செல்வன்’. ஐந்து பாகங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் எழுத்து நடை, முதல்முறையாக வாசிக்கிறவர்களையும் ராஜராஜ சோழன் காலத்துக்கே அழைத்துச்சென்றுவிடும். அப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிட்டேன். என்னுடைய ‘பேய் வாசிப்பை’ப் பார்த்த நண்பர்கள் ஒரே வாரத்தில் இரண்டு கிலோ குறைந்து விட்டாயே எனக் கிண்டல் செய்தனர்.

வாசிப்புதான் என்னைத் துயரங்களிலிருந்து மீட்டெடுத்தது. அம்மாவின் இழப்பிலிருந்து மீண்டுவரத் துணையாக இருந்தது. கவிதைகள் எழுதவும், சிறுகதைகள் எழுதவும் வித்திட்டது. வாசிப்பின் வழியே வந்தியத்தேவனுடன் குதிரையில் பயணிக்கலாம், வைரமுத்துவின் எமிலியாகவும் கரகாட்டப் பெண்ணாகவும் மாறலாம். அலெக்ஸாண்டராகவும் செங்கிஸ்கானாகவும் அரியணை ஏறலாம்.

ராகுல் சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகம் சமூகம் பற்றிய என் பார்வையை மாற்றியமைத்தது. இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் பேராசிரியர் வி.இரத்தினசாமி. என் வாசித்தலின் அடுத்த நிலைக்கு அவரே காரணம். வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’, நக்கீரனின் ‘கார்ப்பரேட் கோடரி’ ஆகிய புத்தகங்கள் தற்கால சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’, மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆகியவற்றைத் தற்போது வாசித்துவருகிறேன்.

குடும்பம், அலுவலகம் எனப் பரபரப்பாய் நாட்கள் ஓடினாலும் வாசிப்பு ஆர்வம் மட்டும் குறையவேயில்லை. காணொளிகளின் சாகசங்களில் மூழ்கிக் கிடக்கும் என் இரு மகள்களுக்குப் படத்துடன் கூடிய சிறார் கதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
பெண்கள் கல்வி கற்பதால் மட்டுமல்ல; புத்தகங்களை வாசிப்பதாலும் அடுத்த தலைமுறை பண்படும்.

- பி. இந்திராகாந்தி, அருப்புக்கோட்டை.

வாசிக்க உதவிய மூவர்

உறவினர்களிடமிருந்து இரவல் வாங்கிவந்துப் படித்ததுதான் என் புத்தக வாசிப்பின் தொடக்கம். அப்பா சுதேசமித்திரன் நாளிதழை இரவல் வாங்கிவந்துக் கொடுப்பார். உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படித்தேன். திருமணத்துக்குப் பிறகு என் வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்த என் கணவர் மணி, நூலகத்திலிருந்து புத்தகங்களை வாங்கிவருவது வழக்கமானது. இதனால் லக் ஷ்மி, இந்துமதி, சிவசங்கரி போன்றோர் அறிமுகமானார்கள். தொடராக வந்த ‘பொன்னியின் செல்வனை’ப் புத்தகமாக பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன். என் கணவருக்குப் பிறகு என் மகன் புத்தகங்களை வாங்கிக்கொடுக்க, விடாமல் தொடர்ந்தது வாசிப்பு. தொடர்ச்சியான வாசிப்பு சிறுகதைப் போட்டிகளுக்குக் கதைகளை எழுத வைத்தது. வாசிப்பு என்பதை வீட்டிலிருந்தபடியே உலகத்தைக் காணும் கண்ணாடி என்பேன்.
- வனஜாராணி, ஆரோவில்.

தோழி காட்டிய வழி

என் வாசிப்புக்குக் காரணம் என் அம்மா. தொலைக்காட்சி இல்லாத காலத்தில் என் அம்மா படித்த புத்தகங்களை எனக்குக் கதையாகச் சொல்வார். அப்போதிருந்தே சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன். வார இதழ்களில் வரும் கதைகளைப் படிக்க ஆர்வத்துடன் காத்திருப்பேன். கல்லூரி சென்ற பிறகு எனக்குத் தோழியாக அமைந்தவளும் புத்தக வாசிப்பில் ஆர்வமுடையவள். நாங்கள் இருவரும் சேர்ந்து புத்தகங்களைப் பற்றியே பேசுவோம். பொதுவாக வரலாறு, அரசியல் சார்ந்த புத்தகங்களைப் படித்துவந்த எனக்கு என் தோழிதான் ரமணிசந்திரன், உமா பாலகுமார் ஆகியோரின் கதைகளை அறிமுகப்படுத்தினாள். இப்போதைய பயணத்தில் இவர்களுடைய புத்தகங்கள்தாம் கைகளில் உள்ளன. இரண்டு மணி நேர என் கல்லூரிப் பயணத்தில் ‘வேங்கையின் மைந்தன்’ நாவல் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. எவ்வளவு சோர்வு, மனக்கவலை இருந்தாலும் வாசிப்புதான் அவற்றிலிருந்து விடுபட உதவியாக இருக்கிறது.

