Published : 15 Dec 2019 10:41 AM
Last Updated : 15 Dec 2019 10:41 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 36: துரியோதனனை விரட்டிய பெண்கள்

பாரததேவி

அந்தக் காலத்தில் இப்போதுபோல் சினிமா, தொலைக்காட்சி, அலைபேசிகள் இல்லை யென்றாலும் பொழுதுபோக்குகள் நிறைய இருந்தன. ஆறு மாதத்துக்கு ஒருமுறை கழைக்கூத்தாடிகள் ஊருக்குள் சட்டி, பொட்டி, தொட்டில் குழந்தைகளோடு வந்து இறங்கிவிடுவார்கள். அவர்கள் வந்துவிட்டால் சிறுவர்களின் கும்மரிச்சம் தாங்காது. பெண்களும் காலாகாலத்தில் பிள்ளைகளுக்குச் சாப்பாட்டைப் போட்டுவிட்டு, கட்டு வெற்றிலையோடு புறப்பட்டுவிடுவார்கள். இளசுகள் படப்பு மறைவிலும் மரங்களின் மறைவுகளிலும் கழைக் கூத்தாடிகளைப் பார்ப்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

யானை, குதிரையென்று பெரிய பெரிய விலங்குகளைக் கழைக் கூத்தாடிகள் கொண்டுவராவிட்டாலும் சிறுவர்களையும் ஆடு, குரங்கு, நாய் போன்றவற்றை வைத்து அவர்கள் செய்யும் சாகசங்கள் மக்களைப் பிரமிக்கவைக்கும். ஒரு சிறுமி அந்தரத்தில் கயிற்றில் நடப்பதைப் பார்த்து ஊர்க்காரர்களின் அடிவயிற்றில் நெருப்புப் பொறி கிளம்பும். அந்த நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து, “தாயி நீ அப்படியெல்லாம் நடக்க வேண்டாம். நாங்க வீட்டுக்கு ஒரு மரக்கா தவசம் தாரோம். கீழே இறங்கு, கீழே இறங்கு” என்று குடல் பதறத் துடிப்பார்கள். அதன்படி கொடுக்கவும் செய்வார்கள்.

இரவுப் பட்டினி இருக்கக் கூடாது

மூன்று நாளைக்கு இந்த ஊரில் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று ஒருவர் வருவார். அவரோடு தாளம் போட்டுப் பாட்டு பாடவும் கூடவே பேச்சுக்கொடுத்து நடிக்கவுமாக மூன்று பேர் வருவார்கள். பாவம் அவர் இரவு, பகலாக சைக்கிளை ஓட்டிக்கொண்டே சோறு தவிர நீராகாரமாகச் சாப்பாடு, குளியல் என்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டுவார். ஊரில் இருக்கிறவர்களுக்கு வேலை செய்த அலுப்பு இருந்தால்கூட, தூக்கத்துக்காக இமைகள் பொருந்தாது. சுக்குமல்லி காபி, இளநீர், மோர், பானைக்காரம் என்று அடிக்கடி கொண்டுபோய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்து ஒரு ஏழெட்டுப் பேர்வரை பஞ்ச பாண்டவர் கதை படிக்கிறேன் என்று வருவார்கள். அவர்களுக்கு ஒரு வீடு அமர்த்திக்கொடுத்துத் தானியமும் சாப்பாடும் போடுவார்கள்.

இரவு வந்துவிட்டால் போதும். தினமும் சோறு சோறு என்று கேட்டுப் பறக்கும் பிள்ளைகள் சோறுகூடச் சாப்பிடாமல் வந்து மந்தையில் முதல் இடம் பார்த்து உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால், அவர்களின் அம்மாக்கள் விடமாட்டார்கள். காலைப் பட்டினி, மத்தியானப் பட்டினி இருந்து விடலாம். இரவுப் பட்டினி மட்டும் இருக்கக் கூடாதாம். ஒரு நாள் பிள்ளைகளுக்கான வளர்த்தி போய்விடுமாம். அதனால், வேலையோடு வேலையாகப் பிள்ளைகளைக் கூட்டிப்போய் வயிறு நிறையச் சாப்பிட வைத்து அனுப்புவார்கள். நிலா புறப்பட்டு வருகையிலே ஆட்டம் ஆரம்பிக்கும்.

