Published : 15 Dec 2019 10:49 AM
Last Updated : 15 Dec 2019 10:49 AM

போகிற போக்கில்: அம்மா போட்டுத்தந்த பாதை

ரேணுகா

ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கும் புடவையைவிட அதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படும் பிளவுஸ்களுக்குத்தான் தற்போது வரவேற்பு அதிகம். பாரம்பரியம், நவீனம் என வித்தியாசமான பிளவுஸ் வடிவமைப்பால் தேசிய அளவில் முன்னணி வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த தேவி முத்துகுமார்.

பொறியியல் பட்டதாரியான இவர் தான் வடிவமைப்பாளராக அறியப்படுவதில்தான் மகிழ்ச்சி என்கிறார். அண்மையில் நடந்த பெங்களூரு, ஃபேஷன் வீக், இந்தியன் ரன்வே வீக் போன்ற ஃபேஷன் ஷோக்களில் தன்னுடைய ‘ரவிக்கை’ நிறுவனம் சார்பாக வடிவமைக்கப்பட்ட பிளவுஸ்களைக் காட்சிப்படுத்திப் பலரது பாராட்டையும் பெற்றார்.

அம்மாவின் ஆதரவு

தேவியின் அம்மா சுந்தரி, சிறந்த தையல் கலைஞர். இதனால், தையல் கலையைப் பள்ளிக் காலத்திலேயே தேவி கற்றுக்கொண்டார். குடும்பத்தில் உள்ள அனைவரும் டாக்டராக இருக்க இவரோ பொறியியல் படிப்பில் சேர்ந்தார். கூடவே பெண்களுக்கான புதிய வடிவமைப்பில் ஆடைகளை விற்பனைசெய்ய சிறிய அளவிலான பொட்டிக்கைத் தொடங்கியுள்ளார். “ஆர்வத்தால் தொடங்கப்படும் இதுபோன்றவை வாழ்க்கைக்கு உதவாது. இவையெல்லாம் சில நாட்கள் மட்டுமே நிலைக்கும் என்பது போன்ற எதிர்ப்புகளோடும் கேள்விகளோடும்தான் என் வேலை தொடங்கியது. வெறும் ஆர்வத்தால் மட்டும் துணிக்கடையை நான் தொடங்க நினைக்கவில்லை. சிறுவயதிலிருந்தே வடிவமைப்பு, வண்ணங்கள் போன்றவற்றின் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகம். அதற்கு என் அம்மா முக்கியக் காரணம். துணிகளை வெட்டி அவர் தைக்கும் அழகைப் பார்க்க அவ்வளவு புத்துணர்வாக இருக்கும். வித்தியாசமான வடிவமைப்புடன் உள்ள துணிகளை வாங்கி என்னுடைய பொட்டிக்கில் விற்பனை செய்வேன். தொடக்கத்தில் தோழிகள், உறவினர்கள்தாம் வாடிக்கையாளராக இருந்தனர்” என்கிறார் தேவி.

‘ரவிக்கை’ தந்த அடையாளம்

திருமணத்துக்குப் பிறகு கணவர் கொடுத்த ஊக்கத்தால் வித்தியாசமான ஆடைகளை இறக்குமதி செய்து ‘விபூஷாஸ்’ என்ற பெயரில் பெண்கள், குழந்தைகளுக்கான விற்பனையகத்தைத் தொடங்கினார். இந்நிலையில்தான் கைவேலைப்பாட்டுடன் கூடிய பிளவுஸ்களை வடிவமைக்கத் தொடங்கியுள்ளார். 2017-ல் ‘ரவிக்கை’ என்ற பெயரில் பிளவுஸ்களை மட்டும் தைத்து விற்பனைசெய்யும் அங்காடியையைத் திறந்தார். ஒரே பிளவுஸை இரண்டு புடவைகளுக்கு அணிந்துகொள்ளும் வகையில் இவர் வடிவமைத்தவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து ஸ்கர்ட், பலாஸோ, லெஹெங்கா போன்றவற்றுக்கு அணிந்துகொள்ளும் வகையிலான நீளமான பிளவுஸ்களை வடிவமைத்தார். வட இந்தியாவில் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு மணிகள், உலோக டிசைன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிளவுஸ்களை வடிவமைத்துவருகிறார்.

அனைவருக்கும் ஏற்றது

“பொதுவாகப் பலரும் டிசைனர் பிளவுஸ்களை, ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட டிசைன்களை மாதிரியாக வைத்துத் தைத்துகொடுப்பார்கள். ஆனால், நாங்கள் ஒவ்வொரு பிளவுஸையும் தனித்த டிசைனில் கைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கிறோம். இதனால்தான் இவற்றின் தொடக்க விலை ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம்வரை இருக்கிறது. இந்தியப் பெண்களின் உடல்வாகுக்கு ஏற்றாற்போல் போன்ற பல அளவுகளில் தைக்கிறோம்” என்கிறார் தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x