Published : 14 Dec 2019 02:10 PM
Last Updated : 14 Dec 2019 02:10 PM

கட்டுமான ஒப்பந்தம் நன்மை செய்யுமா?

சீதாராமன்

வாடிக்கையாளார்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வது இரண்டாண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் கட்டுநர்கள் வாக்குறுதி மீறும்போது அதற்கு எதிராக வாடிக்கையாளர்களால் புகார் அளிக்க முடியும். இம்மாதிரியான சில நல்ல அம்சங்கள் கட்டுமான ஒப்பந்தத்தில் உண்டு.

இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும். வீட்டைச் சுற்றி உள்ள நான்கு எல்லைகள், வீடு அமைய உள்ள அளவு, வீடு எங்கு அமைந்துள்ளது, எந்தப் பதிவு மாவட்டத்தின் கீழ் வருகிறது போன்ற ஷரத்துகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும்.

எந்த உள்ளாட்சி அமைப்பில் இருந்து கட்டிட அனுமதி பெறப்பட்டது, அதற்கான அனுமதி எண், திட்டத்துக்கான அங்கீகாரம், அது வழங்கப்பட்ட நாள், கட்டப்படும் கட்டிடம் எந்தப் பெயரால் அழைக்கப்படும் போன்ற விவரங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறும். வீட்டை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது முக்கியமான அம்சம்.

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் புகைப்படமும், வீட்டை வாங்குபவரின் புகைப்படமும் கைரேகையும் இடம்பெறும். வீட்டின் மொத்த மதிப்பும், தரப்பட்ட முன்பணம், எந்தெந்த நிலைகளில் மீதிப் பணத்தைத் தர வேண்டும் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவையெல்லாம் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்.

வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு இருந்தால்தான் கட்டுமானத் துறையில் முதலீடு பெருகும். அந்த வகையில் இந்தக் கட்டுமான ஒப்பந்தம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கட்டுமானத் துறைக்கும் சாதகமானதுதான்.

மேலும் கட்டுமான ஒப்பந்தம் கட்டாயப் பதிவின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வாடிக்கையாளார்கள் பாதுகாப்பு உறுதியிருந்தால்தான் வீடு வாங்க முன்வருவார்கள். இந்த ஒப்பந்தம் தரும் பாதுகாப்பின் மூலம் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும் என அத்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தக் கட்டுமான ஒப்பந்தப் பதிவால் பதிவுக் கட்டணம் சுமையாக உயர்ந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. கட்டுமானத்துக்கு ஆகும் செலவில் ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வையாக வசூலிக்கப்படும். இது ஒரு புதிய சிக்கலைக் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கட்டுமான ஒப்பந்தப் பதிவால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்பது உண்மைதான். ஆனால், ஏற்கெனவே உள்ள சேவை வரி, பத்திரப்பதிவு எனப் பல கட்டணங்கள் இருக்கும்போது இந்தப் புதிய சட்டம் மேலும் சுமையாக வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர் வீட்டைப் பதிவுசெய்வதற்கு ரூ.650 (சதுர அடிக்கு) ஆகிறது. பத்து ஆண்டுக்கு முன்பு 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது.

வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் எல்லாம் அம்சத்துடன் இந்த ஒப்பந்தம் அவசியமானதுதான் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. சரியான காலக்கெடுவில் கட்டுமான நிறுவனங்கள் வீட்டைக் கையளிக்க இந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x