- இரா.ராஜலட்சுமி, தருமபுரி.

இந்தி ஆசிரியரின் தமிழ் நூலகம்

புத்தகம் எனக்கு எப்போதுமே ஒரு நல்ல தோழமையைக் கொடுத்துவந்துள்ளது. என் அப்பா புத்தகங்களின் மீது தீராக் காதல் கொண்டவர். எனக்கும் வாசிப்பை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். எட்டு வயதில் மூன்று வாடகை நூல் நிலையங்களில் நான் உறுப்பினர். மேலும், தெருமுனைப் பெட்டிக்கடையில் நான் எந்தப் புத்தகம் கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருந்தார் அப்பா. அதுதான் தொடக்கப்புள்ளி. பின் அந்தந்த வயதுக்கேற்றவாறு எனது தேடல் மாறி வந்திருக்கிறது.

எந்தப் பகுதிக்கு வீடு மாறினாலும் முதலில் அங்கு அரசு நூலகம் உள்ளதா என விசாரித்து அதில் உறுப்பினராவது வழக்கம். ஏனென்றால், வாசிப்பை வரமாக நான் நினைத்த காலகட்டம் அது. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை முடிக்காமல் உறங்கியது இல்லை. விடிய விடிய படித்துவிட்டுக் கல்லூரியில் தூங்கி, பேராசிரியரிடம் செல்லத் திட்டு வாங்கியதெல்லாம் தனிக் கதை.
புத்தகங்கள் வாயிலாகத்தான் நான் வெளியுலகைப் பார்க்கத் தொடங்கினேன். அவைதாம் எனக்குப் பொதுவெளியை அறிமுகப்படுத்தின. காலப்போக்கில் புதினங்கள் வாசிப்பது குறைந்து சுய முன்னேற்ற நூல்கள், சுயசரிதைகள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள், தொல்லியல் சார்ந்த நூல்கள், புராணம், ஆன்மிகம், மொழிபெயர்ப்பு என வாசிப்பின் தளம் விரிவடைந்துவிட்டது. இடையே, பல்வேறு பணிகளில் என் வாசிப்புலகம் சுருங்கிப்போய்த் தீவிர வாசிப்பு குறைந்த நிலையில் ‘ஈரோடு வாசல்’ என்ற வாட்ஸ் அப் குழு என் வாசிப்புப் பழக்கத்தை மீட்டுத் தந்தது. தினமும் குறைந்தது 30 பக்கங்களையாவது படிக்காமல் உறங்குவதில்லை. ஷான் கருப்பசாமி எழுதிய ‘பொன்னி’ என்ற புத்தகத்தைப் படித்தேன். தங்கத்தைப் போற்றுபவர், தூற்றுபவர், பதுக்குபவர் என அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. கோலார் தங்கச் சுரங்கத்தின் வரலாற்றை, தங்கம் என்ற உலோகத்தின் பயணத்தைப் பல தரவுகள் கொண்டு ஆய்வுசெய்து, விறுவிறுப்பான நாவலாகக் கட்டமைத்திருக்கிறார்.

வாசிப்பெனும் உன்னத அனுபவத்தை என்னிடம் இந்தி கற்க வரும் குழந்தைகள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் என் வீட்டளவில் சுமார் 1,200 புத்தகங்கள் அடங்கிய ‘அம்மையப்பன் அறிவுப்பூங்கா’ என்கிற கட்டணமில்லா நூலகத்தை இரண்டு ஆண்டுகளாக நடத்திவருகிறேன். பொது நூலகத்தைப் போலவே புத்தகம் எடுக்கும் தேதி, திருப்பிக் கொடுக்கும் தேதி எனக் குழந்தைகளே தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பக்கங்களில் பதிந்து எடுத்துச் செல்வர். மிகவும் பத்திரமாகக் கிழிக்காமல், கசக்காமல் படித்தபின், எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

- முனைவர் வி. அன்புமணி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x