Published : 14 Dec 2019 02:06 PM
Last Updated : 14 Dec 2019 02:06 PM

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜல்லி

அனில்

கட்டுமானப் பொருட்களைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் மாற்று கண்டுபிடிக்கப்பட்டு வரும் காலம் இது. ஏனெனில் கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவருகிறது. அதற்குத் தகுந்தாற்போல் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில்லை. கட்டுமானப் பொருட்களில் பல இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடியவை. அதனால் அதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது. அப்படியான கட்டுமானப் பொருட்களில் ஒன்றான ஜல்லிக்கு மாற்றாக இப்போது செயற்கை ஜல்லி சந்தையில் கிடைக்கிறது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பலவிதமான கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு இந்த வகை ஜல்லி தயாரிக்கப்படுகிறது. இரும்புத் தொழிற்சாலைகளில் உண்டாகும் இரும்புக் கழிவுகளின் துகள்களையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம்.

மேலும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாது கடற்கரைக் களிமண்ணையும் இதன் பகுதிப் பொருளாகக் கொள்ளலாம். இத்துடன் சோடியம் கலந்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூடேற்ற வேண்டும்.

பொதுவாக ஜல்லி இயற்கையான முறையில் இருந்து கிடைக்கக்கூடியது. அதை வெட்டித் துண்டாக்கி நாம் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறோம். இம்மாதிரியான இயற்கை ஜல்லி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு இதைக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாட்டுடன் இந்தப் பயணச் செலவும் சேர்ந்து மிக அதிக செலவைக் கொண்டுவந்துவிடும்.

உதாரணமாகத் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு மணல் குவாரி இல்லை. திருச்சியில் இருந்துதான் அதிகமாக ஆற்று மணல் கட்டுமானத்துக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆற்று மணலின் விலை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. இதைச் சமாளிக்க திருநெல்வேலிப் பகுதிகள் எம்-சாண்ட் என அழைக்கப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் வெளிப்பூச்சுக்கு மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது ஆரோக்கியமான மாற்றம். இதுபோல் செயற்கை ஜல்லியையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். செலவு ஒரு பக்கம் குறைவானாலும் அதைவிடச் சுற்றுச்சூழலுக்கும் செயற்கை ஜல்லி ஏற்றதாகும். மேலும் செயற்கை ஜல்லி எடை குறைவானது.

உறிஞ்சப்படும் தன்மையும் அதிகம். சிமெண்ட்டுடன் உடனே பிணைந்து கட்டுமானத்தின் உறுதியைக் கூட்டும். தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. பலவிதப் பயன்பாடு உள்ள இந்தக் கட்டுமானப் பொருள் விரைவில் பரவலான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x