வந்தனம், வந்தனம், வந்தவர்களெல்லாம் குந்தணும், குந்தணும்
நாங்க ஏடு அறியாதவக, எழுதப் படிக்கத் தெரியாதவக
அ, ஆ...ன்னா தெரியாது அதுக்கு அடுத்த எழுத்தும் தெரியாது
பள்ளிக்கூடம் பார்த்ததில்ல பாடங்களைப் படிச்சதில்லை
ஆனாலும், பாண்டவரு கதையப் படிக்கப்போறோம்
பொறுத்துக்கோங்க பொறுத்துக்கோங்க
பிழை இருந்தாப் பொறுத்துக்கோங்க
-என்று ஆரம்பிப்பார்கள்.

ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும் பெண்களில் ஒருத்தி வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே, “ஆமா இங்கே மட்டும் அம்புட்டுப் பேரும் படிச்சி கிளார்க்கா வேலை பார்க்கமாக்கும்” என்று கடுகடுப்பாள். மற்றவர்கள் சிரிப்பார்கள்.

பொரி உருண்டை மாலை

திரை மறைவிலிருந்து ஒருத்தி ஓடிவருவாள். பின்னிசையில் அவளுக்காக மணிகுலுங்கித் தாளம் போடும்.

அந்தா வருது நானூறு வண்டி
நானூறு வண்டியில் நடு வண்டி நம் வண்டி
தங்கம் பதிச்சிருக்கும் தருமர வார வண்டியில
சாய்மானம் போட்டிருக்கும்
நானு தருமர வார வண்டியோரம் தண்ணியில தடமெடுப்பேன்
தருமரோட வழிநடப்பேன்

-என்று இன்னும் ஏராளமான பாட்டும் கூத்துமாக மூன்று மாதம், நான்கு மாதம் பாண்டவர் கதை நடக்கும். இந்த நான்கு மாதங்களும் ஊர் மக்கள் சலிக்காமல் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். இரவு சாமத்தைத் தாண்டிய பிறகு வேலை பார்த்தாலும்கூட மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கான உற்சாகம் மக்களிடம் இருந்தது. மறுநாள் காடுகளில், வயல்களில் எல்லாம் இதே பேச்சுத்தான்.

பாஞ்சாலியின் சேலையைத் துரியோதனன் இழுக்கையில் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாலைந்து பொம்பளைக, “ஏலே எடுவட்டப் பயலே. உன்ன வெளக்கமாத்தால அடிச்சி இந்த ஊரைவிட்டு விரட்டுனாத் தாண்டா என் மனசு ஆறும்” என்று ஆட்டத்துக்குள் கையில் விளக்குமாற்றோடு நுழைய, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் ஆண்களுக்கு நாக்குத் தள்ளிவிட்டது. ஆட்டக்காரர்களிடம் அந்தக் காட்சியே வேண்டாமென்று சொல்லி நிறுத்திவைத்த பிறகுதான் பெண்கள் அடங்கினார்கள். அதன் பிறகு முறுக்கு மாலை, அச்சுவெல்ல மாலை, பொரி உருண்டை மாலை ஆகியவற்றை ஆட்டக்காரர்களின் கழுத்தில் போட்டுச் சந்தோஷப்பட்டார்கள். அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரின் ஈரம், நிலா வெளிச்சத்தில் பளபளத்துக்கொண்டிருக்கும். இப்போது உள்ள தொலைக்காட்சி நாடகம்போல் யாரும் யாரையும் கடத்தவில்லை. தரையில் எண்ணெய்யை ஊற்றி யாரையும் வழுக்கி விழவைக்கவில்லை. அலைபேசியில் படம் எடுத்துப் பணம் பறிக்கவில்லை.

தை மாதம் முடிந்துவிட்டால் வயல் வேலை, பிஞ்சை வேலை எல்லாம் ஓரளவு முடிந்த மாதிரிதான்.

