Published : 15 Dec 2019 10:31 AM
Last Updated : 15 Dec 2019 10:31 AM

நலமும் நமதே:  உணவும் உயிரும்

யுகன்

ஈருயிர் ஓருடலில் தங்கும் பருவம் ஒரு பெண் கர்ப்பிணியாகும்போது மட்டுமே ஏற்படும். இந்த நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவைக் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியது சேய்க்கும் தாய்க்கும் இன்றியமையாதது. இதன் அவசியத்தை உணர்ந்தே போரூர் ரோட்டரி சங்கம் ‘உணவும் உயிரும்’ திட்டத்தை 2017 ஜூலை 18 அன்று தொடங்கியது. மாவட்ட ஆளுநர் ஆர்.சீனிவாசன், துணை ஆளுநர் ராம்துரி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் சின்ன போரூர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் 100 முதல் 150 கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

உதவிக்கு வழிவகுக்கும் விசேஷங்கள்

ரோட்டரியின் 3,232 மாவட்டங்களில் உள்ள ரோட்டரி கிளப் உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் தங்களின் சேவையாகக் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கி அனைவரது அன்பையும் பெற்று மகிழ்கின்றனர். வாரத்துக்குச் சராசரியாய் 100 கர்ப்பிணிகள் என்ற இலக்கை நோக்கி இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டுவருகிறது.

பிரத்யேகமாகத் தயாராகும் உணவு

‘உணவும் உயிரும்’ திட்டத்தில் பங்கு பெற ஆறாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பேரீச்சை, முட்டை, காய்கறிகள் கலந்த சாதம், பொரியல், சாம்பார் சாதம் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் தரமான உணவு தயாரிக்கப்படுகிறது. இந்தச் சேவை தொடர்ந்து மூன்றாம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்துவருகிறது. இதுவரை இத்திட்டத்தின்மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். அண்மையில் இந்தத் திட்டத்தின் 150-ம் வாரத்தைக் கொண்டாடும் வகையில் 150 கர்ப்பிணிகளுக்கு பழங்கள், இனிப்பு, புடவை, வளையல் அடங்கிய சீர்வரிசைத் தட்டுகளையும் வழங்கியிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x