Published : 14 Dec 2019 02:18 PM
Last Updated : 14 Dec 2019 02:18 PM

வேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்! வியக்கவைக்கும் வித்தியாச உழவர்

கட்டுரை, படங்கள்: கா.சு.வேலாயுதன்

இலை என்றால் சருகாக வேண்டியதுதான் என்பது அறிவியல். ஆனால், இலையையே விதையாக்கித் துளிரவைத்து ஒரு நாற்றுப்பண்ணையை உருவாக்கி ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் ஓர் உழவர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் வெள்ளிப்பாளையம் பிரிவு. இங்கே ‘இலை நர்சரி’ என்று கேட்டாலே ‘ஈடன் கார்டன்’ என்ற பெயர் பொறித்த அந்த பண்ணை வீட்டை மக்கள் கைகாட்டிவிடுகிறார்கள். அங்கே சிறியது முதல் பெரியதுவரை நிறைய நாற்றுப் பைகள். அவற்றில் நீட்டிக்கொண்டிருந்தவை இலைகள் மட்டுமே. ‘இது எப்படிச் செடியாகும்?’. ஒரு பையைப் பிரித்து மண்ணை உதிர்த்தால் சுருண்டு நீளும் வேர்கள், கூடவே சில இலைத் தளிர்கள். ‘‘இது 24 நாள் நாற்று. இதுவே ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆகியிருந்தால் செடிபோல் ஆகிவிடும்!” எனப் பக்கத்திலிருந்த பெரிய நாற்றுச் செடிகளை காட்டுகிறார் ராஜரத்தினம்.

அடுத்தடுத்துப் பரிசோதனைகள்

‘‘எங்களுடையது விவசாயக் குடும்பம். நான் ஸ்கூல் படிக்கறப்ப, எங்ககிட்ட 40 ஏக்கர் இருந்துச்சு. அதனால படிச்சுட்டு வேலைக்குப் போறதுங்கிற நினைப்பே எனக்கு வர்ல. கோவை சி.ஐ.டி. காலேஜ்ல பி.எஸ்சி. அப்ளைடு சயின்ஸ் படிக்கறப்ப, அதைப் பாதியில விட்டுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன்.

அப்பவே மரத்துக்கு 144 பப்பாளிக வர்ற மாதிரி நாற்று தேர்ந்தெடுத்து நட்டேன். அதுல நல்ல லாபம். தமிழ்நாட்டுலயே அது பெரிய சாதனை. அதுல நிறைய உழவர்கள் தேடி வந்தாங்க. அவங்களுக்கு நாற்று உற்பத்தி செஞ்சு கொடுத்தேன். அதுல சுமார் 500 உழவர்கள் பப்பாளி விவசாயத்துக்கு மாறினாங்க. அடுத்தது அதே முறையில நோனி மரம். அதுலயும் நல்ல அறுவடை. அதுக்கும் நிறைய உழவர்கள் தேடி வந்தாங்க.

1994-ம் வருஷம் நாற்றுப்பண்ணை போட்டேன். அடுத்ததா மலர் விவசாயத்துக்குப் போனேன். முல்லை, மல்லி, அரளின்னு எந்த மலர்னாலும் அதுலயும் ஒரு கொத்துல 10 மொக்கு, 12 மொக்கு இருக்கிற மாதிரி செடிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்தே நாற்றுக்களை உருவாக்கினேன். அந்த நாற்றுக்களை எந்த உழவர் தோட்டத்துல எடுத்தேனோ, அங்கேயே அதை நட்டு சோதனை செஞ்சேன்.

அதுதான் பத்து வருஷத்துல நர்சரி ஃபார்ம்ல இருந்து இன்னைக்கு டி.என்.பி.எல். ஆர்டர் 5 லட்சம் யூகலிப்டஸ் நற்று, ஐ.சி.ஏ.ஆர். புராஜக்ட்ல 60 லட்சம் மலைவேம்பு நாற்று, பாரஸ்ட் காலேஜின் நேஷனல் பேம்பூ மெஷின் கண்ட்ரோல்ங்கிற அரசுத் திட்டத்துக்கு ஒரு லட்சம் மூங்கில் நாற்று உற்பத்தி செஞ்சு கொடுக்கிற அளவு வளர வச்சிருக்கு. இப்ப இங்கே 300 கிராமங்களைச் சேர்ந்த 5,000 உழவர்கள் நாற்று வாங்கவும் ஆலோசனை கேட்கவும் வந்து போறாங்க!’’ என்று விவரிக்கிறார்.