களிக்குச் சுண்டைக்காய் வெஞ்ஞனம்

கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிடும். கிணற்றுக் கமலைக் குழியிலிருந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தால் தரை மண் தெளிவாகத் தெரியும். கடைசிப் படியில் உட்கார்ந்திருக்கும் தவளைகள் நம் தலையைப் பார்த்துவிட்டுத் தண்ணீருக்குள் குதித்து ஓடும். பிஞ்சைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று தோட்டம் போட்டிருப்பார்கள். இந்த வெள்ளாமையைப் பார்க்கையில் தரிசுப் பெண்ணுக்குப் பச்சைக் கரையிட்ட சேலை உடுத்தியது போலிருக்கும்.

இப்படி வேலை குறைந்த நேரத்தில் பெண்கள் கூரை வேயவும் மலையில் விளைந்திருக்கும் சுண்டைக்காயைப் பிடுங்கி விற்பதற்காகவும் வற்றல் போடுவதற்காகவும் அதிகாலையிலேயே புறப்பட்டுவிடுவார்கள். அப்படிப் போகும்போது களியைக் கிண்டி ஒரு பொட்டணமாகக் கொண்டு போவார்கள். அதற்கு வெஞ்ஞனம் மலையிலிருக்கும் சுண்டைக்காய்தான். பச்சைச் சுண்டைக் காயைப் பிடுங்கி ஒரு உப்புக்கல்லைத் தொட்டுக்கொண்டு, களியைப் புட்டுச் சாப்பிடுவார்கள்.

மயில அடிக்காதீக, குயில அடிக்காதீக

மலைகளிலும் மலையைச் சுற்றியிருக்கும் காடுகளிலும் மயிலும் குயிலும் மற்ற பறவைகளின் கெச்செட்டம் தாங்க முடியாது. அதிலும் மயில்கள் எங்கு பார்த்தாலும் வானவில்லாகத் தோகையை விரித்து ஆட்டம் போட, அதைச் சுற்றி நாலைந்து பெண் மயில்கள் தங்கள் கூம்பிய தோகைகளோடு வட்டமடித்துக் கொண்டிருக்கும். அங்கேயிருக்கும் அடர்ந்த புதர்களின் மறைவில் ஐந்து, ஏழு என்று மயிலின் முட்டைகள் மறைந்திருக்கும். கோழி முட்டையோடு இணைத்துப் பார்த்தால் மூன்று முட்டைகள் அளவுக்குப் பெரிதாக இருக்கும். காடை முட்டை, கதுவாலி முட்டையை எல்லாம் எடுத்துப் பொரித்துத் தின்பவர்கள், இந்த மயிலு முட்டையை மட்டும் எடுக்கவும் மாட்டார்கள்; பொரிக்கவும் மாட்டார்கள். மயில் முருகனுக்கு உரிய வாகனம். அதனால், மலைக்குத் தரகு அறுக்கப் போகிறவர்கள் இப்படிச் சொல்வார்கள்:

மயில அடிக்காதீக
மயிலு முட்டைய எடுக்காதீக
மயிலு அழும் கண்ணீரு உங்க மக்களைத்தேன் சேர்ந்தடையும்
குயில அடிக்காதீக
குயிலு முட்டைய எடுக்காதீக
குயிலு விடும் கண்ணீரு உங்க குழந்தைகளைத்தேன் சேர்ந்தடையும்

-என்று லேசான விம்மலோடு ஒப்பாரியாகப் பாட யாருமே மயிலு முட்டைய எடுக்க மாட்டார்கள். அதற்குப் பதில் தரிசு முழுக்கச் சிதறிக்கிடக்கும் மயில் தோகையைப் பெறக்கி தரகு மேல் வைத்துக் கட்டிக்கொண்டு வருவார்கள். சங்குத் தாத்தா அவற்றை விசிறிகளாக அழகாகக் கட்டிக்கொடுப்பார். அதனால், வீட்டுக்கு ஒரு மயில் விசிறி இருக்கும். ஆனால், யாருக்கும் அதை வீசத்தான் நேரம் இருக்காது.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x