புதிய நாற்று முறை

‘‘உழவர்களுக்காக 2010-ல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் டிகிரி கோர்ஸ் ஒண்ணு ஆரம்பிச்சுது. அதுல பி.எப்.டெக்., எம்.எப்.டெக். (பண்ணைத் தொழில்நுட்பம்) படிச்சேன். அப்ப மேலைநாடுகள்ல பரவியிருக்கிற திசு வளர்ப்பு முறையும் சொல்லிக் கொடுத்தாங்க.

திசு வளர்ப்பு விவசாயம் கோடிக்கணக்குல செலவு பிடிக்கும். அது மட்டுமல்ல, அதைச் செய்யும்போது நிறைய ரசாயன மருந்து பயன்படுத்தணும். சூழல் கெடும். நம்ம செய்யறது இயற்கை விவசாயம். அதனால இதையே வேறு மாதிரி யோசிச்சேன். திசுவிலிருந்து கொடி வரும்போது செடியில், வேறு எந்தப் பாகம் அதிகமா இருக்குன்னு யோசிச்சேன். அது இலையா இருக்கவே, அதை நட்டுப் பார்த்தா என்னன்னு தோணுச்சு.

முதன்முதலா குண்டுமல்லி இலைகளை வெச்சு பரிசோதனை செஞ்சேன். இந்த முறையில இலை வேர் விடற வரைக்கும் காயக் கூடாது. அதுக்குக் கூடாரம் போட்டு, அதுக்கான வெப்பநிலை எல்லாம் தக்கவச்சேன். விதை, கொம்புலன்னா தண்டில் இலை துளிர்க்கும். இலைய நட்டா அதுலயே இலை எங்கிருந்து துளிர்க்கும்ன்னு யோசனை.
எதிர்பாராத விதமா வேரோட காம்புலயே துளிர் வந்துச்சு.

அதுதான் எங்களுக்கு முதல் தாவர தேவதையா பட்டுச்சு. கண்ணுல ஒத்திக்கிட்டோம். ஓரளவுக்கு நுட்பம் தெரிஞ்சிடுச்சு. இது 2010-ல் நடந்தது. அதை வச்சு தரப்படுத்தி, மறுபடி செய்ய 2 வருஷம் ஆச்சு. அப்புறம் இதுல நாற்றுக்கள் வெளியே கொடுக்கத் தொடங்கினோம். கொய்யா, நாவல், நோனி, வெற்றிலை, காக்கடா, கனகாம்பரம், செம்பருத்தி, நட்சத்திர மல்லி... இப்படி நிறைய. இதிலும் இருப்பதில் சிறந்ததை எடுத்து நாற்று உருவாக்கற முறையைத்தான் செய்யறோம்.

இலவசப் பயிற்சி

ஒரு கொத்தில் 15 மொக்கு உள்ள செடியில் உள்ள இலையை எடுத்து நட்டால், அதில் உருவாகும் நாற்றில் 15 மொக்கே கிடைக்குதுங்கிறதுதான் இதுல உள்ள அதிசயமே. இந்தக் கண்டுபிடிப்புக்கு எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயங்கும் டைரக்டரேட் ஆப் அக்ரி பிஸினஸ் டெவலப்மெண்ட் வழிகாட்டுதலில் ரூ. 6.5 லட்சம் ஊக்கத்தொகை கிடைச்சிருக்கு.

அதோட இதுதான் இந்தியாவில் முதல்னு அங்கீகாரமும் கொடுத்திருக்காங்க!’’ நட்ட பின்பு இலை வேர்விட 4-5 வார காலம் ஆகிறது. அடுத்து துளிர்விட மறுபடி 4-5 வாரம் பிடிக்கிறது. இதற்காக இரண்டு வகை நிழற் கூடாரத்தில் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைக்கப்படுகிறது.

இந்த நாற்று உருவாக்கும் முறையைப் பற்றி உழவர்களுக்கும், மாணவ - மாணவிகளுக்கும் இலவசமாகவே இவர் பயிற்சியும் தருகிறார். இதுவரை 2000-க்கும் மேற்பட்ட உழவர்கள் பயிற்சிபெற்றுள்ளனர். தன் வேளாண் சேவைக்காக உள்ளூர், மாநில, தேசிய அளவில் நிறையப் பாராட்டிதழ்கள், பரிசுகளைப் பெற்றுள்ள ராஜரத்தினம் ‘‘இதற்காகப் புதிய ஆராய்ச்சி நிலையம் ஆரம்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்த நுட்பத்தைக் கொண்டு செல்லணும்!’’ என்கிறார் பெருத்த நம்பிக்கையுடன்.
ராஜரத்தினம் தொடர்புக்கு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x